நம்பிக்கை எப்போதும் வெல்கிறது

லூக்கா 21:25-28, 34-36

இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் முதல் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை நாம் துவக்குகிறோம். கத்தோலிக்கர்களுக்கு இது புத்தாண்டு தொடக்க நாள். புத்தாண்டு என்றாலே, புதியனவற்றைப் புகுத்தும் எண்ணம் மனதில் எழுகிறது. இந்தத் திருவழிபாட்டு ஆண்டும் புதிய எண்ணங்களை, அந்த எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் புதிய கண்ணோட்டங்களை, புதிய மனதை நமக்குள் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, புதுப்பொலிவோடு புலா்ந்திருக்கிறது.

திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையின் காலம். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நம்மை தயாரிக்கும் காலம். உண்மையில், நம்மில் இன்று பலருக்கு போதாத காலமாக உள்ளது. தனி வாழ்விலும், குடும்பவாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் நம்மை கசக்கிப் பிழிந்தெடுக்கின்றன. எனவே இந்த திருவருகைக் காலத்தில் அயராது செபிப்போம். செபத்திற்கும், வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பசித்திரு! தனித்திரு! விழித்திரு! செபித்திரு. இதுவே இத்திருவருகை காலம் முழுவதும் நம்மை நெறிப்படுத்தும் தாரக மந்திரமாக இருக்கட்டும். இதை தங்குதடையின்றி செய்வோம். ஆண்டவரின் அருளை அள்ளுவோம் இத்திருவருகைக்காலத்தில்.

இந்த நாட்களின் வழிபாட்டு வாசகங்களின் கருப்பொருளாக இயேசுவின் இரண்டாம் வருகையும் அத்தோடு அவரின் வரலாற்று பிறப்பு நிகழ்வும் திகழ்கின்றன. திருவருகைக்காலம் மொத்தம் நான்கு வாரங்களைக் கொண்டது. கத்தோலிக்க திருச்சபை இந்த நான்கு வாரங்களை இரண்டாக பிரித்து, முதலாவது பகுதியாக, திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16ம் தேதி வரை உள்ளதை, இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தமாகவும், இரண்டாவதாக, 17ம் தேதிதியிருந்து 24ம் தேதி வரையான நாட்களை இயேசுவின் முதலாவது வருகையான அவரது வரலாற்று பிறப்பு மகிழ்ச்சியை நினைவு கூருவதாகவும் அமைத்துள்ளது. இந்த காலம் ஒர் ஆயத்த காலமாக இருப்பதனால், தவக்காலத்தைப்போல் ஊதா நிற ஆடைகள் வழிபாட்டில் அணியப்படுகின்றன. ஐரோப்பிய திருச்சபையிலும் மற்றும் அனைத்துலக திருச்சபையிலும் இந்த காலத்திற்கென்று பல தனித்துவமான கிறிஸ்து பிறப்பு பாடல்கள் இன்னும் அழியாமல் பாவனையில் உள்ளன. வட ஐரோப்பிய நாடுகளில் பல விதமான அத்வென்துஸ் பாரம்பரிய நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

திருவருகைக் காலத்தைக் குறிக்கும் நான்கு மெழுகுவர்த்திகள், வாரத்திற்கு ஒன்றான நம் ஆலயங்களில் பொதுவாக ஏற்றப்படுகின்றன. இவற்றில் முதல் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி நம்பிக்கையைக் குறிக்கிறது. இந்த வாரம் நம்பிக்கையின் வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் ஆபிரகாம் உள்ளிட்ட இஸ்ரயேலின் குலமுதுவர்களை மிகச் சிறப்பாக நமக்கு நினைவுப்படுத்துகிறது. இரண்டாம் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி அமைதியைக் குறிக்கிறது. இரண்டாம் வாரம் அமைதியின் வாரமாக கொண்டாடப்படுகிறது. இது இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த எசாயா உள்ளிட்ட இறைவாக்கினர்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. மூன்றாம் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இது மகிழ்ச்சியின் வாரமாக கொண்டாடப்படுகிறது. நான்காம் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி அன்பைக் குறிக்கிறது. இந்த வாரம் அன்பின் வாரமாக கொண்டாடப்படுகிறது. இயேசுவைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவானையும், இயேசுவின் தாய் மரியா, வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு ஆகியோரை நினைவுபடுத்துகிறது இந்த வாரம்.

