நம் உடன்பிறந்தார் தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னிப்போம். மத்தேயு 18:35

அன்பும், பாசமும் நிறைந்த என் உடன் பிறவா சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

கடவுள் நமக்கு அவரின் அன்பின் மேன்மையை உணர்த்தி நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு சொல்லி வைத்திருக்கிறார். நாமும் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடப்போமானால் நிச்சயம் இந்த உலகில் ஒரு வெற்றி உள்ள வாழ்வை வாழ்ந்து அவர் மகத்துவத்தை நாமும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தவக்காலத்திலும் நாம் தினந்தோறும் ஆலயம் செல்லலாம், திருப்பலியில் பங்கு பெறலாம். நம்முடைய மனசாட்சியை சோதித்து பார்ப்போம். அவற்றை ஒழுங்காக கடைப்பிடிக்கும் நாம் நம் சகோதர, சகோதரிகளிடம், நம் பெற்றோர்களிடம், நம் பிள்ளைகளிடம், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், நம் நண்பர்களிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? கடவுளின் விருப்பப்படி செயல்படுகிறோமோ? அல்லது வெளியில் அவர்களோடு பேசி நம் உள்ளத்தில் அவர்களை வெறுக்கிறோமா? என்று நம்மை நாம் ஆராய்ந்துப் பார்ப்போம். நம் மனசாட்சி நாம் செய்யும் காரியத்தை குற்றம் உண்டு, குற்றம் இல்லை என்று நமக்கு தீர்ப்பு வழங்கும்.

நம்மை சேர்ந்தவர்கள் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ செய்யும் தப்பிதங்களை நாம் மன்னிக்கிறோமா? அல்லது வெறுக்கிறோமா? என்று அவரவர் தம் மனதில் சோதித்து கடவுளுக்கு பயந்து அவர் சொன்ன வார்த்தைகளை கடைப்பிடிப்போம். உங்கள் சகோதர, சகோதரிகளின் தப்பிதங்களை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் நம் தந்தையும் நமது தப்பிதங்களை மன்னிக்க மாட்டார். மத்தேயு 18:35. பாவச்சோதனை தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்கு காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதைவிட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது. எனவே நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

உங்களுடைய சகோதர, சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துக்கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராக பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வார்களானால் அவர்களை மனதார மன்னித்து விடுங்கள். லூக்கா 17:1 to 4 . நாம் இவ்வாறு ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடந்தால் நாம் விரும்பும் எல்லா காரியத்தையும் கடவுள் நமக்கு தந்து நம்மை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இம்மீட்பால் குற்றங்களிலுருந்து நாம் மன்னிப்பு பெறுகிறோம். எபேசியர் 1:7.

நாம் காணிக்கை பெட்டியில் பணம் போடுவதற்கு முன் நம் அன்பிற்குறியோரின் தப்பிதங்களை மன்னித்துவிட்டு பிறகு உங்கள் காணிக்கையை செலுத்துங்கள் என்றே ஆண்டவர் கூறுகிறார்.  அன்பானவர்களே! நாமும் நம்முடைய எல்லா காரியத்திலும் நம் கடவுள் நமக்கு அருளிய பாதையில் நடந்து அவரின் மன விருப்பத்தை நிறைவேற்றி அவரின் செல்லக்குழந்தைகள் என்ற பெயருடன் வாழ்ந்து இந்த தவக்காலத்தில் அவர் நமக்காக பட்ட பாடுகளை தியானித்து அவர் சொற்படி நடந்து அவருக்கே மகிமையை சேர்த்து அவர் பாதம் பணிவோம்.

ஜெபம்.

அன்பின் தந்தையே! இன்று நீர் எங்களுக்கு கற்றுக்கொடுத்த  கட்டளைகளை நாங்கள் உமது விருப்பப்படி கடைப்பிடித்து உமது நாமத்திற்கே மகிமை சேர்க்க உதவி செய்யும்.எங்கள் சகோதர, சகோதரிகளின் தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னித்து நீர் விரும்பும்படி வாழ கற்றுத்தாரும். உமது போதனைகளை ஏற்று அதன்படியே வாழ்ந்து உமது ஆசீரை பெற்றுக்கொள்ள வழிகாட்டிய உமது கிருபைக்கு நன்றி இயேசப்பா.ஜெபத்தை கேட்டவரே உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள். ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.