நம்மைக் காண்கிற தேவன் உறங்குவதுமில்லை,தூங்குவதுமில்லை

விண்ணையும்,மண்ணையும்,உண்டாக்கிய ஆண்டவரிடத்தில் இருந்தே நமக்கு உதவி கிடைக்கும். ஏனெனில் அவரே நம்முடைய கால்கள் இடறாதபடிக்கு பார்த்துக்கொள்வார். அவரே எப்பொழுதும் நம்முடைய வலப்பக்கத்தில் இருந்து, நமக்கு நிழலைப்போல் நம்மோடு கூடவே இருந்து நம்மைக்காத்துக்கொள்வார்.

நல்ல ஆயனாக,ஒரு தாயாக இருந்து நேற்றும்,இன்றும், நாளையும் காப்பவர் அவரே. முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்ப்போல், அவரின் தலையில் முள்முடியை நமக்காக ஏற்றுக்கொண்டார். எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி பூங்கொத்தின் வாசனைப்போல் மணம் வீசி தமது இரத்தத்தால் நம்முடைய பாவத்தின் அழுக்கை நீங்கச்செய்து நறுமண தைலத்தால் நம்மை அலங்கரித்து நம் இதயத்தில் வாசம் செய்து சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தருபவர் அவரே.

வானத்தின் நட்சத்திரங்களை ஒளிரச் செய்கிற தேவன் தூங்காமல், உறங்காமல், நம்மையும் நமது வாழ்க்கையும் ஒளிரச் செய்கிறார். அவரிடம் அன்புக் கொள்ளுகிறவர்களுக்கென்று அவர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிற காரியங்கள் இதுவரை நம் கண்ணுக்கு புலப்படவில்லை. நமது செவிக்கு எட்டவுமில்லை. மனிதனின் உள்ளமும் அதை அறிந்துக்கொள்ளவில்லை. இவைகளை தூய ஆவியானவர் மூலமாகவெ நமக்கு வெளிப்படுத்துவார்.

மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் இவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு இவைகள் மடமையாத் தோன்றும் சிலுவையை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையாகத் தோன்றும். மீட்பு பெற நினைப்பவர்களுக்கு கடவுளின் வல்லமை
விளங்கும். உறங்காமல், தூங்காமல் காக்கும் அவரையே நம்பி அவர் சித்தம் அறிந்து அவரின் பாதத்தில் தஞ்சம் புகுவோம். அப்பொழுது நாம் நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாக கிரியை செய்து ஆசீர்வதித்து காத்தருள்வார்.

அன்பின் தேவனே!

எங்களுக்காக ஜீவனைக் கொடுத்தவரே! உம்மை துதிக்கிறோம், போற்றுகிறோம். எங்களை காக்கும்படி நீரே நல்ல ஆயனாக இருந்து வழிநடத்தி செல்பவரே! உமக்கு கோடி நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம். ஒருபோதும் எங்களை விட்டு பிரியாமல் காத்து உமது உள்ளங்கையில் வரைந்து வைத்திருப்பவர் நீரே. எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும், காத்துக்கொள்ளும், ஆசீர்வதியும், மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் அன்பின் தந்தையே!ஆமென்!அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.