வேறுபாடுகள் நம்மை வளப்படுத்தட்டும்

ஒரு மிகச்சிறந்த தலைவர் என்பவர் மக்களை வழிநடத்துவதற்கு முன்னால், தனக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னோடு கூட வைத்திருக்க வேண்டும். போதனைகள் தலைவரோடு முடிந்து விடக்கூடாது. தொடரப்பட வேண்டும். இயேசு தனக்குப்பிறகும் தனது பணி தொடர வேண்டும் என நினைக்கிறார். அது வெறும் பெயரை நிலைநாட்டுவதற்கானது அல்ல. மாறாக, மக்கள் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. மீட்புப்பணி தொடர்ந்தாற்றப்பட வேண்டும் என விரும்புகிறார். எனவே தனக்கான சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

இயேசு தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தது சாதாரணமானவர்களையும், வேறுபட்ட எண்ணம் உள்ளவர்களையும் என்கிற உண்மை பலரையும் வியக்க வைக்கலாம். இந்த சாதாரணமானவர்களால் கருத்து வேறுபாடு உள்ளவர்களால் என்ன செய்து விட முடியும், என்ற எண்ணமும் உள்ளத்தில் எழும். இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவருமே, வித்தியாசமான குணம்கொண்டவர்கள். ஒருவரின் இயல்பு மற்றவரின் இயல்புக்கு எதிரான பண்பு கொண்டதாக இருந்தது. உதாரணமாக, மத்தேயு வரிதண்டுபவர். நாட்டை உரோமையர்களுக்கு விற்றுவிட்டு, சுயநலத்திற்காக அவர்களோடு உறவாடுகிறவர்கள் என்று யூத சமுதாயத்தினால் முத்திரைக்குத்தப்பட்டவர். அதேபோல், தீவிரவாதி என அறியப்பட்ட சீமோன். நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயாராக இருக்கிற தீவிரவாதி. கடவுள் மட்டும்தான் எங்களுடைய அரசர், வேறு யாரும் அரசராக இருக்க முடியாது என்ற சித்தாந்தத்தில் ஊறியவர். மத்தேயுவைப்பார்க்க, நிச்சயம் சீமோனுக்கு கடுமையான கோபம் வந்திருக்கும். ஆனால், இரண்டு பேருமே இயேசுவை அன்பு செய்கிறார்கள்.

நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், இயேசுவின் அன்பு நம்மை இணைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். வேறுபாடுகள் நமக்குள்ளாக பிளவினை ஏற்படுத்தக்கூடாது. அது நம்மை இணைக்கின்ற பாலமாக இருக்க வேண்டும். வேறுபாடுகளை ஒன்றிணைக்கச்செய்து, அதனை வளப்படுத்துவதுதான் நம் அனைவரின் கடமையாகும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: