திறமையானவர்களே தோற்காதீர்கள்…

மாற்கு 9:38-43,45,47-48

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 26ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் நம்மூர் ஆண்மகன்களோ, பார் இல்லாத ஊரில் குடியிருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு குடிப் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. காலையில் 10 மணிக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. காலையிலேயே இவர்கள் இப்படி என்றால், மாலையும், அதையும் தாண்டி இரவிலும் இவர்கள் எப்படி இருப்பார்கள். இது நமது உடலுக்கும் கேடு, நமது வீட்டிற்கும் கேடு என்பதை எப்போது உணர்வார்கள்.

ஒரு கதை உள்ளது, அதாவது ஒரு தேவதை தனது கையில் ஒரு குழந்தையையும், ஒரு மதுபானப் பாட்டிலையும் வைத்துக் கொண்டு ஒருவனிடம் சென்று, ஒன்று இந்த குழந்தையைக் கொல்ல வேண்டும், இல்லை மதுவைக் குடிக்க வேண்டும். இதில் எதை நீ செய்வாய் என்று கேட்கிறது. அதற்கு அந்த மனிதன், குழந்தையைக் கொல்வது பாவம், மதுவைக் குடிப்பதால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்று நினைத்து மதுவைக் குடித்து விடுகிறான். மதுவைக் குடித்ததும் போதை தலைக்கேறி, அந்த குழந்தையைக் கொன்றுவிடுகிறான். இதுதான் குடிகாரர்களின் பரிதாப நிலைமை.

அன்பானவர்களே! உலகில் இருக்கிற எல்லாருமே திறமையானவர்கள் தான். அப்படி திறமையிருந்தும் ஏன் மிகவும் மோசமான பரிதாப நிலையை சந்திக்கிறோம்? ஏன் தோல்விகளைச் சந்திக்கிறோம். பரிதாப நிலையிலிருந்து பிறர் திரும்பி பார்க்கும் நிலைக்கு உயரவும், தோல்வியிலிருந்து வெற்றிக்கு கடந்து செல்லவும் பொதுக்காலம் 26ம் ஞாயிறு நம்மை பாசமாய் அழைப்பதோடு பரிதாப நிலையிலிருந்து போற்றுதற்குரிய நிலைக்கு கடந்து வர மூன்று ஆலோசனைகளையும் வழங்குகிறது.

1. கைகளை கழுவுங்கள்
திறமையானவர்கள் கைகளினால் பாவம் செய்யத் தொடங்கும்போது அவர்கள் மாசடைகிறார்கள். அவர்களின் கரங்கள் இயேசுவின் கரங்கள். அந்த கரங்களை எப்போது பரிசுத்தமாக பேணிக்காக்கவில்லையே அப்போதே அவர்களின் திறமைகள் இல்லமாமல் போகிறது. தோல்வி என்பது எளிதாக அவர்களை தொற்றிக்கொள்கிறது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது என்கிறார் நம் ஆண்டவர் இயேசு.

அரசு அதிகாரிகள் என்றாலே லஞ்சம் ஊழல் இல்லாமல் காரியம் செய்யாதவர்கள் என்ற நிலை நம் நாட்டில் உருவாகிவிட்டது. அது ஓரளவு உண்மை என்றாலும், அத்தி பூத்தது போல் நேர்மையான அதிகாரிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

நம் சமூகத்தில் மாத ஊதியத்தை தவிர, வேறு வழியில் பணம் ஈட்டாதவர்களை பிழைக்க தெரியாதவர்கள், அணுசரனையாக நடக்கத் தெரியாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் குடும்ப உறவுகளேகூட அவர்களை மதிப்பதில்லை.

இதுபோன்ற பல நெருக்கடிகளை கடந்து, ‘லஞ்சம் வாங்க மாட்டேன், விதிகளை மீறி செயல்பட மாட்டேன்…!’ என்று ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் போல் நெஞ்சம் நிமிர்த்தி செயல்படுகிறவர்கள், எதற்கும் வளைந்து கொடுக்காமல் இயங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு சங்கம் போல் இணைந்து சந்தித்து, கருத்து பரிமாறி, தங்களைப்போல் மற்ற ஊழியர்களையும் லஞ்சம் வாங்காதவர்களாக மாற்றி வருகிறார்கள். லஞ்சம் வாங்காத மாசுபடாத கரங்கள் நமக்கு வேண்டும்.

அன்புமிக்கவர்களே! இவர்களைப் போன்று ஒவ்வொரு காரியங்களிலும் கரங்களை பாதுகாக்க வேண்டும். மாசுபடமால், பாவம் செய்யாமல் கரங்களை காக்க வேண்டும்.

