உண்மையான செபம் எது?

பக்தியுள்ள யூதர் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் செபம் செய்வார். அதுவும் ஆலயத்திற்கு வந்து செபிப்பது சிறந்த அருளைப்பெற்றுத்தரும் என்பதால், ஆலயத்திற்கு வந்து பலர் செபித்தனர். யூதச்சட்டம் ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று மட்டும் நோன்பிருக்க அறிவுறுத்தியது. ஆனால், சிலர் கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக வாரம் இருமுறை திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் யெருசலேமில், மக்கள் பொருட்களை வாங்க சந்தைகளில் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்று இணைச்சட்டம்(14:22), கூறுவதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றினர். இந்தப்பாரம்பரிய முறைகளை பரிசேயர்கள் மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக செய்தார்கள். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆலயத்திற்கு வந்து செபித்தார்கள், தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத பொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள்.

இன்றைய நற்செய்தியில், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் ஆலயத்தில் நின்று செபிக்கிறார்கள். பரிசேயர் சொன்னது அனைத்தையும் உண்மையிலே அவன் கடைப்பிடித்தான். பரிசேயர், தான் செய்யாததை அங்கே ஆலயத்தின் முன்நின்று சொல்லவில்லை. தினமும் செபித்தான், வாரம் இருமுறை நோன்பிருந்தான் மற்றும் பத்தில் ஒரு பங்கு கடவுளுக்குக்கொடுத்தான். ஆனால், செபம் என்பது தான் செய்வதை சொல்வது அல்ல, தன்னைப்புகழுவது அல்ல, அல்லது தன்னை மற்றவரோடு ஒப்பிடுவது அல்ல. மாறாக, செபம் என்பது கடவுளைப்புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணைநாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்பயணம், என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். செபம் என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதில் நான் மற்றவர்களை விமர்சனம் செய்வரோ, மற்றவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதோ சரியானது அல்ல. செபத்தில் நான் கடவுளிடம் என்னுடைய வாழ்வு பற்றிப்பேச வேண்டும். நான் சரிசெய்ய நினைப்பவற்றை கடவுளிடம் சொல்ல வேண்டும். அதற்கான அருளை நான் கடவுளிடம் கேட்டுப்பெற வேண்டுமேயொழிய, மற்றவர்களைப்பற்றி கடவுளிடம் குறைகூறுதல் சரியான செபம் அல்ல.

செபம் கடவுளிடம் நம்மைப்பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். நம்முடைய பெருமைகளையோ, திறமைகளையோ, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்புகழ்வதாகவோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அது செபம் அல்ல. அந்த செபம் கடவுள் முன்னிலையில் கேட்கப்படாது. மாறாக, செபம் என்பது நம்மைப்பற்றி, நாம் இன்னும் விசுவாச வாழ்வில் போக வேண்டிய தூரம் பற்றி, நம்முடைய பலவீனங்களை வெல்வதற்கான கடவுளின் அருளைப்பெறுவது பற்றியதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான செபமாக இருக்க முடியும்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.