கடவுளால் எல்லாம் இயலும்.மாற்கு 10:27

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நமது வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும், பாடுகளையும் நினைத்து நமது மனம் சோர்ந்து போய் இருக்கலாம். ஆனால் அந்த துன்பத்தின் வழியாக நாம் நடக்கும் போது அதில் ஏற்படும் அனுபவத்தினால் நிறைய காரியங்களை கற்றுக்கொள்ளலாம். அதனால்தான் தாவீது சொல்கிறார். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது. அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன். சங்கீதம் 119:71.

ஒரு ராணுவ வீரன் ஒருவன் முகாமில் தீவிரமாக யாருக்கும் பயப்படாமல் தைரியத்தோடு சண்டை செய்தானாம். ஆனால் அவனுக்கு ஒரு வியாதியினால் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தானாம். எப்படியும் உயிர் போகப்போகிறது. இராணுவத்தில் இறந்தால் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த திருப்தி இருக்கும் என்று நினைத்து தீவிரமாக சண்டை செய்தான். இதைப்பார்த்த அந்த நாட்டு ராஜா இவன் நம் படையில் இருந்தால் நமக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்று நினைத்து அவனை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்து சென்று அவனுக்கு உண்டான எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தாராம். அவனுக்கும் நல்ல சுகம் கிடைத்தது. ஆனால் சுகம் பெற்ற அவன் நான் ஏன் சாகவேண்டும். நான் இன்னும் அநேகநாள் உயிர் வாழ ஆசைப்படுகிறேன் என்று சொல்லி இராணுவத்தில் இருந்து பின்வாங்கி விட்டானாம். அவன் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் சண்டையிட்டு நாட்டுக்கு உதவி செய்தான். அவனுக்கு சுகம் கிடைத்ததும் வாழ ஆசைப்பட்டு தன் கடமையை மறந்துவிட்டான்.

நாமும் இப்படித்தான் பலநேரங்களில் நமது கடமையை மறந்து செயல்படுகிறோம். அதனால்தான் ஆண்டவர் சில நேரங்களில் நாம் கஷ்டங்களின் வழியாக கடந்து செல்ல அனுமதிக்கிறார். அதன்மூலம்  நாம் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். அதனால் பிறர்க்கு உதவமுடியும். அதனால் எந்த ஒரு கஷ்டத்திலும் முறுமுறுக்காமல் அதை பொறுமையோடு சகித்தால் யோபுவைபோல இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ள ஆண்டவர் உதவி செய்வார் என்னை கொன்று போட்டாலும் அவர் பேரில் பற்றுதலாய் இருப்பேன் என்று மன உறுதியோடு இருப்போமானால் நாம் விரும்பும் யாவற்றையும் ஆண்டவர் நமக்கு அருள்செய்வார். ஏனெனில் அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே.

ஜெபம்

அன்பின் தகப்பனே, நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் யார்? நீர் யாவற்றையும் செய்ய வல்லவர். உம்மால் முடியாதது ஓன்றுமில்லையே. உமது வேதத்தில் உள்ள அதிசயங்களை நாங்களும் பெற்றுக்கொள்ள எங்கள் கண்களை திறந்தருளும். எங்கள் தேவைகள் யாவையும் அறிந்தவர் நீர் ஒருவரே. உம்மையே நம்பியிருக்கிறோம். எங்கள் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக. உம்முடைய வேதத்தை நேசிப்பவர்களுக்கு நீர் மிகுந்த சமானாத்தை அருளிச் செய்கிற தேவன். நீரே எல்லாவற்றையும் பொறுப்பெடுத்து ஆசீர்வதித்து வழிநடத்தும் பரம தேவனே!ஆமென்!!அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.