இரக்கத்தின் ஜுபிலி ஆண்டிற்கென திருத்தந்தை இயற்றியுள்ள செபம்

டிசம்பர் 8ம் தேதி, 2015 முதல் 2016 ஆண்டு நவம்பர் 20ம் தேதி முடிய கொண்டாடப்படவிருக்கும் இரக்கத்தின் ஜுபிலி ஆண்டிற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு செபத்தை இயற்றியுள்ளார்.

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை அறிவிக்கவும், புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் திருஅவை பணியாற்றுவதற்கு இந்த ஜுபிலி ஆண்டு உதவட்டும் என்ற மையக் கருத்துடன் திருத்தந்தை இந்த செபத்தை உருவாக்கியுள்ளார்.

திருத்தந்தை உருவாக்கியுள்ள அந்த செபத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே தரப்பட்டுள்ளது:

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, விண்ணகத் தந்தை கருணையுள்ளவராக இருப்பதுபோல, நாங்களும் இருக்கவேண்டும் என்றும், உம்மைக் காண்பவர், அவரைக் காண்பர் என்றும் எங்களுக்குக் கற்பித்துள்ளீர். உமது முகத்தை எங்களுக்குக் காட்டும், நாங்கள் மீட்படைவோம்.

தங்கள் செல்வத்தால் அடிமைப்பட்ட சக்கேயுவையும், மத்தேயுவையும் உமது அன்புப் பார்வை விடுவித்தது. படைக்கப்பட்டவற்றில் தன் மகிழ்வைத் தேடிய மகதலா மரியாவையும், உம்மை மறுதலித்த பேதுருவையும், மனம் வருந்திய கள்வரையும் உமது அன்புப் பார்வை விடுவித்து, விண்ணகத்தை உறுதி செய்தது.

சமாரியா பெண்ணிடம் “கடவுளுடைய கோடை எது என்பதை நீர் அறிந்திருந்தால்” என்று நீர் சொன்னதுபோல், எங்கள் ஒவ்வொருவருக்கும் நீர் சொல்வதை நாங்கள் கேட்கவேண்டும்.

காண இயலாத தந்தையின் காணக்கூடிய முகம் நீரே; இந்தக் கடவுளின் வல்லமை, மன்னிப்பிலும், கருணையிலும் வெளிப்படுகின்றது. உயிர்த்து, மாட்சிமை பெற்றுள்ள ஆண்டவராகிய உமது காணக்கூடிய முகமாக திருஅவை விளங்குவதாக!

அறியாமையிலும், தவறுகளிலும் இருப்போர் மீது பரிவு காட்டுவதற்கென, உமது பணியாளர்களையும் வலிமையற்ற நிலையை அணிந்துகொள்ளச் செய்தீர். உமது பணியாளர்களை அணுகிவரும் அனைவரும், இறைவன் அவர்களைத் தேடி, அன்பு செய்து, மன்னிக்கிறார் என்பதை உணரட்டும்.

கருணையின் ஜுபிலி ஆண்டு, அருள் நிறைந்த காலமாக அமைய, உமது ஆவியானவரை அனுப்பி, எங்கள் ஒவ்வொருவரையும் அருள்பொழிவு செய்தருளும். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை அறிவிக்கவும், பார்வை இழந்தோருக்கு பார்வை தரவும், புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் திருஅவை பணியாற்றுவதற்கு இந்த ஜுபிலி ஆண்டு உதவட்டும்.

கருணையின் அன்னையான மரியாவின் பரிந்துரை வழியாக, இதை நாங்கள் மன்றாடுகிறோம். தந்தையோடும், தூய ஆவியாரோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கிறவரே, ஆமென்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி