தூய வியாகுல அன்னை திருவிழா

இந்த திருவிழா மரியாளின் துயரங்களை நினைவுகூற, ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். இது ஜெர்மனி மற்றும் போர்த்துகல் நாட்டில் தொடக்க காலங்களில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. போர்த்துகல் நாட்டு மறைப்பணியாளர்கள் தாங்கள் பணியாற்றிய பல இடங்களிலும் இதைக் கொண்டாடினர்.. உதாரணமாக, தமிழ்நாட்டில் ”பத்ரோவாதோ மறைபணியாளர்கள்” என்றழைக்கப்பட்ட இவர்கள் பல இடங்களில் வியாகுல அன்னை ஆலயங்களை எழுப்பி, அந்த பக்தி முயற்சியை வளர்த்தார்கள். திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட் 1721 ம் ஆண்டு இவ்விழாவை அனைத்துலக திருச்சபையும் கொண்டாட வழிவகை செய்தார். அவர் இவ்விழாவை மரியாளின் ஏழு வியாகுலங்களின் விழா என்றழைத்தார்.

தொடக்கத்தில் இந்நாளானது, குருத்து ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று நினைவுகூறப்பட்டது. ஏனெனில் மரியாளின் துயரங்கள், கன்னிமரியாளிடம் பிறந்த கிறிஸ்துவின் பாடுகளோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்பினால் இவ்விழா புனித வாரத்திற்கு முன் கொண்டாடுவது முறையெனக் கருதப்பட்டது. திருத்தந்தை பத்தாம் பயஸ் இத்திருவிழாவை செப்டம்பர் 15 ம் நாள் கொண்டாடும்படி செய்தார். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நாளும் மிகவும் பொருத்தமாய் இருந்தது. ஏனெனில், செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்படும் மரியாளின் விழாவானது, மரியாளின் பிறப்பு விழாவிலிருந்து (செப்டம்பர் 08) எட்டுநாட்களுக்குப் பிறகு என்றும், திருச்சிலுவை விழா கொண்டாடப்பட்ட நாளுக்கு (செப்டம்பர் 14) மறுநாள் என்கின்ற விதத்திலும் அமைந்துள்ளது. இதனால் மரியாளின் துயரத்திற்கும் இயேசுவின் பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

அன்னை மரியாளின் வாழ்வில் அவள் அடைந்த துன்பங்கள், அவளது விசுவாசத்திற்கு தடைக்கல்லாக அமையவில்லை. மாறாக, தனது துன்பங்களை தனது விசுவாசத்தின் படிக்கல்லாக அமைத்துக்கொண்டாள். அவள் சந்தித்த துன்பங்களுக்கு ஏற்ப, அவளது விசுவாசம் உறுதியாக மாறியது. அதைப்போல நமது துன்பங்களும் நமது விசுவாசத்தை வளர்த்தெடுப்பதாக அமையட்டும்.

துன்பங்களில் பங்கெடுப்போம்

சிலுவையின் அடியில் இயேசு தனியாளாக இல்லை. அவரோடு பெண்கள் இருக்கிறார்கள். சில விவிலிய அறிஞர்கள், பெண்களை யாரும் அவ்வளவு மதிக்காத யூதப்பாரம்பரியத்தில், பெண்களை மனிதர்களாகவே கருதாத பண்பாட்டில், அவர்களை யாரும் பொருட்டாக எண்ணாத காரணத்தால், பெண்கள் சிலுவையின் அடியில் நின்றதாக கூறுகிறார்கள். ஆனால், அது சரியான பார்வையாக இருக்க முடியாது. பெண்களின் நிலை தாழ்ந்து இருந்தது உண்மைதான். ஆனால், உரோமை அரசால் கொலைக்குற்றவாளி என முத்திரைக்குத்தப்பட்ட ஒரு குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பது என்பது, ஆபத்தான ஒன்று. அதுவும் பாரம்பரிய அதிகார வர்க்கத்தால், கடவுளை இழிவுபடுத்துகிறவன் என்று சிலுவைச்சாவுக்கு கையளிக்கப்பட்ட ஒரு கைதியோடு உடன்இருப்பது, உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய ஒன்று. இருந்தாலும், பெண்கள் துணிவோடு அங்கே இருக்கிறார்கள்.

இயேசுவோடு இருந்தவர்களுள் முதன்மையானவராக இருக்கிறவர் அவருடைய தாய் அன்னை கன்னிமரியாள். தான் பெற்றுவளர்த்த மகன், குற்றவாளி என்று முத்திரைக்குத்தப்பட்டு, தன்னால் காப்பாற்றப்பட முடியாது வேதனையை ஒரு தாய் அனுபவிப்பது கொடுமையான நிகழ்வு. கண்ணெதிரே மகன் சாகப்போகிற அவலநிலை யாருக்கும் வரக்கூடாது. மரியாளால் நடப்பவற்றைப்புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அதை ஏற்றுக்கொள்கிறாள். இயேசுவை தொடர்ந்து அன்பு செய்கிறாள். சட்டத்தின் முன்னால் இயேசு ஒரு குற்றவாளி. ஆனால், மரியாளுக்கு என்றுமே அவளது அன்பு மகன். தனது மகனின் வேதனையைப்பார்க்க சகிக்காது அவள் ஓடிவிடவில்லை. அவரது வேதனையில் பங்கெடுக்கிறாள். பகிர்ந்துகொள்கிறாள்.

மற்றவர்களின் வேதனையில் பங்கெடுப்பதும், பகிர்ந்து கொள்வதும் கிறிஸ்தவ வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்பதை அன்னை மரியாளின் வாழ்வு நமக்கு எடுத்தியம்புகிறது. வேதனைப்படுகிறவர்களோடு, இன்னல்படுகிற மக்களோடு நம்மை இணைத்துக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.