இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். 1 யோவான் 1 : 7

இன்றைய சிந்தனை

விண்ணிலும்,மண்ணிலும்,நிறைந்திருக்கும் ஆண்டவராகிய இயேசு அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தொலையில் இருக்கும் எல்லோருக்கும் கடவுள் ஆவார். ஏனெனில் அவர் கண்ணில் படாதபடிக்கு எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துக்கொள்ள முடியுமா? அவர் தம் இதயத்தின் திட்டங்களை நிறைவேற்றுவார். அதற்காகவே இந்த பூமிக்கு இறங்கி வந்தார். நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு நமக்கு விடுதலை அளிக்கவே அவர் சாபமானார்.

ஏனெனில் இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். ஆம் நாம் கருவில் உருவாகும் போதே பாவம் நம்மை ஆட்கொள்கிறது. கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். ஏனெனில் என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உமது பார்வையில் தீயது செய்தேன்; எனவே உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங் குகின்றீர். திருப்பாடல்கள் 51 : 1 to 5 வரை உள்ள வசனங்கள் நமக்கு  விளக்குகிறது.

நாம் ஒவ்வொருவரும் பாவத்தில் பிறப்பதால் அதிலிருந்து விடுபட இயேசுகிறிஸ்து தமது உயிரை நமக்கு கொடுத்து நம்முடைய பாவத்திலிருந்து நம்மை மீட்டுள்ளார். அவருடைய இரத்தமே நமக்கு பாவ மன்னிப்பைத் தருகிறது. ஆனால் நாம் நம்மிடம் பாவம் இல்லை என்று சொல்வோமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மை நம்மிடம் இல்லை. ஆனால் நாம் பாவங்களை ஒப்புக்கொண்டால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து , நமது குற்றம் அனைத்திலிருந்தும் நம்மை தூய்மைப்படுத்துவார்.

தம் குற்றப் பழிகளை மூடி மறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது. அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர்கள் கடவுளின் இரக்கம் பெறுவார்கள். நீதிமொழிகள் 28 : 13. இவ்வுலக ராஜாக்கள் தங்கள் தலையில் மணிமகுடம் அணிந்துக்கொள்கிறார்கள். ஆனால் பாவமே செய்யாத நம்முடைய இயேசுவோ நமக்காக தலையில் முள்முடியை அணிந்துக்கொள்கிறார். அது போதாது என்று அவரின் உடல் எல்லாம் ஒரு நிலம் உழுவப்படுவது போல், மண்ணை மேலும்,கீழும் திருப்பி
போடுவதுபோல் அவர் உடலை கிழித்து,பிளந்து, ஆழமாக உழுதுபோட்டார்கள். அதுவும் போதாது என்று ஆணியால் கையிலும், காலிலும் அடித்துப்போட்டார்கள். அதுவும் போதாது என்று ஈட்டியால்
விலாவிலே குத்தி கடைசி சொட்டு இரத்தமும், தண்ணீரும் வெளியேற வேண்டுமாய் துன்பப்படுத்தி, வேதனைப்படுத்தி தங்கள் அறியாமையை வெளிப்படுத்தினார்கள்.

ஆனாலும் நமது ஆண்டவர் அப்பொழுதும் அவர்களை சபிக்காமல் அவர்களுக்காக வேண்டுதல் செய்து அவரது அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தி அவரது இரத்தத்தால் நம்மை மீட்டு நம் எல்லோருக்கும் பாவ மன்னிப்பை அருளினார். ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசுகிறிஸ்து. நம்முடைய பாவங்களுக்கு கழுவாய் அவரே  நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல; அனைத்துலகின் பாவங்களுக்கும் சிலுவை சுமந்து, இரத்தம் சிந்தினவர் அவரே! நாம் ஒவ்வொருவரும் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்து அவரின் வழியில் அவரைப்போல் வாழ்ந்து கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவோம்.

அன்பே உருவான தகப்பனே!!

உமது அன்பிற்கு ஈடு, இணை இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லையப்பா. எல்லாம் மாயை. எல்லாம் கடந்து போகும். மாறிப்போகும். ஆனால் நீரோ என்றென்றும் மாறாதவர். வானம்,பூமி கூட அழிந்து போகும் ஆனால் உமது வார்த்தை அழிந்து போகாது. அது உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது. உமது வார்த்தை எங்கள் ஆன்மாவையும், ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. எங்கள் உள்ளங்களின் சிந்தனைகளையும், நோக்கங்களையும் சீர்தூக்கி பார்க்கிறது. படைப்பு எதுவும் உமக்கு மறைவானது ஒன்றுமில்லை. எங்கள் உள்ளத்தின் ஆழத்தையும், அறிந்துள்ள தேவனாக இருக்கிறீர். உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம், துதி, கனம், மகிமை யாவும் உமது ஒருவருக்கே செலுத்துகிறோம்.

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.