“அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய்”

நம்முடைய வாழ்க்கை பலவித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் பல சமயங்களில் பலியாகிவிடுகிறது. அச்சமும் பெருமகிழ்ச்சி இரு வேறு துருவங்களாக இருந்து நம்மை ஆட்டிப்படைக்கின்றன. அதிலும் அச்சம் நம் வாழ்வின் பெரும் பகுதியைத் தன்னகத்தே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அச்சம் என்னும் இந்த அநியாய ஆக்கிரமிப்பு நம்மில் பலருடைய வாழ்வைச் சீரழிப்பதையும் பார்க்கிறோம்.

உயிர்த்த இயேசுவைக் கண்டவர்களும் விசுவசிப்பவர்களும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எல்லா எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வென்றவரில் அரவணைப்பில், ஆதரவில் வாழும் நாம், யாருக்கு எங்கே எதற்கு அஞ்சவேண்டும். “நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை”( உரோ 13 :3) நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாழ வலியுறுத்துகிறார் பேதுரு.(1 பேதுரு 3 :6) “யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்”.(1 பேதுரு 3 :14) அடுக்கி வரும் துன்பத்தைக்கண்டு சிலருக்குப் பயம். “துன்பத்தைப்பற்றி அஞ்சாதே”.(திருவெளி 2 :10) உடலில் ஒரு நோய் வந்தால் ஒப்பாரி வைப்போரும் உண்டு. “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்” (மத் 10 :28) நம்மில் இன்னும் சிலர் இவ்வாறு எண்ணுவதுண்டு, ‘ ஐயோ நான் மட்டும்தானே இப்படி வேதனைப்படுகிறேன் என்று. “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்”(லூ}க் 12 :32)

உயிர்த்த இயேசு நம் அச்சத்தையெல்லாம் பெருமகிழ்ச்சியாக மாற்ற வல்லவர்.தன்வாழ்நாளெல்லாம் மனித வாழ்விலிருந்து அச்சத்தைப் போக்குவதையே முழுமூச்சாகக்கொண்டு போதித்தவர், அதற்காகவே இறந்து உயிர்த்துள்ளார். ஆகவே அச்சம் அகற்றி பேருவகை கொள்வோம். பெருமகிழ்வோடு துணிந்து வாழ்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

~அருட்திரு ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.