உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்

ரகு முதன் முதலாக வீட்டை விட்டு பிரிந்து ஹாஸ்டல் செல்ல அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான். + 2 வரைக்கும் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த ரகு காலேஜில் சேர்வதற்காக, அங்கு ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்காக கிளம்பினான். ரகு மிகவும் பொறுமையான, அன்பான மாணவன். ஏனெனில் அவனின் பெற்றோர் அவனை நல்ல முறையில் கடவுளுக்கு பயந்து நடக்கும் வழியில் வளர்த்து இருந்தார்கள்.

சிறிது பயத்தோடு முதல்நாள் வகுப்புக்கு சென்றான். அங்கு இவனோடு படித்த இரண்டு மாணவர்களும் இருந்தார்கள். அதனால் ரகுவிற்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது. இவர்கள் மூவரும் ஒரே அறையில் தங்கிக்கொண்டனர். அதனால் எங்கு போனாலும் மூவரும் சேர்ந்தே போவார்கள், வருவார்கள். இரண்டு மாதம் கழித்து லீவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு விடுமுறை முடிந்ததும் மறுபடியும் காலேஜிக்கு சென்றான். ஏதோ காரணத்தால் மற்ற இரண்டு பேரும் வரவில்லை. ரகு அலைபேசியில் அழைத்து கேட்டதற்கு இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று சொன்னார்கள். அதனால் அன்று ரகு தனியாக ஹாஸ்டலில் இருந்து தன் வகுப்புக்கு போனான்.

மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் டேவிட் ரகு தனியாக வருவதைப் பார்த்து அவனை வழிமறித்து அவனிடம் வம்பு செய்ய ஆரம்பித்தான். ரகு எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் அவனை விடவில்லை. அந்த டேவிட்டுக்கு இதேதான் வேலை. அவன் பெற்றோர் எவ்வளவோ வறுமையில் கஷ்டப்பட்டு காலேஜிக்கு அனுப்பினால் இவனோ ஒழுங்காக படிக்காமல் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறாமல் மற்ற மாணவர்களிடம் வம்பு பண்ணுவதே தனது குறிக்கோளாக கொண்டு இருந்தான்.

ரகு நான்கு வருஷமும் நன்றாக படித்து ஒரு பெரிய கம்பெனியில் நல்லதொரு வேலை கிடைத்து அதில் பணியாற்றி வந்தான். ஆனால் டேவிட்டோ படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் கடவுள் கொடுத்த நாட்களை வீணாக்கி எந்த ஒரு வேலையும் இல்லாமல் இருந்தான். ஒருநாள் ரகு வேலைப்பார்க்கும் கம்பெனியில் வேலைக்கு ஆட்களை எடுத்தார்கள்.இண்டர்வியூக்கு இந்த டேவிட்டும் வந்திருந்தான். அந்த கம்பெனியில் ரகு தான் ஆட்களை தேர்வு செய்தான். டேவிட் உள்ளே நுழைந்ததும் ரகுவிற்கு அவனை அடையாளம் தெரிந்துவிட்டது. இவன் நம்ப காலேஜில் படித்த டேவிட், நம்மை அடிக்கடி வம்பு செய்து மாட்டைப்போல் புல் திங்க சொன்னவன், ஆனாலும் அவன் கடவுளின் வசனத்தை கைகொண்டதால் ஒன்றும் சொல்லாமல் அவனை கேள்விக் கேட்க ஆரம்பித்தான். ஆனால் அந்த டேவிட்டுகோ ரகுவை அடையாளம் தெரியவில்லை. தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும் இந்த வேலை கிடைத்தால் அதன் மூலம் தன் பெற்றோரை பராமரிக்கமுடியும் என்று சொன்னான்.

அப்பொழுது ரகுவிற்கு அன்று படித்த ஒரு வசனம் ஞாபகம் வந்தது. நான் உங்களுக்கு சொல்கிறேன். உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படி செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத்தந்தையின் மக்கள் ஆவீர்கள். மத்தேயு 5 : 44,45. உடனே ரகு தன் காலேஜில் நடந்ததை மறந்து ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து டேவிட்டின் குடும்பத்தை மனதில் வைத்து அந்த வேலையை அவனுக்கு கொடுத்து அவன் அதில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று கூறி அவனை வாழ்த்தி அனுப்பினான். அன்பானவர்களே! இவ்வாறு செய்வதே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு மிகவும் பிரியமான காரியமாக இருக்கும்.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.