இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9 : 22

கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும் உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் நம்மை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்டுள்ளது. கூடாரத்தின் மீதும் வழிப்பாட்டுக்கலன்கள் அனைத்தின் மீதும் அவர் இரத்தத்தை தெளித்தார். உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை என்று எபிரெயர் 9:21,22 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.

கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாக நமக்காக ஒப்புக்கொடுத்தார். நம்மை மீட்கும் பொருட்டே அவ்வாறு செய்தார். ஏனெனில் ஒரே மனிதனால் இந்த உலகில் பாவம் வந்ததுப்போல் அந்த பாவத்தை எல்லாம் நிவர்த்தி செய்யும் பொருட்டு உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். ஒரேமுறை நாமும் சாவுக்கு உட்படுகின்றோம். பின்னர் இறுதி தீர்ப்பு வருகிறது. இதுவே நமக்காக நியமித்த நியதி. ஆண்டவராகிய கிறிஸ்துவும் நம் எல்லோருடைய பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மையே பலியாகக் கொடுத்தார். ஆனால் அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். பாவத்தின் பொருட்டு அல்ல. அவருக்காக காத்திருப்பவர்களுக்காக மீட்பு அளிக்கும் பொருட்டே தோன்றுவார்.

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற கிறிஸ்து இந்த உலகில் வந்து நமக்காக அடிக்கப்பட்டு, காயப்பட்டு முள்முடி சூட்டப்பட்டு, சிலுவையை சுமந்து, அதிலே அறையப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும், நமக்காக சிந்தி நமக்கு பாவமன்னிப்பை ஏற்படித்திக்கொடுத்தார். நாம் அவருக்காக என்ன செய்யப்போகிறோம்? கிறிஸ்து கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றியதுபோல் நாமும் கிறிஸ்துவின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்.

மன்னிப்பூ என்ற பூ நம் இதயத்தில் மலருமானால் நம்முடைய ஒவ்வொருவரின் இதயமும் மகிழ்ச்சியால் பூரிக்கும். இனி நாம் அல்ல. கிறிஸ்துவே நமக்குள் பிழைக்கட்டும். அப்பொழுது நாமும் அவரின் சாயலாக மாறுவோம். அவருக்கென்று சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து அவரின் திருநாமத்திற்கே பெருமை சேர்ப்போம். நற்கருணையின் ஆண்டவரின் உடலை புசிக்கும் நாம் அவருக்கே உகந்த வர்களாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபம்

அன்பின் தேவனே! உம்மை போற்றி, புகழ்ந்து, பாடித் துதிக்கிறோம். நீர் பலியையும், காணிக்கையையும் விட உமக்கு கீழ்படிவதையே விரும்புகிறீர். நீர் விரும்பும் வண்ணமாக நாங்களும் வாழ்ந்து உமது திருவுளத்தை நிறைவேற்ற உதவியருளும். அருள்வாழ்வின் இன்பத்தை கண்டடைய அதன்மீது எங்களுக்கு தாகத்தை ஏற்படுத்தி அதைப்பெற்றுக்கொள்ள மனமிரங்கும். அதன்மீது ஒவ்வொருநாளும் இன்னும் அதிகப்படியான தேடுதலை கொண்டு கண்டுக்கொள்ள எங்களுக்கு வழியை காட்ட வேண்டுமாய் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே! ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.