நம்பிக்கையினால் வாழ்வு !

கி.மு. 600 ஆம் ஆண்டையொட்டி யூதா நாட்டில் வாழ்ந்த இறைவாக்கினர்தான் அபக்கூக்கு. வடக்கிலிருந்து பாபிலோனியர்கள் படையெடுத்து வந்து தாக்கும் ஆபத்து எப்போதும் சூழ்ந்திருந்தது. யூதாவிலோ நாட்டின் ஒற்றுமையும், நீதியும் குலைந்து, வலியோர் எளியோரை ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் அபக்கூக்கு இறைவாக்குப் பணியில் ஈடுபடுகிறார். கயவர்களை ஏன் இறைவன் தண்டிக்காமல் விட்டுவைக்கிறார்? பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும்போது இறைவன் ஏன் மௌனமாய் இருக்கிறார்? என்னும் கேள்விகளை அபக்கூக்கு எழுப்பி, அவற்றுக்கு விடை காண முயல்கிறார். பன்னெடுங்காலமாக மானிட இனத்தைத் தட்டி எழுப்பும் கேள்வி அல்லவா இது! ஏன் இந்த உலகில் தீமை? ஏன் தீயவர்கள் தழைக்கிறார்கள், நல்லவர்கள் துன்புறுகிறார்கள்? இக்கேள்விக்கு விடை காண முயலும் இறைவாக்கினருக்கு ஆண்டவர் தரும் பதில்: நம்பிக்கையோடிருங்கள். எனவேதான், மிகப் பிரபலமான இந்த வார்த்தைகளோடு இன்றைய முதல் வாசகம் நிறைவுக்கு வருகிறது: “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்”.

மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நேர்மையுடையவர்கள் தம் நம்பிக்கையினால் வாழ்வடையவர் என்னும் உம் வார்த்தைகளுக்காக நன்றி. என்ன நேர்ந்தாலும் நன்றி கூறவும், உமது திருவுளத்தின்படி வாழவும் எங்களுக்கு ஆழமான நம்பிக்கையைத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருட்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.