எல்லோருக்கும் மதிப்புக் கொடுங்கள்

“கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று “. மற்றும் அது, ” இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும் “, இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள் இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். 1 பேதுரு 2 : 7,8. வாசிக்கிறோம். விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவன் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுப் போனாலும் அவரே நம் எல்லோருக்கும் மூலைக்கல்லாக விளங்குகிறார். இந்த உலகில் வந்து பிறந்த ஒவ்வொருவரும் ஆண்டவரின் பிள்ளைகளே! நாம் யாரையும், வேதனைப்படுத்தவோ, அலட்சியப்படுத்துவதையோ, இறைவன் ஒருநாளும் விரும்பவே மாட்டார். எல்லோரையும் மதித்து நடக்க வேண்டும், மதிப்பு கொடுக்க வேண்டும் என்றே ஆண்டவர் விரும்புகிறார்.

அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டு பணிந்திருங்கள்; அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும், நன்மை
செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப் பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள். இவ்வாறு நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம் எல்லோருக்கும் மதிப்பு கொடுக்கவும், சகோதர, சகோதரிகளிடம் அன்பு செலுத்தவும், கடவுளுக்கு அஞ்சி நடக்கவும், அரசருக்கு மதிப்பு கொடுக்கவும் வேண்டும் என்பதே நம் ஆண்டவரின் திருவுளமாக இருக்கிறது.

“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம் கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்கு சொல்கிறேன். ஏனெனில் மானிடமகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார். மத்தேயு 18 : 10 , 11. என்று வாசிக்கிறோமே, அப்படியிருக்க நாம் யாரையாவது அவமதிப்பதை நம் ஆண்டவர் விரும்புவாரா? பின்னும் ஆண்டவர் சொல்வது என்னவென்றால் உங்கள் சகோதர, சகோதரிகளுள் யாராவது உங்களுக்கு எதிராக பாவம் செய்தால் அவர்கள் தனித்திருக்கும் பொழுது அவர்களின் குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் செவிசாய்த்தால்
நல்லது. உறவு தொடரட்டும், இல்லையென்றால் இரண்டு, மூன்று சாட்சிகளுடைய வாக்கு மூலத்தின் மூலம் விசாரிக்க வேண்டுமாக மத்தேயு 18:15,16 ஆகிய வசனங்களில் எழுதியிருக்கிறதே!

நம்மால் கூடுமான மட்டும் எல்லோரிடமும் சமாதானமாக வாழும்படிக்கே ஆண்டவர் சொல்கிறார். உரோமையர் 12:18. அப்படியிருக்க நாம் மற்றவர்களை நம்மிலும் மேலாக நினைத்து ஆண்டவரின்
திருவுளத்தை நிறைவேற்றுவோம்.

அன்பின் இறைவா!

உமக்கே மகிமை உண்டாகட்டும். நீர் உமது கிருபையால் தாங்கி ஒவ்வொருநாளும் வழிநடத்திக்கொண்டு இருப்பதற்காக உமக்கு கோடான கோடி நன்றி சொல்கிறோம். மற்றவர்களை எங்களிலும் மேலாக கருதி அவர்களுக்கு தர வேண்டிய மரியாதையையும், மதிப்பையும் கொடுக்க கற்றுத்தாரும். எந்த சூழ்நிலையிலும் நாங்கள் பெருமைக் கொல்லாதப்படிக்கு காத்துக்கொள்ளும். நீர் விரும்பும் காரியத்தை மாத்திரம் செய்ய போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.