அடுத்தவர் உணர்வுகளை சரியாகப்புரிந்துகொள்வோம்

‘நான் போகும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று இயேசு சொல்கிறார். இயேசு சொன்னதின் பொருள்: மகிமையோடு அவர் தந்தையாகிய கடவுளிடம் திரும்புகிற இடத்தை. ஆனால், அவருடைய எதிரிகள் புரிந்துகொண்டது: இயேசு நரகத்திற்கு போகப்போகிறார் என்று. ஏனெனில் தற்கொலை செய்வோர் அனைவரும் நரகத்திற்குச்செல்வார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே, இயேசு தற்கொலை செய்துகொண்டு நரகத்திற்குப்போகப்போகிறார். நம்மால் அங்கே செல்ல முடியாது என்பதை இயேசு சொல்வதாக, யூதர்கள் நினைத்தனர். இயேசு சொன்னது ஒரே செய்திதான். ஆனால், அது புரிந்துகொள்ளப்பட்ட விதம் வேறு, வேறானது. இங்கே புரிதலில் தவறு இருக்கிறது. இந்த நற்செய்திப்பகுதியில், யூதர்களின் தவறான புரிதலுக்கு காரணம் என்ன? எது சரியான புரிதல்? என்பதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

ஒரு புத்தகம் வாசிக்கிறோம். அந்தப்புத்தகத்தை சரியாகப்புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த புத்தக ஆசிரியரின் எண்ண ஓட்டத்தோடு இணைந்து நாம் வாசிக்க வேண்டும். நமது எண்ண ஓட்டத்தில் நாம் வாசித்தால், அதனை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொள்ள முடியாதது மட்டுமல்ல, தவறாகப் புரிந்து கொள்ள ஏராளமான வாய்ப்பு இருக்கிறது. ஒருவரைப்புரிந்துகொள்ள அவராகவே மாற வேண்டும். யூதர்கள் இயேசுவைப் புரிந்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் இயேசுவின் மனநிலையைப் பெற்றிருக்க வேண்டும். இயேசுவின் உணர்வுகளோடு கலந்திருக்க வேண்டும். இயேசுவாக அவர்கள் மாறியிருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால், அவர் சொன்னதின் உண்மையான பொருளை அவர்களால் அறிந்திருக்க முடியும். ஆனால், அப்படி மாறுவதற்கு யூதர்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தங்களுடைய எண்ணத்திலே வாழ்ந்து கொண்டு, தங்களுடைய உணர்வுகளையே அவர்கள் பிரதிபலிப்பதன் வெளிப்பாடுதான், இயேசு சொன்னதின் உண்மையான பொருளை அறிந்துகொள்ள முடியாமை மற்றும் தவறாகப் புரிந்துகொண்டமை. இப்படிப்பட்ட சரியான புர்pதல் இல்லாமை, பகைமைக்கு தூண்டுகோலாய் இருக்கிறது.

ஏழை, எளியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள அவர்களின் உணர்வுகள் நமக்குள்ளாக புகுத்தப்பட முயற்சி எடுக்க வேண்டும். இயேசு ஏழைகளின் சார்பில், ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நின்றார் என்றால், அதற்கு காரணம் அவர் ஏழைகளின் மனநிiயைப் பெற்றிருந்தார். ஏழைகளில் ஒருவராக மாறியிருந்தார். ஏழையாகவே வாழ்ந்தார். சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்குப் பணியாற்ற விரும்பினால், அவர்களின் எண்ண ஓட்டத்தை நமக்குள்ளாக உள்வாங்க வேண்டும். அத்தகையதொரு அருளுக்காக மன்றாடுவோம்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.