ஆண்டவரை நாடுவோருக்கு நன்மை ஏதும் குறையாது

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, நம் தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

நாம் ஆண்டவரை தேடுவதால் நமக்கு அவர் உண்டு பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதங்கள் அநேகமாய் இருக்கும். அவரை கடவுளாக கண்டுக்கொண்ட நாம் பேறுபெற்றவர்கள். ஏனெனில் நம்மை அவர் தமது உரிமை சொத்தாக தெரிந்தெடுத்துள்ளார். அவர் வானில் இருந்தாலும் அங்கே
இருந்து நம்மை காண்கிறார். அவரின் சிங்காசனத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்கிக் கொண்டுத்தான் இருக்கிறார். நம் உள்ளங்களை உருவாக்கியவரும்,நமது செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே. ஆகையால் தான் இவ்வாறு சொல்கிறார். சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.சங்கீதம் [திருப்பாடல்கள் 34:10 ல் வாசிக்கிறோம்.

நாம் யோனா புத்தகத்தை வாசித்து பார்ப்போமானால் ஆண்டவரின் அன்பையும், அவரின் பேரன்பையும், இரக்கத்தையும், மனஉறுக்கத்தையும் காணலாம். கடவுள் நம்மை சில வேளைகளில் கடினமான பாதையில் வழிநடத்தினாலும் அதில் நன்மையே உண்டாகும். அவர் தீர்ப்பு வழங்குவது பழிவாங்குவதற்கு அல்லவே அல்ல. தமது மக்களை திருத்துவதற்கே. நினிவே மக்கள் பாவம் செய்தபொழுது ஆண்டவர் யோனாவை அனுப்பி அவர்கள் மனந்திருந்த வேண்டுமாய் சொல்லச் சொல்கிறார்.அவர்கள் மனந்திருந்தாவிட்டால் நினிவே பட்டணம் முழுதும் அழிக்கப்பட்டுவிடும், என்று கூறுகிறார். நடந்தது என்ன?நினிவே மக்கள் கடவுளின் செய்தியை நம்பி எல்லோரும் நோன்பிருக்க முடிவு செய்து பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.

இந்த செய்தி நினிவே அரசனுக்கு எட்டியபொழுது அவர் தன்னை தாழ்த்தி தமது அரியணையை விட்டிறங்கி அரச உடையை களைந்து விட்டு சாக்கு உடை உடுத்திக்கொண்டு சாம்பல்மீது உட்கார்ந்தான். அதுமட்டுமல்லாமல் நினிவே நாட்டு மக்கள் யாவருக்கும் பறைசாற்றச் செய்தான். அரசரும், அரச அவையினரும் மக்கள் அனைவரும் ஆடு,மாடு,முதலிய விலங்குகளும் உணவை சுவைத்து பார்க்காமல் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும் தம் தீய வழிகளையும் தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்: அவரது கடுஞ்சினமும் தணியும்: நமக்கு அழிவு வராது. என்று தமது மக்களுக்கு ஆணையிட்டு அதை நிறைவேற்றினார்.

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு தம் மனத்தை மாற்றிக்கொண்டார். தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த
தண்டனையை அனுப்பவில்லை. அந்த நினிவே மக்களுக்கு கர்த்தர் மனமிரங்கி இரக்கம் செய்து எல்லா மக்களையும் அழிக்காமல் அவர்கள் மனந்திருந்தும்படி செய்து அவர்களை இரட்சித்து மீட்டுக்கொண்டார். அவரை நம்பிக்கையோடு தேடி வருபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிடவே மாட்டார்.

அன்பானவர்களே! இந்த நாளிலும் ஆண்டவர் நினிவே மக்களுக்கு செய்தது போல நமக்கும் செய்ய காத்திருக்கிறார்.எப்பொழுது என்றால் நினிவே மக்கள் உணவை வெறுத்து சாக்கு உடை அணிந்து ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து தங்களை தாழ்த்தியதுபோல நாமும் நம்மை தாழ்த்தி அவருக்கு பயந்து அவர் சித்தம் அறிந்து செயல்பட்டால் நமக்கும் யாராலும் எந்த தீங்கும் வராமல் நமக்கு ஒரு நன்மையும் குறையாமல் பார்த்துக்கொள்வார். அவரிடம் அடைக்கலம் புகும் யாவரையும் தண்டனையிலிருந்து, பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து மீட்டு நம்மை அரவணைத்து ஆசீர்வதித்து காத்து வழிநடத்துவார்.

ஜெபம்

அன்பின் இறைவா!எக்காலமும் உம்மை போற்றுகிறோம். உமது புகழ் எப்பொழுதும் எங்கள் நாவில் ஒலிக்கும். உம்மையே பெருமையாக பேசவும், உமக்கே மகிமை செலுத்திடவும் உதவியருளும். எங்களுக்கு எதிராக வழக்காடுவோருடன் நீரே வழக்காடி எங்களை மீட்டுள்ளீர். உமது பேரன்பு எத்துணை அருமையானது, உமது இறக்கைகளின் நிழலில் புகலிடமாய் வரும் எங்களை ஒருபோதும் கைவிடாமல், ஒரு நன்மையும் குறைவு படாமல் இம்மட்டும் காத்து வந்தது
போல இனிமேலும் காத்துக்கொள்ளும். துதி, கனம் மகிமையாவும் உமக்கே செலுத்துகிறோம். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே!ஆமென்!!
அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.