அன்புமிக்கவர்களே! நாம் ஏற்கனவே பார்த்தது போல திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு நம்பிக்கையின் ஞாயிறு. இந்த ஞாயிறு நம்மை நம்பிக்கையோடு வாழ அழைக்கின்றது. ஏனென்றால் நம்பிக்கை எப்போதும் வெல்கிறது; நம்பிக்கையினால் விளைவது வெற்றியே! நம்பிக்கையோடு இருப்பவர்களின் வாசலை வெற்றி தேவதை தட்டுகிறது. ஏனெனில் அது, தோல்வியையும் வெற்றியாக மாற்றுகிறது. ஆகவே நம்பிக்கையோடு வாழ முயற்சி செய்வோம். நம்பிக்கையினால் ஏற்படும் வெற்றிகளை கொண்டாடுவோம். இந்த நாளில் நாம் மனதில் நிறுத்த வேண்டியவைகள் இரண்டு.

1. நம்பிக்கை எப்போதும் வெல்கிறது
நொபுங்கா படைத்தளபதி தன் படை வீரர்களுடன் எதிரிகளை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். எதிரிகளிடம் அதிக அளவில் படைபலம் இருந்தது. ஆனால் நொபுங்காவிடம் இல்லை. இதை அறிந்திருந்த நொபுங்காவின் படைவீரர்கள் மிகவும் அஞ்சினர். ஆனால் நொபுங்காவிற்கு தன் படைவீரர்களின் வீரம் தெரிந்திருந்ததால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆகவே அவர் ஒரு ஜென் துறவியை பார்த்து, தன் படை வீரர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது என்று கேட்கச் சென்றார். அதைக் கேட்ட ஜென் துறவி அந்த தளபதியிடம் “நீ படையை நடத்தி செல்லும் வழியில், ஒரு கோயிலுக்குள் சென்று வெளியே வந்து, உன் வீரர்களின் முன் இந்த நாணயத்தை கொண்டு போய் தலை விழுந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்” என்று கூறினார். அதேப்போல் தளபதியும் செய்தார். அப்போது தலையும் விழுந்தது. இதனால் தம் மீது நம்பிக்கை இழந்திருந்த வீரர்கள், தலை விழுந்ததும், நம்பிக்கையுடன் போரில் போரிட்டனர். அவ்வாறு போரிட்டு, அவர்களும் வெற்றிப் பெற்றனர்.

சிறிது நாட்கள் கழித்து, தளபதியுடன் இருக்கும் வீரன் ஒருவன், “நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்” என்றான். ஆமாம் என்று கூறிய தளபதி, அவனிடம் அந்த நாணயத்தை காண்பித்தார். அந்த நாணயத்தின் இரண்டு பக்கமும் தலைதான் இருந்தது. இக்கதையிலிருந்து, நம்பிக்கை இருந்தால், எத்தகைய போட்டி என்றாலும் வெற்றிப் பெறலாம் என்பது நன்கு வெளிப்படுகிறது.

அன்புமிக்கவர்களே! திருவிவிலியத்தில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் நம்பிக்கை கொண்டவர்கள் வெற்றி அடைந்ததை நாம் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில் வருகின்ற ஒரு அருமையான உதாரணத்தை நாம் இப்போது பார்க்கலாம். “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்ற மன்றாட்டுடன் இயேசுவை நாடி வருகிறார் ஒரு தொழுநோயாளர், இயேசுவை முழுவதுமாக நம்புகிறார். அவருடைய நம்பிக்கை மிக ஆழாக இருக்கிறது. அதுவரை தன் வாழ்வில் அடைந்திருந்த தோல்விகள், அவமானங்கள் அத்தனையும் பெருமூச்சோடு இயேசுவிடம் இறக்கி வைக்கிறார். இயேசு தன்னை தொட வேண்டும் என மிக அதிக நம்பிக்கையோடு அவரை தொழுகிறார். இயேசுவின் தொடுதலால், இரண்டே நிமிடங்களில் வெற்றி காண்கிறார். என்ன நடக்கிறது? அவருக்கு முழுவதும் சுகம் கிடைக்கிறது. நம்பிக்கையினால் வெற்றியை தன்வசப்படுத்திக்கொள்கிறார் அவர்.

இவரைப்போல நாம் வாழ்ந்தால் நமது நம்பிக்கையும் எப்போதும் வெற்றி பெறும். வாழ்க்கையில் தோல்வி அடைவதற்கான காரணம் நம்முடைய நம்பிக்கையில் முழுமை இல்லாமையே. இயேசுவை நம்புவோம் என் தேவனே! என் ஆண்டவரே என அவரை விசுவசிப்போம். அறிக்கையிடுவோம். வாழ்வில் இனி வெற்றி பெறுவோம்.

