திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறியிலே நடப்போம்

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.

நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப கடவுள் கைம்மாறு செய்கிறார். நாம் மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார். ஆனால் தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்கு பணியாமல் அநீதிக்கு பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும், சீற்றமும் வந்து விழும். தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். நன்மை செய்யும் அனைவருக்கும் பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.ஏ னெனில் கடவுள் ஆள் பார்த்து செயல்படுகிறவர் அல்ல.

திருசட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும், அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்: திருசட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர். ஏனெனில் திருச்சட்டத்தை கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை: அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். திருச்சட்டத்தை பெற்றிராத பிறஇனத்தார் அதில் உள்ள கட்டளைகளை  இயல்பாகக் கடைப்பிடிக்கும் பொழுது அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாதபோதிலும் தங்களுக்கு தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள் திருச்சட்டம் கற்பிக்
கும் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்குச் சாட்சி. ஏனெனில் அவர்கள் செய்வது குற்றமா? குற்றமில்லையா என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றன.  நம் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைக் குறித்து இயேசுகிறிஸ்துவின் வாயிலாக கடவுள் தீர்ப்பளிக்கும் நாளில் இவைகள் தெரியும்.

திருச்சட்டம் சொல்வதெல்லாம் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பொருந்தும் என நமக்குத் தெரியும். ஆகையால் நாம் கடவுளுக்கு பயந்து அவர் காட்டிய வழியில் நடந்து ஆபிரகாமைப் போல நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கையால் நாம் பிழைத்துக்கொள்ளும்படி நடப்போம். அப்பொழுது நம்முடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டு பாவங்களை கடவுள் மூடிப்போடுவார். கடவுள் நம்முடைய தீச்செயலைக் கருத்தில் கொள்ளாமல் இருந்தால் நாம் பேறுபெற்றவர் ஆவோம். நீதியையும், உண்மையையும் கடைப்பிடித்து அவருக்கே ஏற்ற பிள்ளைகளாய் மாறி நம்மை இந்த நாளில் அவருக்கே அர்ப்பணிப்போம். இந்த தவக்காலத்தில் நாம் செய்யும் ஏற்புடைய செயல்கள் இவைகளே ஆகும்.

ஜெபம்

அன்பே உருவான இறைவா! உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம். உமக்கு நன்றியை செலுத்துகிறோம். நீர் விரும்பும் முறையில் உம்முடைய ஒழுக்கநெறியில் நடந்து உமது திருச்சட்டத்துக்கு கீழ்படிந்து நடந்து உமக்கே மகிமையை உண்டாக்குகிறோம். எங்கள் பாவங்களை தயவாய் மன்னித்து நல்வழிப்படுத்தி ஆசீர்வதித்து காத்துக்கொள்ளும். உமது திருச்சட்டம் எங்களுக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கட்டும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில்  வேண்டுகிறோம் எங்கள் நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.