திக்கற்றவர்களுக்கும்,அனாதைக்கும்,நீரே துணை. தி.பாடல்கள் 10 : 14

கடவுளாகிய ஆண்டவர் தாயின் கருவிலே தெரிந்துக்கொண்டு நம் பிறப்பை அறிந்தவராக இருக்கிறார். அவரின் நீதி வானம் வரைக்கும் எட்டுகிறது. அவர் மாபெரும் செயல்களை செய்கிறார்.அவருக்கு நிகரானவர் யார்? நாம் இன்னல்களையும், தீங்குகளையும்,காணும்படி செய்தாலும் பாதாளத்திலிருந்து தூக்கி விடுவித்து மீண்டும் உயிர் அளிப்பவர் அவரே! திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையாகவும்,காப்பாளராகவும், இருப்பவர் அவரே! தனித்திருப்போருக்கு உறைவிடமானவரும் அவரே!

ஒரு அழகிய கிராமம் ஒன்றில் மலர்விழி தனது தாய், தந்தையுடன் ஒரே செல்லப்பிள்ளையாக வசித்து வந்தாள். கஷ்டம்,கவலை என்றால் என்ன என்று தெரியாமல் அவள் பெற்றோர் அவளை கண்ணின் மணியைப்போல் காத்து அவள் கேட்கும் யாவற்றையும் வாங்கிக்கொடுத்து அவளை மிகவும் நேசித்து வளர்த்து வந்தனர். எப்போதும் போல அன்றும் அந்த கிராமத்தில் உள்ள அவள் படித்த பள்ளிக்கு காலை கிளம்பி போய்விட்டாள்.அவள் 6 ம் வகுப்பு படித்து வந்தாள்.

அவள் போன சிறிது நேரத்தில் அவள் தந்தைக்கு நெஞ்சு வலி வந்தது. உடனே அருகில் உள்ள ஒரு நகரத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கே மருவத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார். அவள் அம்மாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிறகு உறவினர், நண்பர்கள் அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். காலையில் சந்தோஷமாக தனது அப்பாவிடம் சொல்லிச் சென்ற அவள் மாலை தனது அப்பாவை இறந்த நிலையில் பார்த்தது அவளை மிகவும் பாதித்தது.எல்லாக் காரியமும் முடிந்தவுடன் அவரவர் பிரிந்து சென்றனர். அம்மாவும், மகளும் தனித்து விடப்பட்டனர். பிறகு அவள் தன் தாயின் அரவணைப்பில் தன்னைத் தேற்றிக்கொண்டு படித்து வந்தாள்.

இப்படியாக இரண்டு வருஷம் கழிந்தது.அவள் இப்போது 8ம் வகுப்பு படித்தாள்.ஒருநாள் தனது அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனது.அந்தத் தாய் தனது கணவனின் பிரிவை மனதுக்குள்ளே வைத்து துக்கித்ததால் அவர்களுக்கும் நெஞ்சு வலி வந்தது. மருத்துவர் பரிசோதித்து விட்டு நீங்கள் கவலைப்பட்டு வீணாக உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள், என்று அறிவுரை சொல்லி மாத்திரை எழுதிக் கொடுத்து இவற்றை தவறாமல் சாப்பிடுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால் அந்த தாயும் ஒருநாள் திடிரென்று இறந்துவிட்டாள். இப்பொழுது மலர்விழி ஒரு அனாதை ஆனாள்.

அவளின் உறவினர்களான தாய்மாமா அவளை பராமரிப்பதாக சொல்லிவிட்டு அங்குள்ள சொத்தை எல்லாம் அபகரித்துக்கொண்டு அவளை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டனர். 9 ம் வகுப்பு படிக்கும் அவளுக்கு இந்த உலகில் அனாதையானது மட்டுமல்ல. அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் திக்கற்ற நிலையில் எங்கே போவது என்று தெரியாமல் ஒரு ஆலயத்துக்குள் சென்று கடவுளிடம் முறையிட்டு அழுதாள். திக்கற்றவர்களையும்,அனாதைகளையும், கைவிடாத ஆண்டவர் அங்குள்ள ஆசிரமத்தில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். அவளும் தனது சூழ்நிலையை கருத்தில் கொண்டு மிகவும் ஆர்வத்தோடு படித்து ஒரு நல்ல மருத்துவர் பட்டம் பெற்று அநேகருக்கு அவள் ஆறுதலாய் இருக்கும்படி ஆண்டவர் அவளின் வாழ்க்கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.நம் ஆண்டவர் யாரையும் கைவிடவேமாட்டார். அவரை நம்பினோர் நிச்சயம் வாழ்ந்து செழிப்பார்கள்.

யோவான் 14 : 18ல் நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன் உங்களிடம் திரும்பி வருவேன்.என்று வாக்கு அளித்துள்ளார். அவர் வாக்கு மாறாதவர்.அப்படியே செய்வார். இன்னும் தி.பாடல்கள் 66:19,20ல் நம் விண்ணப்பத்தின் குரலைக் கேட்பவர் என்று எழுதியிருக்கிறது. நீதிமொழிகள் 23:10 & 31: 8 யோபு 29 : 12 & எரேமியா 49 : 11 மற்றும் ஏசாயா 10 : 2 ஆகிய வசனங்களில் திக்கற்றவர்களாக விடேன் என்று எழுதியிருக்கிறது.

எங்கள் அன்பின் தெய்வமே!!

உம்மை போற்றி துதிக்கிறோம்.நீர் உம்மிடத்தில் வருகிற ஒருவரையும் கைவிடாத தேவன். உமது அன்பிற்கும், இரக்கத்திற்கும் எல்லையே இல்லை.அவைகள் தினந்தோறும் புதியது.அனுதினமும்
எங்களை விசாரிக்கும் ஆண்டவர் நீரே!உமது பாதத்தில் எங்களை சமர்ப்பிக்கிறோம். நீரே முற்றிலும் பொறுப்பெடுத்து அனுதினமும் கரம் பிடித்து காத்து வழிநடத்தியருளும். உம்மை நேசிப்பவர்களுக்கு மிகுந்த சமாதானத்தை கொடுப்பவர் நீரே! உமக்கே துதி, கனம், மகிமை உண்டாகட்டும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

1 Response

  1. Malarvizhi.M says:

    It’s my name and my life story how it’s possible before reading this I pray to God about my orphaned omg my Lord talked me with these word of god

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.