இயேசுவின் பரந்த மனம்

இன்றைய நற்செய்தியில் இயேசுவைப் பார்த்து, தொழுநோயாளி, நீர் விரும்பினால் குணமாவேன் என்று சொல்கிறான். இயேசு தாமதிக்கவில்லை. உடனடியாக, “விரும்புகிறேன், குணமாகு“ என்று சொல்கிறார். இயேசு நாம் நோயிலும், துன்பத்திலும் அவதியுற வேண்டும் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அவரே இந்த உலகத்திற்கு நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனாக வந்தார்.

நாம் குணம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறபோதெல்லாம், அவர் குணம் கொடுத்தார். ஓய்வுநாள் என்று கூட பார்க்கவில்லை. அதனால், தான் பலரது எதிர்ப்புக்களையும், ஏளனங்களையும் சந்திக்க வேண்டியது வரும், என்பது பற்றி அவர் கவலை கொள்ளவும் இல்லை. நன்மை என்றால் நினைத்தமாத்திரத்தில் அதை செய்து முடித்தார். பலவேளைகளில் நாம் கடவுள் எனக்கு துன்பத்தைக் கொடுக்கிறார். நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள் தான் காரணம், என்று பதில் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறபோது, கடவுளை பதிலாக நினைக்க ஆரம்பிக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. கடவுள் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். நமது வாழ்விலும் மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள அழைக்கப்படுகிறோம்.

இன்றைக்கு உலகம் சுருங்கிவிட்டது. உலகத்தோடு மனித மனங்களும் சுருங்கிவிட்டது. அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும், அடுத்த அறையில் கொலையே நடந்தாலும், நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும், என்கிற மோசமான மனநிலை இன்றைய சமுதாயத்தில் மலிந்துபோய்விட்டது. அந்த மனநிலை மாற்றம் பெற வேண்டும். நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளின் என்கிற பரந்த உணர்வை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.