ஞானத்தைக் கொடுப்பது நம் ஆண்டவரே!

அரண்மனை தெருவில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அங்குள்ள ஒரு பள்ளியில் தனது பிள்ளைகளை படிக்க வைத்தார். ஒரு நாள் அந்த குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லும்பொழுது வழியில் ஒருவர் நிறைய கைவினைப் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும் அந்த குழந்தைகள் தன் அப்பாவிடம் அந்த பொருட்களை எல்லாம் வாங்கித் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது அவர்களின் தந்தை அந்த பொருட்களை தனது குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும்படி சென்று அதன் விலையை கேட்டார்.

வியாபாரி விலையை சொன்னதும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்று நினைத்து தனது குழந்தைகளிடம் இந்த பொருட்களை நானே உங்களுக்கு செய்து தருகிறேன். நான் சிறு பையனாக இருந்தபொழுது இவைகளை செய்யும்படி கற்றுக்கொண்டேன். ஆனால் அதை தொழிலாக செய்யாமல் விட்டுவிட்டேன். ஆனாலும் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்லி தனது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். பிறகு தன் குழந்தைகள் விரும்பிய பொருட்களை அவரே அழகாக செய்துக்கொடுத்தார்.

குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம்.ஏனெனில் விற்ற இடத்தில் பார்த்த மாதிரியே நம் அப்பா செய்துக்கொடுத்துவிட்டாரே! சந்தோஷத்தில் குழந்தைகள் இருவரும் தங்கள் அப்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்கள். ஒருநாள் அந்த பொருட்களை வைத்து தெருவில் உள்ள மற்ற பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தபொழுது அந்த வழியே வந்த சில சுற்றுலா பயணிகள் அதைப்பார்த்து இது மிகவும் அழகாக இருக்கிறது. இதை எங்கே வாங்கினீர்கள்? என்று
கேட்டார்கள்.பிள்ளைகள் இதை எங்கள் அப்பா எங்களுக்கு செய்து கொடுத்தார், என்று சொன்னார்கள்.

இந்த சம்பவத்தை குழந்தைகள் தங்கள் அப்பாவிடம் சொல்லி, அப்பா நாம் இதே மாதிரி நிறைய பொருட்கள் செய்து விற்கலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். அவர்கள் அப்பாவும் குழந்தைகள் ஆலோசனை நன்றாக உள்ளது என்று நினைத்து நிறைய கைவினை பொருட்களை செய்து அதை விற்க ஆரம்பித்தார். ஏனெனில் அவர்கள்குடியிருந்த தெரு அரண்மனை தெரு என்பதால் அந்த வழியாக நிறைய பேர்கள் தினமும் வருவதால் நாளடைவில் அவர்களின் வியாபாரம் முன்னேற்றம் கண்டது. அவர்களின் வறுமை நீங்கியது. அவர்களும் பெயர் சொல்லும் அளவுக்கு தங்களுக்கு என்று சொந்தமாக வீடு கட்டவும் பணம் சம்பாதிக்க முடிந்தது.

அப்பா தன் பிள்ளைகளிடம் உங்களுக்கு எப்படி இந்த ஆலோசனை தோன்றியது? என்று கேட்டார். அதற்கு பிள்ளைகள் அப்பா எங்கள் பள்ளியில் எங்கள் ஆசிரியர் தினமும் திருவிவிலியத்தில் இருந்து ஒரு வசனம் சொல்லித் தருவார்கள். ஒருநாள் அவர்கள் சொல்லித்தந்த வசனத்தின்படியே ஆண்டவரிடம் சொல்லி ஜெபம் செய்தோம். அப்பொழுது இந்த ஆலோசனை தோன்றியது என்று சொன்னார்கள். அது என்ன வசனம் என்று தந்தை கேட்டார். அந்த வசனம் உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும். அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளாமாக எல்லோருக்கும் கொடுப்பவர். நம்பிக்கையோடு ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். அப்பொழுது நமக்கு கொடுப்பார்.யாக்கோபு 1:5. இந்த வசனத்தை வைத்து நாங்களும் நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் ஜெபித்தோம் என்று பிள்ளைகள் சொன்னார்கள்.

அன்பானவர்களே! அவர்களுக்கு உதவி செய்த கடவுள் உங்களுக்கும் செய்வார். அவரிடத்தில் பாரபட்சம் கிடையாது. நம்பிக்கையோடு கேட்டு பெற்றுக்கொண்டு ஆசீர்வாதமாக வாழுங்கள். கொலேசெயர் 2:3ம் வசனமும் இப்படியே சொல்கிறது. ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.