ஒரு குழந்தையின் ஏக்கம்

விமலா தனக்கு வந்த விசாவை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் பெரிதும் மகிழ்ந்தாள். ஏனெனில் இன்னும் ஒரு வாரத்தில் அவள் லண்டன் போகப் போகிறாள். அதற்கான விசா வந்து விட்டது. இனி என் வாழ்வில் எல்லாம் சந்தோசமே என்று பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதற்குமுன் இங்கு உள்ள எல்லா காரியங்களையும் ஒழுங்குபடுத்தவேண்டும் என்று அதற்கான யோசனையில் மூழ்கினாள்.

விமலா நன்கு படித்தவள். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புபவள். அவளின் பெற்றோர் எட்டு வருடங்கள் முன் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். நல்ல கணவர்.திருமணமான அடுத்த ஆண்டிலேயே அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இபொழுது தனது குழந்தைக்கு ஏழு வயதாகிறது. ஆனால் குழந்தை சிறிது ஊனமுடன் இருப்பதால் மற்ற குழந்தைகள் போல் அதுவால் ஓடியாடி விளையாட முடியாது.

போன வருஷம் தனது கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் மனது உடைந்துபோன விமலா மிகவும் கவலைக்குள்ளானாள். கணவனும் இல்லை. குழந்தையும் ஊனம் . அதனால் வாழ்க்கையே வெறுத்துவிட்டது. அவளின் தோழிகள் அவளை ஆறுதல் படுத்தி அவளை லண்டன் செல்லுமாறும் இடம் பெயர்ந்து சென்றால் இந்த கவலைகள் யாவும் மறையும் என்று யோசனை சொன்னார்கள். அந்த யோசனை அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் குழந்தையை என்ன செய்வது என்று யோசித்த அவள் குழந்தையை மிகவும் பொறுப்பாக பார்த்துக்கொள்ள ஒரு செவிலியத்தாயை ஏற்பாடு செய்ய முயற்சி செய்தாள். அவள் விரும்பிய பிரகாரம் கிடைத்தது. அதனால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தான் லண்டன் போக ஏற்பாடு செய்து இருந்தபொழுது தான் விசா வந்துள்ளது.

ஒருவாரம் முடிந்து விமலா லண்டன் சென்றாள். கை நிறைய சம்பளம். புதுப்புது நண்பர்கள். தன் குழந்தைக்கு அங்கிருந்து விதவிதமான விளையாட்டு பொருட்களை அனுப்பி வைத்தாள். விமலாவுக்கு சந்தோஷம் கிடைத்தது. ஆனால் குழந்தைக்கு தன் அம்மா இல்லாத ஏக்கம். குழந்தையின் எட்டாவது பிறந்தநாள் வந்தது. பிறந்த நாளை நன்றாக கொண்டாடும்படி அங்கிருந்து சில பரிசு பொருட்களை அனுப்பினாள் செவிலியத்தாய் அவைகளை குழந்தையிடம் காண்பித்து பாரு, அம்மா உனக்கு எத்தனை விதமான பொருட்களை அனுப்பி உள்ளார்கள் ,இதை வைத்து விளையாடு என்று சொன்னார்கள்.

குழந்தைக்கு தன் தாய் இல்லாததால் அவைகளின்மேல் விருப்பம் ஏற்படவில்லை.போனவருஷம் பிறந்த நாளுக்கு அம்மா கூட இருந்தார்கள். இந்த வருஷம் இல்லையே என்று அழுதது. ஒரு தனி அறையில் சென்று தன் அம்மாவை நினைத்து அம்மா, எனக்கு இந்த பரிசுப் பொருட்கள் எல்லாம் வேண்டாம்.நீங்கள் தான் வேண்டும். நீங்கள் என்னுடன் இருக்கவேண்டும். உங்கள் அன்புமட்டும் எனக்கு போதும். இந்த பொருட்கள் எனக்கு வேண்டாம். உங்கள் அன்புக்கே ஏங்குகிறேன் என்று ஏக்கமுடன் கண்ணீர் விட்டது.

அன்பானவர்களே! இப்படிதான் நம் ஆண்டவரும் என் மகனே! என் மகளே! நான் உங்களுடன் இருக்கிறேன். உங்களுக்காக என் உயிரையும் கொடுத்து மீட்டேன். ஆனால் நீங்கள் என்னைவிட்டு இந்த உலகப் பொருட்களின்மேல் ஆசை வைத்து என்னை விட்டு தூரமாய் செல்கிறீர்களே என்று நமக்காக ஏங்குகிறார்.

ஒரு தாயைப்போல் உங்களைத் தேற்றுவேன். கர்ப்பத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்கு ஒரு தாய் இரக்கம் காட்டாமல் இருப்பாளோ? ஒருவேளை அவள் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று
இயேசுகிறிஸ்து நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். எசாயா 66:13 மற்றும் 49:15.ஆகிய வசனங்களில் காணலாம்.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.