இறைப்பிரசன்னத்தின் இருப்பிடம் ஆலயம்

தொழுகைக்கூடத்தில் நடக்கும் இந்த நிகழ்வு ஒரு மிகமுக்கியமான நிகழ்வு. ஏனென்றால், யூத மதத்தின் பாரம்பரியவாதிகளுக்கும், இயேசுவுக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தொழுகைக்கூடங்களில் போதிக்கும் இயேசுவின் போதனைக்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்து கிளம்ப ஆரம்பித்துவிட்டது. ஆனால், இயேசு தனது பாதுகாப்பைத்தேடி ஒளிந்துகொள்ளாமல், ஆபத்தான அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறார்.

தொழுகைக்கூடங்களில் இயேசு போதிக்கிற இடங்களுக்கெல்லாம், தலைமைச்சங்கத்தினால் நியமிக்கப்பட்ட தூதுக்குழுவினர் சென்று, இயேசுவின் போதனையைக் கணக்கெடுக்க ஆரம்பித்தனர். தொழுகைக்கூடத்தின் முதல் இருக்கைகள் மதிப்பிற்குரியது. அந்த இருக்கைகள் தலைமைச்சங்க உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மக்களை தவறாக வழிநடத்துகிற போதனையாளர்களை எதிர்கொண்டு, அவர்களை விசாரிப்பது இவர்களுடைய முக்கியமான கடமைகளுள் ஒன்று. அந்த வகையில், தலைமைச்சங்க உறுப்பினர்கள் இயேசு போதிக்கும் இடங்களுக்குச் சென்று வருவது, அவர்கள் இயேசுவை எப்படிப்பார்த்தார்கள் என்பதற்கு சிறந்த சான்றாகும். அவர்களின் நோக்கம் இறைவார்த்தையைக் கேட்பது அல்ல, செபிப்பது அல்ல. மாறாக, குற்றம் கண்டுபிடிப்பது. குற்றம் கண்டுபிடிப்பதற்காக, ஆலயத்தின் முன்னால் அமர்ந்து, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற முன்னுரிமையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆலயம் என்பது புனிதமான இடம். ஆண்டவரை நேர்மையான உள்ளத்தோடு, தூய்மையான எண்ணத்தோடு போற்றிப்புகழக்கூடிய இடம். அத்தகைய இடத்தில் இருந்து, வேடிக்கை பார்ப்பதும், அடுத்தவர்களை தவறான கண்ணோட்டத்தோடு நோக்குவதும், குற்றம் கண்டுபிடிப்பதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தவறான முன்னுதாரணங்கள். அவற்றைக்களைந்து, தூய்மையான எண்ணத்தோடு ஆலயத்தின் வழிபாட்டில் கலந்துகொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.