அலங்கரிப்போம்! அழகாக்குவோம்!

மாற்கு 7:1-8,14-15,21-23

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 22ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

பொதுக்காலம் 22ம் ஞாயிறு மிக சிறப்பான அழைப்பைக் கொடுக்கிறது. உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் உடனடியாக தூய்மைப்படுத்த, அலங்கரிக்க அவரச அழைப்பு கொடுக்கின்றது. வாருங்கள் சுத்தமாக்குவோம்.

1. வெளிப்புறத்தை அலங்கரிபோம்
‘நாட்டில் தூய்மையான நகரங்கள்’ குறித்து 434 நகரங்களில் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாமை, திடக்கழிவுகள் மேலாண்மைக்கு (சாலைகளைச் சுத்தப்படுத்தல், குப்பை சேகரித்தல், அதை வேறு இடத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல் உட்பட) 45% மதிப்பெண் வழங்கப்பட்டது.

நகரின் தூய்மையை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு 25% மதிப்பெண் மற்றும் குடிமக்களின் கருத்துகளுக்கு 30% மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுக்க 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நகரம் குறித்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் மிக தூய்மையானது என்று முதலிடம் பிடித்துள்ளது. இதே மாநிலத்தின் போபால் நகரம் 2-வது இடம்பெற்றுள்ளது. தூய்மை நகரங்கள் தர வரிசையில் ஆந்திராவின் விசாகப்பட்டினம் 3-வது இடத்தையும், குஜராத்தின் சூரத் நகரம் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழக நகரங்களைப் பொருத்த வரை மதுரை 57-வது இடத்தையும், திருநெல்வேலி-193, தஞ்சாவூர்-198, தூத்துக்குடி-223, சென்னை-235, இடத்தையும் பிடித்துள்ளன.

சுத்தம் சுகம் தரும் என்பதை நாம் யாவரும் அறிந்ததாகும். அதனால் சுகமாக வாழ வேண்டுமாயின் நாம் அனைவரும் சுத்தத்தை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். சுத்தம் இல்லாவிடின் சுகம் கிடைத்துவிடுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நாம் வாழும் வீடு, சுற்றுப்புறம் என்பன எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லாவிடின் நமது சுற்றுப்புறம் மாசடைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் நுண்கிருமிகள் பெருக்கெடுத்து பல நோய்கள் உண்டாகும். இதுகுறித்து நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். நாம் சுகமாக வாழ உணவு, சூழல், நீர், உடை அனைத்தும் தூயனவாக இருப்பது மிக முக்கியமாகும்.
நாம் நம்மை நோயிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். அதற்காக நாம் எவ்வகையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

தினமும் காலையில் குளிப்பது, உண்பதற்கு முன் கைகளை கழுவுவது, நகங்களை வெட்டுவது, இவையெல்லாம் சுத்தத்துக்கு வழிகாட்டும் நற்பழக்கங்களாகும். கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக்கட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இவையெல்லாம் சுத்தத்துக்கும் சுகத்துக்கும் வழிசொல்லும் பழமொழிகளாகும். ஆகையால் குறைவில்லாத செல்வமான நோயில்லாத வாழ்வை கழிப்பதற்கு நாம் அனைவரும் சுத்தத்தை பேண வேண்டும்! சுகமாக வாழ வேண்டும்.

2. உட்புறத்தை அலங்கரிப்போம்
மதுரை, அண்ணா நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஹோட்டல் ராஜேஸ்வரிக்கு வலது புறம் சாலையில் உள்ள மருந்து கடை அருகில் உள்ளது ராமு தாத்தாவின் இடலி கடை. யார் இந்த ராமு தாத்தா? கடந்த 40 ஆண்டுகளாக, மிகவும் குறைந்த விலையில் உணவு அளிக்கின்றார். எவ்வளவு என்றால், வெறும் ஆறு ரூபாய்க்கு அளவு சாப்பாடு தருகின்றார். நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரே, தற்பொழுது 14 ரூபாய், இதில் எப்படி 6 ரூபாய்க்கு சாப்பாடு? என்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. படித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததது. அவர் கடையில் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாகி விட்டது.

