“துன்பக் கிண்ணம்”!

செபதேயுவின் மனைவி தன் மக்களுக்காக இயேசுவிடம் பதவிகள் வேண்டியபோது, அவர் கேட்ட கேள்வி: “ நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? யூதர்களின் நம்பிக்கையின்படி, அப்பத்தைப் பகிர்வது ஆசிர்வாதங்களைப் பகிர்வதற்குச் சமம். கிண்ணத்தைப் பகிர்வது என்பது துன்பங்களைப் பகிர்வதற்குச் சமம். இயேசு தம் சீடர்களிடம் தமது பாடுகளைப் பகிர்வதற்கு அவர்கள் ஆயத்தமா என்று வினவுகிறார். தாங்கள் சொல்வது என்னவென்று உணராமலே அவர்களும் “ஆம்” என்கின்றனர். இயேசுவோ அவர்களின் எதிர்கால பணிவாhழ்வை மனதில் கொண்டு, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்கிறார்.

யாக்கோபும், யோவானும் நல்ல சீடர்கள். அவர்கள் இயேசுவுடன் அப்பத்தையும் பகிர்ந்தனர். துன்பக் கிண்ணத்தையும் பகிர்ந்தனர். அவரது அன்பையும், ஆசிர்வாதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுபோல, அவரது பாடுகளிலும், துன்பங்களிலும் பங்கெடுத்தனர். உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்க வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் நல்ல உறவு. இன்று நமது உறவுகளை ஆய்வு செய்து நாம் துன்பக் கிண்ணத்திலும் குடிக்கத் தயாராக இருக்கிறோமா? என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: உறவின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்கள் உமது இன்பத்தையும், துன்பத்தையும் பகிர வேண்டும் என எதிர்பார்த்தீரே. நாங்களும் எங்களது உறவுகளில் இன்பங்களை மட்டுமல்ல, துன்பங்களையும் பகிர்ந்துகொள்ள அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

–அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.