எளியேன், சிறுமைப்பட்டவன்

திருப்பாடல் 69: 2, 13, 29 – 30, 32 – 33

இயற்கையின் அழிவுக்கு நடுவில் இருப்பது போல் உணர்வதாக திருப்பாடல் ஆசிரியர் உணர்ந்து எழுதுகிறார். ஆழமான நீர்த்திரள், நிலைகொள்ளாத நீர், வெள்ளம் போன்ற உருவகங்கள், அவர் துயரங்களுக்கு மத்தியில் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அவருடைய இதயம் நொறுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அவருடைய மனம் புண்பட்ட நிலையில் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சவுலின் எதிர்ப்பு, உடனிருந்தவர்களின் துரோகம், உயிரைப்பற்றிய பயம் போன்றவை அவருக்கு இந்த கலக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில் அவருக்கு ஆறுதலாய் இருப்பது என்ன? கடவுளின் பாதுகாப்பு. இந்த உலகத்தில் யாரையெல்லாம் அவர் நம்பினாரோ, அவர்கள் கைவிட்ட நிலையில், கடவுளிடம் அவர் பாதுகாப்பை உணர்கிறார். அந்த பாதுகாப்பின் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்கிறார். இந்த புகழ்ச்சி வெறும் உதட்டளவில் வந்த புகழ்ச்சி அல்ல. மாறாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்ற புகழ்ச்சி. கடவுளின் உண்மையான அன்பை முழுவதுமாக அனுபவித்த ஓர் ஆன்மாவின் புகழ்ச்சி. கடவுளை முழுமையாக அனுபவிக்கிறபோதுதான், நம் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் உயிர் பெறக்கூடியதாக இருக்கிறது. அந்த அனுபவம் துன்பத்தை அனுபவிக்கிறபோதுதான் நாம் பெற முடியும்.

துன்பம் தான், நமக்கு பல வாழ்க்கை அனுபவப்பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. துன்பத்தில் எப்போதும் எதிர்மறையாக எண்ணாமல், அதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடியவை எவை? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். அப்படி கற்றுக்கொள்வது, நமது வாழ்வை மாற்றக்கூடிய அனுபவமாக இருக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.