எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 32: 1 – 2, 5, 6, 7

கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் முழுமையாகப் பெற்றவர் தாவீது அரசர். உரியாவின் மனைவி பத்சேபாவுக்கு எதிராக பாவம் செய்தபோது, தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டார். அவரது குழந்தை இறந்துபோனது. ஆனால், தாவீது தான் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்து, அழுது கடவுளிடம் மன்றாடினார். தனது தவறை அவர் ஒப்புக்கொண்டார். கடவுளிடம் அவர் மன்றாடினார். அவரது மனவருத்தம் மற்றும் மனமாற்றம் கடவுளின் மன்னிப்பை அவருக்கு வழங்கியது. கடவுளின் ஆசீரையும் பெற்றுக்கொண்டார்.

இந்த அனுபவம் தான் தாவீதை, இந்த திருப்பாடலை எழுதத்தூண்டியிருக்க வேண்டும். வழக்கமாக, நாம் தவறு செய்கிறபோது, மற்றவர்களின் மன்னிப்பைப் பெறலாம். ஆனால், தாவீது அரசர், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதாவது, உண்மையான மனமாற்றம், கடவுளின் மன்னிப்பை மட்டுமல்ல, கடவுளின் அருளையும், ஆசீரையும் நிரம்பப்பெற்றுக்கொடுக்கும். இன்றைய நற்செய்தியிலும் கூட, திக்கிப்பேசுபவரை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். நோய்க்கு காரணம், ஒருவர் செய்த பாவம் என்பது இஸ்ரயேல் மக்களின் கருத்து. அப்படிபட்ட பாவம் செய்த மனிதனை இயேசு குணமாக்குகிறார். அதாவது, ஆசீரால் நிரப்புகிறார். அதற்கான காரணம், அவன் தன்னுடைய பாவங்களுக்காக மனம்வருந்தியிருக்கிறான். எனவே, கடவுள் அவனை மன்னித்து, அவனுக்கு தன்னுடைய அருளையும் சேர்த்தே வழங்கியிருக்கிறார்.

நம்முடைய வாழ்வில், நாம் தவறு செய்கிறபோது, கடவுளிடம் நம்பிக்கையோடு திரும்பி வர வேண்டும். அந்த நம்பிக்கை கடவுளின் மன்னிப்பை மட்டுமல்ல, கடவுளின் அருளையும் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.