கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழா

இந்த விழா ஐந்தாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்த விழா மார்ச் மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு 9 மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இது தவக்காலம் அல்லது உயிர்ப்பு பெருவிழாவின் காலங்களில் வந்ததால், இவ்விழா குறித்துக்காட்டும் மகிழ்ச்சி பண்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, பிற்காலங்களில் டிசம்பர் 18 ம் தேதிக்கு, இந்த விழா மாற்றியமைக்கப்பட்டது.

இந்த விழாவானது, மரியாளின் முன்னறிவிப்பு, இயேசு கருவில் உருவான விழா, இறைமகன் மனிதரான விழா என, பல பெயர்களால் அழைக்கப்பட்டது. 1969 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், இந்த விழாவானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது. புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, இந்த விழா மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும். புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட வேண்டும். இது தவக்காலத்தில் கொண்டாடப்பட்டாலும் பெருவிழா தான்.

இந்த விழாவின் பெயர், மரியாளின் மீட்புப்பணியில் பங்கு குறைவதாகஅர்த்தம் கொள்வதற்காக கொடுக்கப்படவில்லை. மாறாக, இந்த விழா இயேசுவின் மீட்புப்பணியில் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாக அமைகிறது.

நேர்மையுற்றோரின் வாழ்வு

கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும்.

யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த கடமையுணர்வுதான், மரியாளை கலங்கச் செய்கிறது. ஆனால், கபிரியேல் தூதர் ”அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்” என்று சொல்கிறார். அதாவது, நல்ல எண்ணங்களோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை சிறப்பாக வாழ, கடவுளே நமக்கு துணைசெய்வார் என்பது, மரியாளின் வாழ்வில் வெளிப்படுகிறது.

நாம் நேர்மையோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை மற்றவர்கள் அங்கீகரித்து பாராட்டுகிறபோது, நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. இதுநாள் வரை நம்மைக் காத்து வந்த தேவன், இனி வரக்கூடிய நாட்களிலும் கைவிட மாட்டார் என்கிற எண்ணத்தோடு நமது வாழ்வை நாம் வாழ்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.