எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?

பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ ? என்று நீதிமொழிகள் 29 : 26 ல் வாசிக்கிறோம்.ஏனெனில் நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் ஆண்டவர் அறிந்து வைத்து உள்ளார். அவருக்கு தெரியாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடைபெறாது. நாம் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்புநாளில் கணக்கு கொடுக்க வேண்டும் என இயேசு மத்தேயு 12 : 36 ல் சொல்லியிருக்கிறார். நம்முடைய வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படும்..பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர்கள் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிறவருக்கோ அடைக்கலம் கிடைக்கும். ஏனெனில் நமக்கெல்லாம் நியாயம் வழங்குபவர் அவர் அல்லவா!!

ஆண்டவர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அவர் நினைத்து செயலாற்ற நினைக்கும் எந்த காரியத்தையும் நம்மால் தடுக்க முடியுமா? யோபு 42 : 2 . அவருடைய செயல்கள் நமக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை. அவரைப்பற்றிய அறிவு நமக்கு எல்லாம் உன்னதமானது; நம் அறிவுக்கு எட்டாதது.அவரது ஆற்றலைவிட்டு நாம் எங்கே செல்லக்கூடும்? அவரின் திரு முன்னிலிருந்து நாம் எங்கே தப்பியோட முடியும்? வானத்திற்கு நாம் ஏறிச்சென்றாலும் அங்கே இருப்பார்! நாம் பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் அங்கேயும் இருப்பார்; நாம் கதிரவனின் இடத்திற்கு பறந்து சென்றாலும் அங்கேயும் இருப்பார். திருப்பாடல்கள் 139 : 6 to 9 என்று வாசிக்கிறோம். அவருக்கு மறைவாக எங்கேயும் போகத் தேவையில்லை. ஏன் அவருக்கு மறைவாக செல்லனும் ? அவர் நம்மிடம் கேட்பது நம் இதயத்தை தானே ! அதை அவருக்கு அர்ப்பணித்துவிட்டால் அவரே நமக்குள் இருந்து செயலாற்றி நம் தேவைகள் அனைத்தையும் சந்தித்து நமக்கு ஒரு பொல்லாப்பும் வராமல் காத்திடுவார்.

இயேசுகிறிஸ்து அதற்காக தானே இந்த பூமிக்கு வந்தார். நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாகவே செய்திட காத்திருக்கிறார். ” அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே! எல்லோரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார். மத்தேயு 8 : 17 & 11 : 28. நாம் அவரின் பாதுக்காப்பில் வாழ்ந்து எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கிடுவோம்..அவரே நமது புகலிடமும், அரணும் ,கேடயமும் ஆவார்..அவர் தம் சிறகுகளால் நம்மை அரவணைப்பார்; அவரின் இறக்கைகளின் கீழ் புகலிடம் கொடுத்து கோழி தனது குஞ்சுகளை பாதுகாப்பதுபோல் காத்திடுவார்.எந்த தந்தையாவது தனது சொந்தப்பிள்ளைக்கு நியாயம் செய்யாமல் விட்டுவிடுவாரோ?? நம்முடைய இயேசப்பாவும் நமக்கு நியாயம் செய்து அரவணைத்துக்கொள்வார்.

இரக்கமுள்ள ஆண்டவரே!!

உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம். நீரே எங்களுக்கு நியாயம் வழங்கும் நியாயாதிபதியாக இருப்பதால் உமக்கு கோடான கோடி நன்றி சொல்கிறோம். ஒவ்வொருநாளும் உமது கிருபையினால் எங்களை தாங்கி காத்துக்கொண்டு வருகிறீர். அதை மறந்து விடாதபடிக்கு மனத்தாழ்மையுடன் நடந்து உமது பாதம் பணிந்திட உதவி செய்யும். உம்மை வருத்தும் வழியில் நாங்கள் செல்லாதப் படிக்கு பார்த்துக்கொள்ளும். என்றுமுள உமது வழியில் நடத்திச் செல்லும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.