எது வேண்டும்: அங்கலாய்ப்பா? ஆசீர்வாதமா?

மத்தேயு 13:36-43

“விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!. உமது ஆட்சி வருக!” என நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஜெபித்தார். தந்தையின் ஆட்சியை இம்மண்ணுலகில் நிறுவுவதே இயேசுவின் திருவுளம். தந்தையின் ஆட்சிக்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் இயேசுவிடம் இருந்து பாராட்டு பெறுவர். யாரெல்லாம் இடறலாக இருக்கிறார்களோ அவர்கள் தண்டனை பெறுவர்.

அங்கலாய்ப்பா?
நம் வாழ்க்கையில் அங்கலாய்ப்பையும், அழுகையையும் உருவாக்குவது அலகையே. அலகை ஆட்சி செய்வதால் இருளிலே ஒருசிலரின் பயணம் போகிறது. குணங்களும் பேய் குணங்கள் தான் இவர்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அலகையின் பிடியில் சிக்கிக்கொள்பவா்கள் கடவுளின் ஆட்சிக்கு தங்கள் பங்களிப்பை தருவதில்லை. அலகையின் விருப்பப்படி இவர்கள் ஆடுவதால் வாழ்க்கை திண்டாட்டமாகவே இவர்களுக்கு அமைகிறது.

ஆசீர்வாதமா?
கடவுளின் ஆட்சிக்கு உதவி செய்கிறவர்கள் கதிரவனைப்போல் ஒளி வீசுவர். இறைவனிடம் நெருங்கி இருப்பதால் இவர்களுக்கு ஆசீர்வாதக்கதவுகள் திறந்தே இருக்கின்றன. நற்குணங்களால் இவர்கள் பலர் வாழ்வில் வெளிச்சமாக திகழ்கின்றனர். ஆண்டவர் விருப்பப்படி இவர்கள் செயல்படுவதால் இவர்களுக்கு வாழ்க்கை என்பது கொண்டாட்டமாக அமைகின்றது.

மனதில் கேட்க…
• அழுகையும், அங்கலாய்ப்பும் எனக்கு எதற்கு?
• கடவுளின் ஆட்சிக்கு என்னுடைய பங்களிப்பை இனி நிறைவாக கொடுக்கலாமா?

மனதில் பதிக்க…
நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள் (கொலோ 3:24)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.