தம் சகோதரர்,சகோதரிகளிடம்,சினம் கொள்வோர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவார்.மத்தேயு 5 : 22

விண்ணும்,மண்ணும்,ஒழிந்துபோகும்முன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ, நான் அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம். அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். இதில் ஒரு சிறு எழுத்தும் ஒழியாது என உறுதியாக சொல்கிறேன் என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார்.

கொலை செய்யாதே: கொலை செய்கிறவர்கள் எவரும் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார் என்று கேள்விபட்டிருப்பீர்கள் ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், தம் சகோதரர், சகோதரிகளிடம், சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ, சகோதரியையோ முட்டாளே” என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். “அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையை பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவு வந்தால் பலிபீடத்தின் முன் காணிக்கையை வைத்துவிட்டு முதலில் அவரிடம் சமாதானமாகுங்கள். என்று இயேசுநமக்கு அறிவுறுத்துகிறார். மத்தேயு 5 : 21 to 24.

தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன். கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று தி.பாடல்கள் 101 :5 ல் உள்ளது.யாராவது நமக்கு விரோதமாய் பேசினாலோ, குற்றம் சொன்னாலோ அதை நாம் பிறரிடம் சொல்லி புலம்புவதைவிட நமக்கு விரோதமாய் பேசியவர்களிடமே நேரிடையாக அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டலாம். ஒருவேளை அவர்கள் மனந்திருந்தினால் ஆண்டவரும் சந்தோஷப்படுவார். இதைத்தான் ஆண்டவரும் விரும்புவார். அதைவிட்டு வேறொரு நபரிடம் சொல்லும்பொழுது நாமும் பாவத்துக்கு உள்ளாவோம். ஆண்டவர் வெறுக்கும் காரியத்தை செய்கிறவர்களாய் ஆகிவிடுவோம். பத்து கட்டளைகளில் அதுவும் ஒரு கட்டளை. விடுதலை பயணம் 20 : 16 ல் பிறருக்கு எதிராக பொய்ச்சான்று சொல்லாதே.என்று உள்ளது.

அன்பானவர்களே! ஒவ்வொரு விஷயத்திலும் ஆண்டவரின் வார்த்தையின்படியே நாம் நடந்துகொண்டால் எல்லாத் தண்டனை தீர்ப்புக்கும் விலகி காக்கப்படுவோம். வாசிப்பதோடு அல்லாமல் அவற்றை நம்ஒவ்வொரு செயலிலும் காண்பிக்கவேண்டும் என்றே ஆண்டவர் விரும்புகிறார். அவ்வாறு அவருக்கு பயந்து , அவரின் ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்படிந்து நடந்தோமானால் ஆண்டவரும் நம்முடைய செயலில் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து நம்மை பெருகச் செய்வார். இனி யாரையும் அறிவிலி என்றும் முட்டாளே என்றும் சொல்லாதப்படி நமது நாவைக்காத்துக்கொள்வோம். ஆண்டவரின் திருநாமத்துக்கு மகிமையை செலுத்துவோம்.

ஜெபம்

பரலோகத்தின் தேவனே! கிருபையின் நாயகரே!இரக்கத்தின் கன்மலையே! அன்பின் சொருபியே!பொறுமையின் சின்னமே! உம்மை போற்றி துதித்து, வாழ்த்தி மகிழ்கிறோம். நீர் விரும்பும் வாழ்வை நாங்கள் வாழும்படிக்கு ஒவ்வொருநாளும் போதித்து வழிநடத்தும். உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு காத்துக்கொள்ளும். உமது வாக்கை எங்கள் இதயத்தில் பதித்து வைத்து அதன்படியே செயல்படஉதவியருளும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் அன்பின் தந்தையே! ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.