ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துக்கொள்ளுங்கள்.எபே 5:17

கடவுளின் இரக்கத்துக்கு கெஞ்சி நிற்கும் நாம் அவரின் திருவுளம் அறிந்து செயல்பட்டால் எத்துனை இனிது.அவருக்கே உகந்த தூய,உயிருள்ள பலியாக நம்மை படைத்தோமானால் அவர் மனம் எவ்வளவாக அகமகிழும்.நாம் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு என்ன? எது என்றால் இந்த உலகத்தின் போக்கின்படி நடக்காமல் நம்முடைய உள்ளம் புதுப்பிக்கப்பட்டு மாற்றம் அடைந்து கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து எது நல்லது?எது உகந்தது? எது நிறைவானது? என்று அறிந்து புரிந்துக்கொள்ள வேண்டுமாக விரும்புகிறார்.

ஒரு தம்பதிகளுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள்.ஆனால் அந்த தகப்பன் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என நினைத்து இறைவனிடம் கேட்டாராம்.ஆனால் இறைவன், மகனே நான்தான் உனக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறேனே,அது போதாதா?என்று கேட்டுவிட்டு நீ சென்று அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்து நிம்மதியாக இரு என்று சொன்னாராம்.ஆனால் அந்த தகப்பனோ இல்லை ஆண்டவரே!நீர் எனக்கு அவசியம் ஒரு ஆண் குழந்தையை கொடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக கேட்டாராம்.இறைவனும் அவர் அவ்வாறு பிடிவாதமாக கேட்டதால் சரி தருகிறேன் என்று வாக்களித்து அதன்படியே ஒரு ஆண் குழந்தையை கொடுத்தாராம்.அந்த தகப்பனுக்கு மிகவும் சந்தோஷம் .

இப்படியாக சில வருஷங்கள் சென்றன.பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாய் ஆனார்கள்.ஆனால் அந்த பையனோ தன் தகப்பன் பேச்சை ஒருநாளும் கேட்காமல் மிகவும் துன்பத்தை கொடுத்து வந்தானாம்.அப்பொழுது அந்த தகப்பன் இறைவனிடம் சென்று தன் மகன் செய்யும் காரியத்தை சொல்லி புலம்பி அழுதாராம்.அப்பொழுது இறைவன் முந்திய நாட்களை ஞாபகப்படுத்தி நான்தான் சொன்னேனே,நீ உன் இரண்டு பெண் பிள்ளைகளுடன் சந்தோஷமாக இரு என்று சொன்னேனே.நீதான் கேட்காமல் பிடிவாதமாக எனக்கு ஒரு ஆண்குழந்தை வேண்டும் என்று கேட்டாய்.இப்பொழுது எதற்காக புலம்புகிறாய்? என்று இறைவன் கேட்டாராம்.அந்த தகப்பன் உடனே மனம் வருந்தி ஆம் ஆண்டவரே!நான் உமக்கு முன் பாவம் செய்தேன்.உமது திருவுளப்படி கேட்காமல் என் மனம் விரும்பியதை அடைய நினைத்தேன்.அதனால் இப்பொழுது அதை நினைத்து கஷ்டப் படுகிறேன்.ஆண்டவரே என்னை மன்னியும்,ஆண்டவரே என்னை பொறுத்தருளும்.ஆண்டவரே எனக்கு இரங்கும் என்று அழுது இனி என் விருப்பப்படி எதுவும் கேட்காமல் உமது திருவுளப்படியே கேட்பேன் என்று சொன்னாராம்.

ஆம்,பிரியமானவர்களே! நம்மை உருவாக்கிய கடவுளுக்கு எது நமக்கு தேவை என்று முற்றிலும் அறிந்துள்ளார்.நாம் நினைப்பதற்கும்,வேண்டுவதற்கும் அதிகமாகவே செய்ய காத்திருக்கிறார்.ஆகையால் சில வேளைகளில் நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படவில்லை என்றால் நாம் வருத்தப்படாமல் இறைவா!உமது திருவுளப்படி தந்தருளும் என்று அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவரின் செயல்பாடு அனைத்தும் மிகவும் இனியதாகவும்,சந்தோஷமாகவும் இருக்கும்.ஏனெனில் எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை;அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; தம்மைநோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்,என்று தி.பாடல்கள் 22 : 24 ல் வாசிக்கிறோம்.ஆண்டவரே!உமது திருவுளப்படி செய்யும் என்று நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கும் பொழுது அவர் நமது மனம் விரும்புவதை தந்தருள்வார்.நம்முடைய திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்.அவரின் தூய வானத்திலிருந்து நமக்கு பதில் அளித்து வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டிடுவார்.யாவருக்கும் அவரின் திருவுளப்படியே அனைத்தும் கிடைக்கட்டும்.

மகிமையும்,மகத்துவமும்,நிறைந்த ஆண்டவரே!

உம்மை போற்றித் துதிக்கிறோம்,ஆராதிக்கிறோம்.உமது யோசனையில் எங்களை நடத்தி முடிவிலே உமது மகிமையிலே சேர்த்துக் கொள்ள வேண்டுமாக உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.நீர் அனைத்தையும் அறிந்தவர்,உமக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை.எங்களுடைய விருப்பம் யாவும் உமது திருவுளப்படி இருக்க எங்களுக்கு அனுதினமும் போதித்து வழிநடத்தும்.மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.