கிறிஸ்துமஸ் பிறப்பு விழா

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள் !!!!

கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி
உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக!

25.12.2017 – லூக்கா 2: 1 – 14
திருப்பாடல் 96: 1 – 2, 2 – 3, 11 – 12, 13
”ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்”

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுவதற்கு திருப்பாடல் ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். கடவுளுக்கு ஏன் புதிய பாடலை பாட வேண்டும்? பாடல்கள் என்பது இறைவனின் மகிமையையும், வல்ல செயல்களையும், நம்முடைய நன்றியுணர்வையும் வெளிப்படுத்தக்கூடியவை. அவை ஏற்கெனவே பெற்ற இறையனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பெற்றவை. இப்போது, புதிய இறையனுபவத்தைப் பெற இருக்கிறோம். எனவே, இந்த புதிய இறையனுபவத்தின் அடிப்படையில் எழுத, ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.

இப்போது பெறுகிற புதிய இறையனுபவம் என்ன? அது தான், கடவுள் மீட்பரை, மெசியாவை நமக்கு அனுப்புகிற அனுபவம். கடவுளே தன் மக்களை மீட்பதற்காக மண்ணுலகிற்கு இறங்கி வருகிற அனுபவம். எப்போதெல்லாம் மக்கள் அடிமைத்தனத்தின் கட்டுக்களில் இருந்தார்களோ, அப்போதெல்லாம் அவர்களை மீட்பதற்கு அரசர்களையும், இறைவாக்கினர்களையும் ஆண்டவர் பயன்படுத்தினார். அவர்கள் வழியாக தன்னுடைய வல்ல செயல்களை நிறைவேற்றினார். ஆனால், இப்போது இறைவனே வர இருக்கிறார். அவரது வல்ல செயல்களை நாம் கண்கூடாக பார்க்க இருக்கிறோம். அது ஒரு புதிய இறையனுபவம். அந்த இறையனுபவத்தைப் பெறுவதற்கு நாம் கொடுத்துவைத்தவர்கள். எனவே, ஆண்டவரிடமிருந்து பெறுகிற இறையனுபவத்தை, மற்றவர்கள் பெறும் வண்ணம் நாம் சிறப்பாக பாடல்களை எழுதி, இறைவனைப் போற்ற வேண்டும்.

இறைவனின் அனுபவம் ஓர் இனிமையான அனுபவம். அந்த அனுபவத்தை நாம் பெற்றிருந்தால், அதை நம்மோடு வைத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்களும் பெறும் வண்ணம், அதனை பாடல்களாக, இறைவனின் மகிமையை வெளிப்படுத்தும் வடிவங்களில் நாம் வெளிப்படுத்த வேண்டும். அந்த பணியை நாம் நம்பிக்கையோடு செய்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
——————————————————–

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா? அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா? இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா? கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்பி, கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றிய செய்தியை, சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.

கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, ஏராளமான பணத்தை நாம் தேவையில்லாமல் வாரி இறைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு பல நல்ல செயல்பாடுகளும் நல்ல உள்ளங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு பல நல்ல மக்கள் சிறப்பான உதவிகளைச் செய்து, இந்த திருவிழாக்களின் நோக்கத்தை இன்னும் உரக்க, இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒருபுறம் கொண்டாட்டம் என்கிற பெயரில் தேவையில்லாமல் பணத்தை வீண், ஆடம்பர செலவு செய்துகொண்டிருந்தாலும், மறுபுறம் உதவிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. நாம் கொண்டாடக்கூடிய கிறிஸ்து பிறப்பு விழா எப்படி இருக்கப்போகிறது? என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய கேள்வி.

கிறிஸ்துமஸ் பெருவிழாவை வெறும் சடங்கோடு, ஆடம்பரங்களோடு கொண்டாடிவிட்டுச் செல்லாமல், ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய விழாவாக இதைக் கொண்டாடினால், அது தான் இந்த விழாவின் சிறப்பு. அதுதான், அதுதான் பாலன் இயேசுவுக்கு நாம் கொடுக்கும் உண்மையான கிறிஸ்துமஸ் பரிசு.

 

கிறிஸ்துமஸ் பெருவிழா

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா ஏன் டிசம்பர் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும்? ஆங்கில வருடத்தை “கிறிஸ்து பிறப்பிற்கு முன்” மற்றும் ”கிறிஸ்து பிறப்பிற்கு பின்” என்றுபிரித்திருக்கிறோம். அப்படிப்பார்த்தால், இயேசு பிறந்தது ஜனவரி முதல் தேதி தானே. பின் ஏன் கிறிஸ்துமஸ் பிறப்புவிழாவை டிசம்பர் 25 ம் நாள் கொண்டாடுகிறோம்?

கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றி இரண்டு வாதங்களை, திருவழிபாட்டு அறிஞர்கள் முன்வைக்கின்றனர். 1. சமய வரலாறு. 2. கணக்கீடு. முதல் கூற்றுப்படி, உரோமைப் பேரரசன் அவ்ரேலியுஸ் கி.பி.274 ம் ஆண்டு, சூரிய கடவுளுக்கு தனது ஆட்சி பொறுப்பில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். அதனை டிசம்பர் 25 ம் நாள் கொண்டாட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். ஆனால், அவனுடைய உள்நோக்கம் விழா கொண்டாடுவது கிடையாது. மாறாக, இந்த விழா மூலம், மக்கள் அனைவரையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரே கலாச்சாரத்தின் கீழ், தனது ஆட்சியை பலப்படுத்தவே ஆகும். கிறிஸ்தவர்களை உரோமை கிரேக்க விழா மோகத்திலிருந்து, காக்கும் முயற்சியாக உரோமைத் திருச்சபையானது கிறிஸ்து பிறப்பு விழாவையும் இதே நாளில் கொண்டாட ஆணை பிறப்பித்தது. இதுதான் சமய வரலாறு பற்றிய கூற்று.

இரண்டாவது கூற்றுப்படி, பழைய திருத்தந்தையர்கள் மற்றும் புனிதர்களின் மறையுரைகளிலிருந்து மார்ச் 12 ம் தேதி இயேசுவின் பாடுகள் கொண்டாடப்பட்டது, என்பதை நாம் அறியலாம். இதன்படி, மார்ச் 25 ம் நாள் தான் மரியாளுக்கு, கபிரியேல் அதிதூதர் மங்கள வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். பழங்கால முறைப்படி மனித வாழ்வின் தொடக்கத்தையும், முடிவையும் ஒரேநாளில் முழு எண்ணிக்கை வருமாறு கணக்கிட்டனர். இந்த வாதத்தின்படி, மார்ச் 25 ல் இயேசு கருவில் உருவானார். அதிலிருந்து சரியாக, ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெறும் காலத்தைக் கணக்கிட்டால், டிசம்பர் 25 ல் இயேசு பிறந்திருக்க வேண்டும். இரண்டு சிந்தனைகளுமே வேறு வேறாக இருந்தாலும், அடிப்படையில் அவைகள் சொல்ல வருவது, டிசம்பர் 25 ம் தேதி, தொடக்கத்தில் இயேசு பிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டது என்பதுதான். இயேசு பிறப்பு விழா நமது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் நிறைவாகத் தரட்டும். அனைவருக்கும் இயேசு பிறப்பு நல்வாழ்த்துகள்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.