திருமண வாழ்க்கை எப்படி போகுது?

மாற்கு 10:2-16

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 27ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

கட்டை விரலில் அடிபட்ட முதியவர் ஒருவர் தையலைப் பிரிக்க மருத்துவமனைக்கு வந்தார். நேரம் ஆக ஆக பதட்டமடைந்து கொண்டிருந்தார். “நான் எட்டரை மணிக்கு செல்ல வேண்டும்’ என்று தவியாய் தவித்தார். மருத்துவர் அவர் முறை வந்ததும் பக்குவமாகத் தையலை நீக்கினார். அவருக்கு வலிக்கக்கூடாது என்று பேசிக்கொண்டே தையலைப் பிரித்த அந்த மருத்துவர், “ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்?’ என்று கேட்டார். அந்த முதியவர், “நான் மருத்துவமனையில் இருக்கும் என் மனைவியோடு சிற்றுண்டி அருந்த சரியாக எட்டரை மணிக்கச் செல்லவேண்டும்’ என்று சொன்னார்.

“உங்கள் மனைவிக்கு என்ன ஆயிற்று’ என்று அக்கறையாக விசாரித்தார் மருத்துவர். “அவள் கொஞ்ச நாட்களாகவே அல்ஜீமர் என்கிற ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறாள்’ என்று முதியவர் சொன்னார்.
“நோய் எந்த அளவிற்கு இருக்கிறது?’
“எதுவும் நினைவில்லை. யாரும் ஞாபகத்தில் இல்லை. என்னைக்கூட அவளால் அடையாளம் காண முடியவில்லை’ என்றார் முதியவர்.

“அப்புறம் ஏன் நீங்கள் தினமும் காலையில் எட்டரை மணிக்கு அவளோடு உணவு சாப்பிடச் செல்லுகிறீர்கள்… நீங்கள் யார் என்று அவளுக்குத்தான் தெரியப் போவதில்லையே!’ என்ற அந்த மருத்துவர் சொன்னதற்கு அந்த பெரியவர் புன்முறுவலுடன், “அவளுக்குத்தான் நான் யாரென்று தெரியாதே தவிர எனக்கு அவள் யாரென்று தெரியுமே’ என்று குறிப்பிட்டார். அதைக் கேட்டதும் மருத்துவரின் உடல் சிலிர்த்தது.
“உண்மையான காதல் அப்படித்தான். உடலைத்தாண்டி மட்டுமல்ல, மனதையும் தாண்டியதாக அது மலருகிறது’ . கடைசி மூச்சு நின்ற பிறகும் அந்த காதல் மலர்ந்துக்கொண்டே இருக்கிறது.

அன்பானவர்களே! உங்கள் திருமணம் கடவுளின் திட்டப்படி நடந்தது. கடவுளே உங்களை இணைத்து வைத்தார். கடவுள் இணைத்ததை நீங்கள் உடைக்கப் பார்க்காதீர்கள். கடவுள் சேர்த்ததை நீங்கள் சிதைக்க பார்க்காதீர்கள். ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவு அளியுங்கள். உங்கள் குடும்பத்தை குதூகலமான குடும்பமாக மாற்றுங்கள். எடுத்துக்காட்டான தம்பதியினராக மாறுங்கள் என விறுவிறுப்பான வார்த்தைகளுடன் வேகமாக வருகிறது இன்றைய பொதுக்காலம் 27ம் ஞாயிறு.

கத்தோலிக்க திருமண அருட்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவனும் மனைவியும் எந்தவித வற்புறுத்தலுமன்றி, எவ்வித வெளி அச்சுறுச்துதலுமின்றி முழுமனதுடன் பரிமாறிக்கொள்ளும் வாக்குறுதி: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருட்சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. குருவும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளே. இவ்வாக்குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது.

கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் இப்புது நிலமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்கு இந்த அருட்சாதனத்தின் வழியாக வலுப் பெறுகின்றனர். ஒருநிலையில் திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருவருட்சாதனத்தின் ஆற்றலால் அவர்கள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர், விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்கள் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர், அவ்விதமே ஒருவர் ஒருவரைப் புனிதப்படுத்துகின்றனர், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகிறார்கள்.

‘இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்த கணவனும், மனைவியும் இன்றைக்கு பிரமாணிக்கமாகவும், ஒரே உடலாகவும் இணைந்திருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமான ஒன்று.

அறிவியலும், தொலை தொடர்புச்சாதனங்களும் பெருகிவிட்ட சூழலில் கணவன் மனைவிடம், அல்லது மனைவி கணவனிடம் பிரமாணிக்கமாக இருப்பது என்பது அரிதாகி போய்விட்டது. “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவரும் விபசாரம் செய்கிறாள்” என்று சொல்வதன் வழியாக ஆண்டவர் இயேசு திருமண வாழ்வில் பிரமாணிக்கமின்மை என்பது விபசாரத்திற்குச் சமம் என்கிறார்.

