கடவுள் நமக்கு இருமடங்கு நன்மைகளை இன்றே தருவார்.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நம்பிக்கையோடு காத்திருக்கும் நம்மை பார்த்து நம் ஆண்டவர், நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக்கைதிகளே,  உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்:இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன், என்று செக்கரியா 9: 12ல் கூறுகிறார். நாம் பல நேரங்களில் பலப்பல பாவங்களை செய்துவிடுகிறோம். நம்முடைய அவசர புத்தியினாலும், கோபத்தினாலும், சுயநலத்தினாலும், தற்புகழ்ச்சியின் காரணத்தினாலும் அவ்வாறு செய்துவிடுகிறோம். ஆனால் அன்பே உருவான நம்முடைய தேவன் நம் பாவங்களை மன்னித்து நம்முடைய குற்றம்  குறைகளை நம்மிடத்தில் இருந்து நீக்கி நமக்காக சிலுவை சுமந்து, அடிக்கப்பட்டு தமது இரத்தத்தை கொண்டு நம்மை சுத்திகரித்த வண்ணமாய் தமது ஜீவனையே கொடுத்து நம்மை மீட்டு என் பிள்ளைகளே இன்றே நீங்கள் அரணுக்குத் திரும்புங்கள் என்று சொல்கிறார்.

நம்மில் எத்தனை பேர் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அவருக்கு பயந்து நடக்கிறோம்,என்று நாம் ஒவ்வொருவரும் நமது இருதயத்தை ஆராய்ந்துப் பார்ப்போம். ஏனெனில் நம்முடைய இருதயத்தில் தங்கியிருக்கும் தூய ஆவியானவர் நாம் செய்யும் செயல்களுக்கு தவறு, தவறில்லை என்று நம்முடைய மனச்சாட்சியின் மூலம் திட்டமும், தெளிவுமாக விளக்கி காண்பிக்கிறார். ஆனால் நாம் அதை புறம்பே தள்ளிவிட்டு நமக்கு நாமே சமாதானம் சொல்லி அநேக தவறுகளை செய்துவிடுகிறோம். ஆனாலும் நம் தேவன் நமக்கு மனம் இரங்கி நன்மைகளை செய்ய காத்திருக்கிறார்.

திரண்டுவரும் மேகம்போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப்பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு,நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஒடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதியவைப்போம். அவர்தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது கடவுளின் அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். தேவதிதேவனே அவ்வாறு செய்தாரானால் நாமும் நமக்கு கிடைக்க போகும் இரட்டிப்பான நன்மைகளுக்கு நமது ஓட்டத்தை பொறுமையோடு ஓடி முடித்து வெற்றி வாகை சூடுவோம். நமக்கு வரும் பாடுகளில் மன உறுதியோடு இருந்து இரு மடங்கு ஆசீர்வாதத்தை யோபுவைப்போல் பெற்றுக்கொள்வோம்.

இந்த தவக்காலத்தின் நாட்களில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் சித்தம் நன்கு அறிந்து அதன்படியே செய்து அவரிடத்தில் இருந்து இருமடங்கு ஆசீர்வாதத்தை பெற்று மனமகிழ்ச்சியோடும், உறுதியோடும் வாழ்ந்து அவரின் பெயருக்கே மகிமை சேர்ப்போம்.

ஜெபம்.

அன்பின் தெய்வமே,எங்களுக்கு இருமடங்கு ஆசீரை வழங்குபவரே உம்மை துதிக்கிறோம், போற்றுகிறோம். நீர் எங்களுக்கு வாக்குகொடுத்த வண்ணம் எல்லாவற்றையும்,செய்து கொடுப்பவர் நீரே! எங்கள் குற்றம்,குறைகளை காணாமல் உமது நாமத்தின் கிருபையினால் எங்களுக்கு மனமிரங்கி எங்கள் வேண்டுதலையும்,விண்ணப்பத்தையும் கேட்டு எங்கள் தேவைகள் யாவையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும். எங்கள் விண்ணப்பம் தூபமாகவும், ஜெபமாகவும்  உமது சந்நிதியில் வருவதாக! பொறுப்பெடுத்துக்கொள்ளும். ஆசீர்வதியும் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.