ஒருநாள் அவரின கடைக்கு சாப்பிட சென்றோம். ஒரு பொரியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய் என அனைத்தும் சாப்பாட்டில் இருந்தது. சாப்பிட்டவுடன் வயிறும், மனதும் நிறைந்ததது. சாப்பிட்டு முடித்தவுடன் அவருடன் உரையாடினோம். நன்றாக பேசினார். ஆறு ரூபாய்க்கு சாப்பாடு எவ்வாறு கொடுக்கின்றார் என்பதில் புரிந்து கொள்ளவே நிறைய சிரமம் இருக்கிறது நமக்கு, அவருக்கு எவ்வளவு சிரமம் இருக்கும். அவர் யாரிடமும், நன்கொடையாய் பணம் வாங்குவதில்லை. பணம் பணம், லாபம் என்றிருக்கும் உலகில், சேவை, சேவை என்று வாழ்கின்றார் ராமு தாத்தா. அவருக்கு பணத்தை விட, மனிதர்களின் பசியைப் போக்குவதே முக்கியமான குறிக்கோள்.

அன்புமிக்கவர்களே! ராமு தாத்தாவின் உட்புறம் மிகவும் தூய்மையாக இருந்தது. அந்த உட்புறமே இப்படி உன்னதமான செயல்களை செய்ய அவரைத் தூண்டியது. நாம் ராமு தாத்தாவைப் போன்று செய்ய முடிவதில்லையே. காரணம் என்ன? நம் உள்ளத்தில் உறைந்துக் கிடப்பது என்ன? உள்ளத்தின் உள்ளே பாருங்கள் பார்த்தால் அப்படியே ஷாக் ஆகிவிடுவீர்கள். உள்ளத்தின் உள்ளே..

தற்பெருமை கொள்ளுதல், பிறரைக் கொடுமை செய்தல், கோபப்படுதல், பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல், பொய் பேசுதல், கெட்ட சொற்களைப் பேசுதல், நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை, புறம்பேசுதல், தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும், பாரபட்சமாக நடத்தல், பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல், பொய்சாட்சி கூறுதல், எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல், வாக்குறுதியை மீறுதல், சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல், குறை கூறுதல், வதந்தி பரப்புதல், கோள் சொல்லுதல், பொறாமைப்படுதல், விபசாரம் செய்தல், காமவெறி, பழிப்புரை, செருக்கு , மதிகேடு, பேராசை இவைகள் அனைத்தும் இருக்கின்றன. இவைகள் தான் உள்ளத்தை மாசுபடுத்துகின்றன.

இந்த தீய குணங்களை சுட்டரிக்க முடியுமா? ஆம் நம்மால் கண்டிப்பாக முடியும். எப்போது முடியும்? நல்ல குணங்களால் நம்மை அலங்கரிக்கும் போது கண்டிப்பாக முடியும். நல்ல குணங்களை உள்ளத்தின் உள்ளே செலுத்த வேண்டும். விதைக்க வேண்டும்.

பணிவு. தாழ்ச்சி, பொறுமை, பாராட்டுதல், உற்சாகப்படுத்துதல், உதவி செய்தல், அன்பு, அரவணைப்பு, ஆறுதல், அடைக்கலம், ஆலோசனை, மதித்தல், ஆசைகளை அடக்குதல், ஏற்றுக்கொள்ளுதல், சமமாக பார்த்தல், சாதி வேறுபாடுகளை களைதல் இவைகள் அனைத்தையும் உள்ளே போடவேண்டும். உள்ளத்தை இவைகளால் அலங்கரிக்க வேண்டும். இப்படி அலங்கரித்தால் உண்மையில் உள்ளம் உறுதியான உள்ளமாக மாறும். உன்னதமான செயல்களை அது செய்யும். கடவுளின் அவரச அழைப்பை ஏற்று மாற்றுவோம். மனமகிழ்வோடு வாழ்வோம்.

மனதில் கேட்க…
1. நான் வெளிப்புறத்தில் சுத்தமாக இருக்கிறேனா? என் இடம், என் அறை, என் படுக்கை பணியிடம் சுத்தமாக இருக்கிறதா?
2. உட்புறத்திலிருந்த அசுத்தங்களை அப்புறப்படுத்தினால் தான் நான் உன்னதமான நிலைக்கு உயர முடியும். தயாரா நான்?

மனதில் பதிக்க…
வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும் (மாற் 7:15)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.