திருமண வாழ்க்கையை பிரமாணிக்கமாக வாழந்து பாருங்கள். அப்போது தெரியும் அதிலிருக்கும் ருசி. அப்போது தெரியும் அதிலிருக்கும் சிறப்பு. இரண்டு குறிக்கோள்களாடு திருமணம் அமைதல் வேண்டும். அப்படி அமைத்து பாருங்கள். பின் பாருங்கள் நடக்கின்ற அதிசயத்தை, பிரமிப்பை.

1. இறைவனை மாட்சிப்படுத்த
திருமண வாழ்வு அன்பில் கட்டி எழுப்பப்படாவிட்டால் அது முழுமை பெறாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், “இவையனைத்திற்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுறச் செய்யும்” என்று. (கொலோ 3:14). ஆகவே, திருமண உறவுகள் அன்பில் கட்டி எழுப்படவேண்டும். ஏனென்றால் அன்பு இருக்கும் இடத்தில்தான் மன்னிப்பு, தியாகம், புரிந்துகொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எல்லாம் இருக்கும்.

ஆகவே திருமணமானவா்களே நீங்கள் எதற்காக திருமணம் செய்தீர்கள் தெரியுமா? கடவுளை மாட்சிப்டுத்த, உங்கள் வாழ்க்கை முழுவதும் கடவுளை மாட்சிப்படுத்த தான். ஒரே மனநிலையில் வாழந்து அன்பில் ஆண்டவரை பெருமைப்படுத்த தான் நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள்.

மனைவி : என்ன செய்றீங்க?

கணவன் : ஒன்னும் செய்யல.

மனைவி : ஒன்னும் செய்யலயா…? நம்முடைய கல்யாண சான்றிதழை ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.

கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்

அன்பானவர்களே! உங்கள் அன்பு காலாவதி ஆகாத அன்பாக இருக்கட்டும். அது காலம் வரை நீடிக்கட்டும். உங்கள் பொன்னான வாழ்க்கையால் கடவுளைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் தியாகம் நிறைந்த வாழ்வால் கடவுளை மாட்சிப்படுத்துங்கள்.

2. உங்களை மாட்சிப்படுத்த

“ஒரு திருமணத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்றால் இருவர் தேவை. திருமண வாழ்வை தோல்வியடைச் செய்ய வேண்டுமென்றால் ஒருவர் போதும்” என்பார் ஹெர்பர்ட் சாமுவேல் என்ற அறிஞர். திருமணம் என்பது கடவுள் கொடுத்த அருமையான வாய்ப்பு. இருவரும் சேர்ந்து சாதிப்பதற்கான வாய்ப்பு.

போனில்…
”நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்…”
”ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..’

பல இல்லங்களில் சண்டைகள் தினமும் பிறந்துக்கொண்டு இருக்கின்றன. அது மற்றவர்களுக்கு பெரிய வாய்ப்பாக மாறுகிறது. உங்களை பிரிப்பதற்கு அருமையான வசதியாக உள்ளது. உங்களிடம் உள்ளதை பிடுங்குவற்கு அது பெரிய வாய்ப்பாக உள்ளது. ஆககேவ உஷாராக இருஙகள். மிகவும் உஷாராக இருங்கள்.

நம்மிடையே அருமையான வாழ்க்கை நடத்தும் தம்பதியினர் வாழந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். வயதான காலத்தில் மனைவிக்கு கொஞ்ம் கூட முகம் சுளிக்காமல் இரவுபகலாக அவளுக்க பணிவிடை செய்யும் கணவர், வாட்டி வதைக்கும் வறுமை வந்தபோதும் ஒருவரையொருவர் பிரியாமல் அன்பிற்கு சான்று பகரும் தம்பதியினர், கொடி நோய் வந்த போதும் பாசமாய், பக்குவமாய் கவனித்துக்கொள்ளும் தம்பதியனர், கணவன் தீய பழக்கத்தில் இருந்தாலும் அன்பை அள்ளிக் கொடுக்கும் மனைவிகள் என அற்புதமான வாழ்க்கை நடத்தும் பல தம்பதியனர்கள் உங்கள் கண்முன் நிற்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்களைப் போல வாழுங்களேன்.

மனதில் கேட்க…
1. என் திருமண வாழ்க்கையை எப்போதெல்லாம் ரசிக்கிறேன்?
2. எடுத்துக்காட்டான கணவனா அல்லது மனைவியாக வாழ்கிறேனா?

மனதில் பதிக்க…
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் (மாற் 10:9)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.