எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புக்கள்

இன்றைய நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்கு ஒரு வினாடி, ஒரு வாய்ப்பு போதும். நாம் எங்கோ சென்றுவிடுவோம். ஆனால், நமது வாய்ப்புகளை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். கிடைக்கிற வாய்ப்புக்களை நல்ல முறையில், முழுமையாக் பயன்படுத்துகிறபோது, நிச்சயம் நமது வாழ்க்கை ஒளிரக்கூடியதாக இருக்கும். அப்படி கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தனது வாழ்வையே மாற்றிய ஒரு மனிதனின், வாழ்க்கை அனுபவத்தைத்தான், இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43) வழியாக அறிய வருகிறோம்.

பார்வையற்ற மனிதன் வழியோரமாய் உட்கார்ந்திருக்கிறான். தனக்கு பார்வை இல்லை, இனிமேல் நடப்பது நடக்கட்டும் என்று அவன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று வித்தியாசமாக அவன் உணர்ந்தால், உடனே அருகிலிருந்தவர்களிடம் அதுபற்றி விசாரித்துக்கொண்டிருந்தான். அதேபோலத்தான் இயேசுவின் வருகையையும் விசாரித்தான். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்று தேடிக்கொண்டேயிருக்கிறான். வாய்ப்பு கிடைத்ததும் அதனை அவன் பற்றிக்கொண்டான். அதுதான் வாழ்வை மாற்றுவதற்கு, வாழ்வையே புரட்டிப்போடக்கூடிய வாய்ப்பு. அதனை அவன் பயன்படுத்திக் கொண்டான். வாழ்வில் ஒளியைப் பெற்றுக்கொண்டான்.

நமது வாழ்விலும் இந்த வாய்ப்புகள் வருகிறபோது, அதனை முழுமையாகப் பற்றிக்கொள்வோம். அது நமது வாழ்வையே மாற்றக்கூடிய வாய்ப்பாகக் கூட இருக்கலாம். எதனையும் உதறித்தள்ளாது, அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தி, நாமும் பயன்பெற்று, மற்றவர்கள் வாழ்விலும் ஒளியேற்றுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.