தருமம் செய்யும்பொழுது முகம் கோணாதே:தோபித்து 4 : 7

தோபித்து வாழ்நாள் எல்லாம் உண்மையையும், நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்.அசீரியா நாட்டில் உள்ள நினிவே நகருக்கு நாடு கடத்தப்பட்ட அவரின் உறவினர்களுக்கு பல தருமங்கள் செய்து வந்தவர். இஸ்ரயேலர் எல்லார்க்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டிருந்தபடி திருவிழாக்களின் போது பலமுறை எருசலேமுக்கு சென்று வந்தவர். தனது கால்நடையிலும்,தானியம்,திராட்சை ரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கை எருசலேமில் திருப்பணி புரிந்து வந்த லேவியரிடம் கொடுத்து வந்தவர்.

அவர் தன் வழிமரபில் வந்த அன்னாள் என்பவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.அவன் பெயர் தோபியா. இவர்கள் யாவரும் நாடு கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக இருந்தபொழுது மற்றவர்கள் எல்லோரும் அந்நாட்டின் உணவை உண்டு வாழ்ந்தனர். ஆனால் தோபித்து அந்நிய உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தார். ஏனெனில் தமது முழுமனதுடன் கடவுளை சிந்தனையில் நிறுத்தி உன்னத இறைவனின் விருப்பப்படி வாழ்ந்து வந்தார்.

அசீரிய மன்னன் சனகெரியு யூதா மக்களை கொன்று குவித்து வநதான். அப்பொழுது தோபித்து அந்த சடலங்களை எடுத்து அடக்கம் செய்து வந்தார்.தனது இன மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துவந்தார். அதனால் மன்னர் அவரைக்கொல்ல வகை தேடினான்.இதை கேள்விப்பட்டு அவர் எல்லாவற்றையும் விட்டு தன் மனைவி யையும்,தனது குழந்தையையும் எடுத்துக்கொண்டு தலைமறைவானார். அடுத்த ஆட்சியில் திரும்ப அந்நாட்டுக்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் இரவு முற்றத்தில் படுத்து உறங்கிய பொழுது ஒரு குருவி சூடான எச்சத்தை அவர் கண்களில் போட்டுவிட்டது இதனால் அவர் கண் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்து போனார். தனது மனைவி அன்னாள் கைவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்கள். இந்தச் சூழ்நிலையிலும் தோபித்து தனது மகன் தொபியாவுக்கு பலநல்ல பழக்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார். இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஒருநாள் ஆண்டவரிடம்,ஆண்டவரே நீர் நீதியுள்ளவர். உம் செயல்கள் நேரியவை, உமது வழிகள் அனைத்திலும் உண்மையும், இரக்கமும் உண்டு. இப்பொழுதும் ஆண்டவரே உமது விருப்பப்படியே வழிநடத்தும்.நான் மண்ணானவன் எல்லா துயரிலிருந்தும் என்னை மீட்டுவிடும் என்று மன்றாடினார்.

அப்பொழுது ஆண்டவர் அவர்மேல் கருணைக் கொண்டு வெகுகாலத்திற்கு முன் மேதியா நாட்டில் வாழ்ந்து வந்த கபேலிடம் 400 கிலோ வெள்ளியை கொடுத்து வைத்தது ஞாபகம் வரவே தன் மகன் தோபியாவிடம் அதை அறிவித்து அதை நீ சென்று வாங்கி வா என்று அனுப்புகிறார். நீ உனக்கு வழிகாட்ட யாரையாவது உடன் அலைத்துச் செல். அவருக்கு உண்டான கூலியை கொடுத்துவிடுவோம் என்று சொல்கிறார். கருணையும், இரக்கமும் நிறைந்த ஆண்டவர் ஒரு வானதூதரை அனுப்பி அவருக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய அனுப்புகிறார்.

அன்பானவர்களே! ஆண்டவர் தொபித்துக்கு மனம் இரங்கி அவரின் மன்றாட்டை கேட்டு ஒரு வானதூதரை அனுப்புகிறார் நாமும் இதைப்போல் ஆண்டவரிடம் கேட்போமானால் ஆண்டவர் தமது தூயஆவியை அனுப்பி நம்முடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி நம்மை காத்து,தப்புவித்து,ஆசீர்வதித்து வழிநடத்துவார். தோபித்து தமது மகனுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்த்ததுபோல் நாமும் நமது பிள்ளைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்தால் ஆண்டவர் நிச்சயமாக தமது தேவதூதனை அனுப்பி எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பார்.

வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்து விடவேண்டும். கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்கு கைம்மாறு கிடைக்கும். அனைத்து காரியத்திலும் கவனமாயிருக்க வேண்டும். பிடிக்காத எதையும் செய்யக்கூடாது. உணவில் ஒரு பகுதியை பசியோடு இருப்பவர்களுக்கு கொடுக்கவேண்டும். தேவைக்கு மேல் இருப்பதை எல்லாம் தர்மம் செய்ய வேண்டும்.தருமம் கொடுப்பதற்கு முகம் கோண கூடாது. ஞானிகளிடம் அறிவுரை கேட்கவேண்டும்.
எல்லாக்காலத்திலும் கடவுளைப் போற்றவேண்டும். வழிகள் யாவும் உண்மையாக இருக்கவேண்டும்.இக்கட்டளைகள் யாவையும் நினைவில் வைத்து உள்ளத்தை விட்டு நீங்காமால் காத்துக்கொள் என்று தோபித்து தனது மகன் தோபியாவுக்கு அறிவுரை வழங்குகிறார். இதை வாசிப்பதோடு அல்லாமல் நாமும் முடிந்தவரை நம் வாழ்வில் பின்பற்றினால் நம்மோடும் தேவத்தூதன் வருவார். தோபித்து 4 ம் அதிகாரத்தை வாசித்து அதன்படியே செயல்படுங்கள்.

ஜெபம்

அன்பின் ஊற்றாகிய இறைவா! உம்மை போற்றி துதிக்கிறோம். நீர் எங்களுக்கு கற்றுக்கொடுத்த அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து நடக்க உதவி செய்யும்.மறைவான பாவங்களில் இருந்தும் எங்களை விடுவித்து காத்தருளும்.பிறர்க்கு எங்களால் ஆன உதவிகளை செய்து அவர்களை அன்பு செய்ய போதித்து வழிநடத்தும். இயேசுகிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் தந்தையே! ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.