நன்மை செய்வதில் மனம் தளர வேண்டாம். 2 தெசலோனிக்கர் 3 : 13

இன்றைய சிந்தனை

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் பல ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்கள் தேவைகள் யாவையும் நிறைவேற்றி வந்தார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை. தமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மிகவும் அக்கறையும்,கரிசனையும், உடையவராய் இருந்தார். பேய்களை ஓட்டினார் அநேகரை சுகப்படுத்தினார். இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார்.அவர் தமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியது போல நாமும் கிறிஸ்துவின் திருவுளத்தை நிறைவேற்ற கடமை பட்டவர்களாய் அவரின் மனவிருப்பத்தை அறிந்து அதன்படியே செயல்பட்டு நாமும் நன்மை செய்வதில் மனந்தளராமல் இருப்போமானால் ஏற்ற காலத்தில் அதின் பயனை பெற்றுக்கொள்வோம்.

17ம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் ஒரு போதகர் ஒரு கிராமத்தில் இயேசுகிறிஸ்துவை பற்றி ஆலயத்தில் யாருக்கும் தெரியாமல் ஆலயத்தின் கதவுகளை எல்லாம் அடைத்துக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கு பிரசங்கம் செய்தாராம். ஏனென்றால் அந்த ஊர் அரசாங்கம் அப்பொழுது கெடுபிடியான சட்டத்தை கையாண்டது. இயேசுகிறிஸ்துவைப் பற்றி யாரும் பிரசங்கம் செய்யக்கூடாது. மீறி செய்தால் அவர்கள் மேல் கொலைப்பழி சுமத்தி கடுமையான தண்டனை கொடுப்பார்களாம் . இப்படி கெடுபிடியான சூழ்னிலையில் தான் அந்த போதகர் நான் கடவுளின் ஊழியக்காரன். அவர் பணியை செய்வதில் நான் ஒருபோதும் சோர்ந்து போகமாட்டேன் என்று தன் மனதில் தீர்மானம் செய்து மிகவும் துணிச்சலுடன் கிறிஸ்துவத்தை பிரசங்கம் செய்தாராம்.

அப்பொழுது அந்த ஊர் இராணுவத்தில் உள்ள ஒரு சிப்பாய் ஆலயத்தின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தானாம். அவன் மிகவும் கோபமாக யாரைக்கேட்டு இதைச் செய்கிறாய்.? உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால் இப்படி செய்வாய் என்று மிகுந்த கோபத்துடன் உருமினானாம்.ஆனால் அந்த போதகரோ எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் நீ ஒரு சிப்பாயாக உன் கடமையை செய். உன் வேலை என்னை சுடவேண்டும். என் வேலையோ கிறிஸ்துவத்தைப் பற்றி பிரசங்கம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர் மறுபடியும் தனது
கடமையை செய்ய ஆரம்பித்தாராம். உடனே சிப்பாய் தனது கையில் இருக்கும் துப்பாக்கியை போதகருக்கு நேராக வைத்து குறி பார்த்து சுட நினைத்து துப்பாக்கியை அவருக்கு நேராக தூக்கி பிடித்தானாம்.

ஆனால் சட்டென்று என்ன நினைத்தானோ தெரியவில்லை. உடனே அந்த ஆலயத்தை விட்டு வெளியேறி விட்டானாம். போதகர் கடவுளின் சத்தியத்தை போதித்து அன்று செய்ய வேண்டிய தன்னுடைய கடமைகளை எந்தவித அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் செய்து முடித்தார். நம்முடைய காலங்கள் ஆண்டவரின் கையில் இருக்கிறது. அவர் சொல்லாமல், கட்டளையிடாமல் யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஆண்டவர் நம்முடன் இருக்கும் பொழுது ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும்?

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பார். ஆண்டவரே நமக்கு புகலிடமாகவும், அரணுமாகவும் இருந்து வேடரின் கண்ணியினின்றும், துப்பாக்கி முனையினின்றும் தப்புவிப்பார். ஆயிரம் பேரோ, பதினாயிரம் பேரோ சேர்ந்து தாக்கினாலும் எதுவும் நம்மை அணுகாது. ஏனெனில் நாம் ஆண்டவரில் அன்புக் கூர்ந்ததால் அவரே நம்மை விடுவித்து காப்பார். நாம் ஆண்டவரின் பெயரை அறிந்து அவரை நோக்கி மன்றாடும் பொழுது நமக்கு பதில் அளிப்பார். நம்முடைய துன்பத்திலும்,இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மோடு இருந்து நம்மை தப்புவித்து நம்மை பெருமைப்படுத்துவார். திருப்பாடல்கள் 91ம் அதிகாரம்.

நம்மை காக்கும் ஆண்டவர் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதும் இல்லை. அவர் நம் வலப்பக்கத்தில் உள்ளார். அவரே நமக்கு நிழல் ஆவார். எல்லாத் தீமையினின்றும் பாதுகாத்து, நம் உயிரை காத்திடுவார். நாம் போகும்போதும், வரும்போதும் இப்போதும், எப்போதும், காத்தருள்வார். நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைப் பெற்றுக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? இணைச்சட்டம் 4 : 7.

அன்பின் ஊற்றாகிய இறைவா!!

உம்மை போற்றுகிறோம்,புகழ்கிறோம், உமக்கு பயந்து கீழ்படிந்து நடக்கும் ஒவ்வொருவருக்கும் நீர் தரும் நன்மைகள் ஏராளாம், ஏராளாம்.தந்தையே நாங்கள் நன்மை செய்வதில் ஒருபோதும் சோர்ந்து
போகாமல் காத்தருளும். உம்மைப்போல் வாழ எங்களுக்கு நீரே போதித்து கற்றுத்தாரும். உமது பெயருக்கே மகிமை உண்டாக வாழும்படிக்கு எங்கள் கரம் பிடித்து வழிநடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.