அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்!

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43) உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது.

  1. துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார்.
  2. அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் “போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்?” என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள்.
  3. ஊக்கம்: இயேசுவோ “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார்.
  4. அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன.
  5. துணிவான நம்பிக்கை: “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள்.
  6. நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்பு
  7. வியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் “மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்”.

இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும், இயேசுமீது யாயிர் கொண்டிருந்த நம்பிக்யையும். அச்சம், கலக்கம், துயரம், அழுகை, ஓலம், புலம்பல், அமளி… போன்றவை இறைநம்பிக்கையின் எதிரிகள். இவை இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்காது, எனவேதான், இயேசு, “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என அறிவுறுத்துகிறார்.

நமது வாழ்க்கையில் எவ்வளவு கொந்தளிப்புகள் வந்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடாமல், நம்பிக்கையுடன் வாழ்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கின்ற அச்சம், அவமானம், கலக்கம், குழப்பம், துயரம், சாவு போன்ற வேளைகளில் நம்பிக்கை இழந்துவிடாமல், உம்மைப் பற்றிக்கொள்ளும் அருள்தாரும், ஆமென்.

~ அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.