2. நம்பிக்கையின்மை எப்போதும் தோற்கிறது
ஒருமுறை ஒரு நாத்திகன் மலைச் சிகரத்தின் மீது நடந்து கொண்டிருக்கும் போது தவறி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டான். கீழே விழும்போது பாறை இடுக்கில் வளர்ந்திருந்த ஒரு மரக்கிளையை கெட்டியாக பிடித்துக் கொண்டான். குளிர் காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த நாத்திகன் தனது நம்பிக்கையற்ற நிலையைச் சிந்தித்துப் பார்த்தான். கீழே பெரும் பாறைகள் மேலே ஏறிச்செல்லவும் முடியாது. கிளையின் மீதான பிடிப்பும் நழுவிக் கொண்டிருந்தது. அவன் நினைத்தான் நான் எப்போதும் கடவுளை நம்பியதில்லை. நான் இதில் தவறு செய்திருக்கலாம். இப்போது நம்புவதில் என்ன இழப்பு வந்து விடப்போகிறது. இப்படி நினைத்த அவன் கடவுளை அழைத்தான்.

கடவுளே நீ இருப்பது உண்மையானால் என்னைக் வந்து காப்பாற்று, நான் உன்னை நம்புகிறேன் என்றான். கடவுளிடமிருந்து பதிலே இல்லை… அவன் மீண்டும் அழைத்தான். கடவுளே எப்போதுமே நான் உன்னை நம்பியதில்லை. ஆனால் இப்போது என்னைக் காப்பாற்றினால் நான் உன்னை இப்போதிலிருந்தே நம்புகிறேன் என்றான். மேலேயிருந்து ஒரு குரல் கேட்டது, “நீ என்னை நம்ப மாட்டாய்; உனது தன்மை என்னவென்று எனக்குத் தெரியும்” என்றார் கடவுள். கிளையின் பிடியில் நழுவிக் கொண்டிருந்த அவன் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். கடவுளே தயவு செய்து உதவுங்கள். நான் உண்மையாகவே உங்கள் மீது நம்பிக்கை வைப்பேன் என்றான். கடவுளோ, இல்லை நீ என் மீது நம்பிக்கை வைக்க மாட்டாய் என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள் என்றார். அந்த மனிதன் கெஞ்சினான்… வாதாடினான்.

இறுதியாகக் கடவுள் கூறினார். சரி நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். நீ என்னை நம்புகின்றாயா? என்று கேட்டார். அவன் ஆம் கடவுளே நான் உன்னை இந்நேரம்முதல் நம்புகின்றேன் என்று கூறினான்.

உடனே கடவுள் அப்படியானால் “நீ பிடித்திருக்கும் அந்த மரக்கிளையை விட்டுவிடு என்றார்”. உடனே அவன் என்னாது மரக்கிளையை விடுவதா என்னை முட்டாள் என்று நினைத்தீர்களா என்றான் அந்த நாத்திகன்.

ஆம் பிரியமானவர்களே! நமது நம்பிக்கையும் இப்படித்தான் பலவேளைகளில் இருக்கின்றது. கடவுளை நம்புகின்றோம் எனச் சொல்லிக் கொண்டு அந்த நம்பிக்கைக்கு நாம் செயல்வடிவம் கொடுப்பதில்லை. செயல்வடிவம் பெறாத நமது நம்பிக்கை செத்த நம்பிக்கைக்கு சமம் என தூய யாக்கோப்பு நமக்கு அறிவுறுத்துகின்றார். எனவே கடவுள் மீது வைத்துள்ள நமது நம்பிக்கை உயிருள்ளதா? உயிரற்றதா? உயிருள்ளது என்று சொன்னால் எந்தெந்த வழிகளில் அதை நாம் உயிருட்டம் பெற வைக்கின்றோம் சிந்திப்போம். அவநம்பிக்கையினால் எப்போதும் நமக்கு ஆபத்தே வந்து சேருகிறது. தோல்விகள் வந்து குவிகிறது. அவநம்பிக்கையிலிருந்து வெளியே வருவோம். அனைத்திலும் ஆண்டவரை நம்புவோம். வெற்றிகள் பல பெறுவோம்.

மனதில் கேட்க…
1. என் நம்பிக்கை வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா?
2. நான் என்னுடைய நம்பிக்கையினால் என் தோல்விகளை விரட்டி வெற்றியின் மகிழ்ச்சியில் என் வாழ்வை கொண்டாடலாம் அல்லவா?

மனதில் பதிக்க…
நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் (மாற் 9: 23)

~அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.