நன்றியுள்ளவர்களாயிருங்கள். கொலோசையர் 3 : 15

கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள் என்று கொலோ 3:15 ல் வாசிக்கிறோம். கிறிஸ்துவ வாழ்வு என்பது கிறிஸ்துவோடு இணைந்து பெறும் புது வாழ்வாகும்.கிறிஸ்துவோடு நாமும் நம்முடைய பாவங்களுக்கு மரித்து மூன்றாம் நாளில் இயேசு உயிரோடு எழுந்ததுபோல நாமும் பாவத்துக்கு மரித்தவர்களாய் அவரோடு சேர்ந்து தூய வாழ்வு வாழவும் அவர் செய்த நன்மைகளை மறவாமல் நன்றியோடு தினமும் அவர் சமுகத்தில் நிற்கிறவர்களாய் காணப்படவே ஆண்டவர் விரும்புகிறார்.

இந்த பூமிக்கு உரிய காரியங்களை வெறுத்து மேலுலகு சார்ந்தவற்றை நாடி அவற்றையே என்னவேண்டுமாக ஆண்டவர் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். நமக்கு வாழ்வு அளிப்பவர் அவரே. நாம் ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறி திருப்பாடல்களையும், புகழ்ப்பாக்களையும் நன்றியோடு உளமாரப் பாடி கடவுளைப் போற்றுவோம். எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்துக்கொள்வோம். தன்னலம் நாடுவோர், பண ஆசை உடையோர் வீம்புடையோர், பழித்துரைப்போர், கீழ்படியாதோர், நன்றியற்றோர் யாவரும் கண்முடித்தனமாக செயல்படுவர். தற்பெருமை கொள்வோர் கடவுளை  விரும்புவதைவிட சிற்றின்பத்தை அதிகமாக விரும்புவர். இறைப்பற்று உள்ள நாமோ அவ்வாறு இல்லாமல் கடவுளுக்கு எல்லாக்காரியத்திலும் பயந்து, கீழ்படிந்து நடந்து அவருக்கே நன்றி பலிகளை ஏறெடுத்து இறுதி வரை எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கே மகிமை உண்டாகும்படி செய்து அவர் பாதம் பற்றி தாழ்த்தி வணங்குவோம்.

அன்பின் ஆண்டவரே!

நாங்கள் எல்லாக்காரியங்களிலும் உமக்கு பயந்து கீழ்படிந்து நடக்க உதவி செய்தருளும். எங்களை மீட்க உமது உயிரையே கொடுத்தீரே! உமக்கு நன்றி ஐயா. நீர் செய்த செயல்களை நாங்கள் ஒருபோதும் மறவாமல் இருக்க போதித்து வழிநடத்தும். நாங்கள் ஒவ்வொருவரும் உமது உடல் உறுப்பாக இருந்து உமது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நீர் விரும்பும் காரியங்களை செய்து உமது அன்பிலே என்றும் நிலைத்திருந்து உமது ஒருவருக்கே மகிமையையும், மாட்சிமையையும் செலுத்தி உமது பாதத்தில் தாழ்மையுடன் எங்களை அர்ப்பணித்து ஒப்புக்கொடுக்கிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.