நம்மை பாதுக்காத்து தேற்றுகிறவர் நம் ஆண்டவர்

ஆண்டவர் கூறுவது இதுவே ; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச்செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் செல்வம் விரைந்து வரச்செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள் ; மார்பில் அனைத்துச் சுமக்கப்படுவீர்கள் ; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன் ; நீங்கள் தேற்றப்படுவீர்கள். ஏசாயா 66 : 12, & 13. இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சிக் கொள்ளும்.உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்.; ஆண்டவர் தமது ஆற்றலைத் உங்களுக்கு தெரியப்படுத்துவார்.

நாம் தினந்தோறும் பலவிதமான பாடுகளை கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது. அதை நமது ஆண்டவரும் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் நமக்கு சொல்லியே சென்று இருக்கிறார். நாம் யாவரும் அவர் வழியாக அமைதி காணும் பொருட்டே அவற்றை நம்மிடம் சொல்லியிருக்கிறார். உலகில் உங்களுக்கு துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள் நான் உலகின்மீது வெற்றிக்கொண்டுவிட்டேன் என்று யோவான் 16 :33 ம் வசனத்தில் வாசிக்கிறோம். அவர் பொய் சொல்லவில்லை. துன்பங்கள் உண்டே என்றுதான் சொல்கிறார். ஆனால் அந்த துன்பங்கள் நீடித்த நாட்களுக்கு அல்ல. அதன் வழியாக நமது மனது பண்படுத்தப்படுகிறது நீர் என்னைத் தண்டிக்கும் முன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால் இப்போது உம் வாக்கை கடைப்பிடிக்கிறேன். எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். தி.பாடல்கள் 119 : 67 & 71 என்று வாசிக்கிறோமே சில துன்பங்களின் மூலம் நாம் நிறைய காரியங்களை கற்றுக்கொள்ள முடியும். அதற்காகவே அவைகளை அனுமதிக்கிறார்.

ஏனெனில் நாம் நமது தாயின் கருப்பையில் இருக்கும் பொழுதே நம்மை அழைத்து இருக்கிறார். நாம் நம் தாய் வயிற்றில் உருவாகும்போதே நம்முடைய பெயரை சொல்லி கூப்பிடுகிறார். இதுமுதல் நமக்கு புதியனவற்றையும் நாம் அறியாத மறைபொருள்களையும் வெளிப்படுத்துவார். கருப்பையிலிருந்தே நம்மை தம் ஊழியனாக உருவாக்கினார். நாம் யாவரும் அவரின் பார்வையில் மதிப்பு மிக்கவர்கள். ஏனெனில் உலகம் முழுவதும் அவரின் மீட்பை அடைவதற்கு நம்மை பாதுகாத்து தேற்றி பிற இனத்தாருக்கு நம்மை ஒளியாக ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

நாம் ஏசாயா 49 : 15 & 16 ஆகிய வசனங்களில் இவ்வாறு வாசிக்கிறோமே, பால்குடிக்கும் தன் குழந்தையை ஒரு தாய் மறப்பாளோ ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ ?ஒருவேளை அந்த தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்கவே மாட்டேன். இதோ, உங்களை என் உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளேன். நீங்கள் எப்பொழுதும் என் கண்முன் இருக்கிறீர்கள் என சொல்கிறார். இவ்வாறு நம்மை ஆறுதல் படுத்தி, தேறுதல் படுத்தி நமக்காக நம்முடைய வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காக அவர் முள்முடி சூட்டப்பட்டு, சிலுவையை சுமந்து தமது முழு இரத்தத்தையும் கொடுத்து மீட்ட கிறிஸ்து இயேசு நம்மோடு இருக்கும்பொழுது நாம் எதற்காகவும் கலங்க தேவையில்லையே!

என் மனதில் கவலைகள் பெருகும் போது ,என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உமது கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும், நம்முடைய வாழ்நாள் எல்லாம் ஆண்டவரின் அருளும் நலமும் பேரன்பும் நம்மை புடைசூழ வரும். நாம் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திடுவோம். ஏனெனில் அவர் நம்முடைய ஆயராக இருப்பதால் நிச்சயம் நம்மை புல் உள்ள இடத்தில் மேய்த்து இளைப்பாற செய்து பாதுகாத்து தேற்றிடுவார் நாமும் தினந்தோறும் அவருக்கே புதியதொரு பாடலை பாடி உலகமெங்கும் அவர் புகழை பரப்பி போற்றிடுவோம்.

அன்பின் ஊற்றாகிய தெய்வமே!

உமது கண்களில் எங்களுக்கு நாள்தோறும் கிருபை கிடைப்பதற்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம். நீர் எங்களை அனுதினமும் விசாரித்து எங்கள் தேவைகள் யாவையும் சந்தித்து தருவதற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் சொல்கிறோம். தாயைவிட மேலான அன்பை தந்து எல்லா இக்கட்டுகளில் இருந்தும் ஒவ்வொருநாளும் பாதுகாத்து ஆசீர்வதித்து வருகிறதற்காய் உமக்கு மகிமையை செலுத்துகிறோம். எங்கள் பாவங்கள், குற்றங்கள் பாராமல் உமது பேரன்பின் நிமித்தம் எங்களை ஆட்கொண்டு தாங்கி வருகிறீர். அதை நாங்கள் மறந்துவிடாதபடிக்கு என்றென்றும் நன்றி உள்ளவர்களாக வாழ போதித்து எங்கள்மேல் உமது கண்ணை வைத்து உமது ஆலோசனையில் வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய அன்பான நாமத்தின் மூலம் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.