2. கால்களை கழுவுங்கள்
திறமையிருந்தும் கால்களுக்கு சரியாக பயிற்சிக் கொடுக்காததால் பல திறமையாளர்கள் சரிவிற்கு செல்கின்றனர். கால்களுக்கு சரியாக பயிற்சி கொடுக்காதவர்களைப் பார்த்து இயேசு சொல்கிறார் “உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள்.
நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட
கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது”.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பது நமக்குத் தெரியும். தெரிந்தும் பலர் அதை மிகவும் கவனமாக கடைப்பிடிப்பதில்லை. இது குறித்த விழிப்புணர்வை மதுரையைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்த குமார் பல இடங்களுக்கும், பள்ளிகளுக்கும் கொடுத்து வருகிறார்.

சாந்த குமார் தான் பணிசெய்யும் பள்ளியை பிளாஸ்டிக்கில்லா பள்ளியாக மாற்றிக் காட்டியதோடு மட்டுமில்லாமல் அருகிலிருக்கின்ற பள்ளிகளையும் ஊர்களையும் மாற்ற வேண்டும் என்ற முனைப்போடும் செயல்பட்டு வருகின்றார். அதற்காக விடுமுறை நாட்களில் தன்னோடு தன் மாணவர்கைளயும் அழைத்து நடந்தே சென்று பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை கொடுத்து வருகிறார். இதனால் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் வந்துள்ளது.

இவருடைய பணியைப் பாராட்டி அவ்வூரிலிக்கும் ஊராட்சி மன்றத்தலைவர் அவருக்கு ஒரு பாராட்டு கூட்டம் ஏற்பாடு செய்து பரிசு வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவரைப் போல முயற்சி எடுப்பவர்களுக்கு தக்க பரிசும் வழங்கப்படும் என்றார்.

அன்புமிக்கவர்களே! இறைவன் கொடுத்த கால்களால் நன்மைகள் பல செய்வோம். நன்மைகள் செய்வதற்காகவே நடப்போம். நன்மைகளை நானிலமெங்கும் நட்டு வைப்போம்.

3. கண்களை கழுவுங்கள்
எந்த நிகழ்விலும் ஒருவர் மட்டும் சரி, மற்றொருவர் தான் தவறு என்ற நிலையிலிருந்து விலகி வர வேண்டும். பார்வையை மாற்ற வேண்டும். இருவரும் சரியாகவோ அல்லது இருவரும் தவறாகவோ கூட இருக்கலாம். அதனால் குற்றத்தை யார் மீது திணிக்கலாம் என்ற பார்வையை விடுத்து நடுநிலைக்கு வருவது தான் நலம் பயக்கும்.

எங்கிருந்து பார்க்கிறோமோ அங்கிருந்து உண்மைகள் மாறும். நமக்குப் பகத் சிங் விடுதலை வீரர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தீவிரவாதி. அதே போல நாம் தீவிரவாதி என்று கருதுபவர்களை வேறுபலர் விடுதலை வீரர்களாகக் கொண்டாடுவார்கள். இது பார்வைக் கோணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

பிறரைக் குற்றம் சொல்லுமுன் அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று நம் கண்களால் கற்பனை செய்து பார்ப்பது மிகவும் நலம். ‘அந்த ஆள் கேரக்டர் சரியில்லை’ என்று குற்றம் சொல்லுமுன் அந்த வாய்ப்பும் வசதியும் நமக்கு வந்தால் நாம் என்ன செய்வோம் என பலமுறை யோசிதத்து பார்க்க வேண்ம். அதுவே ஆரோக்கியமான அணுகுமுறை.

ஆகவே தவறாக பார்க்கும் கண்களை கழுவுவோம். நல்ல பார்வை பெறுவோம். நல்ல கண்கள் நாம் நல்ல நிலையை அடைவதற்கு பெரிதும் துணை புரியும. நல்ல கண்கள் அனைவரையும் நல்லவர்களாக காண்கிறது.

இந்த தவறாக பார்க்கும் பாவத்திலிருந்து இயேசு வெளியே வரச் சொல்கிறர். கேளுங்கள் அவர் குரல், “உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி தூரே எறிந்து விடுங்கள்.

நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட
ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது”.

மனதில் கேட்க…
1. எனக்கு திறமையிருந்தும் நான் தோற்பது ஏன்? காரணத்தை கண்டுபிடித்து விட்டேனா?
2. என்னுடைய கைகள், கால்கள் மற்றும் கண்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேனா?

மனதில் பதிக்க…
ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர் (1கொரி 9:8)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.