நல்ல ஆயன் இயேசு

பழைய ஏற்பாட்டில் கடவுள் ஓர் ஆயனாக சித்தரிக்கப்படுகிறார். திருப்பாடல் 23: 1 சொல்கிறது: “ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை”. திருப்பாடல் 77: 20 “மோசே, ஆரோன் ஆகியோரைக்கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச்செல்கின்றீர்” ஆண்டவரால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியாவும் ஆயனாக உருவகப்படுத்தப்படுகிறார். இறைவாக்கினர் எசாயா 40: 11 ல் பார்க்கிறோம்: “ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்”. பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கின்ற இந்த உவமை புதிய ஏற்பாட்டிலும் தொடர்வதை இன்றை நற்செய்தி எடுத்தியம்புகிறது.

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு மற்ற நாடுகளில் வாழ்ந்த இடையர்களை விட சற்று வித்தியாசமானதாக இருந்தது. அவர்கள் தங்களோடு தோல்ப்பையை கொண்டு சென்றனர். அதில் உணவுக்காக காய்ந்த ரொட்டிகளும் உலர்ந்த பழங்களும் வைத்திருந்தார்கள். பாதுகாப்புக்காக கவண் ஒன்றையும் வைத்திருந்தார்கள். எதிரி விலங்குகளிடமிருந்து மந்தையைக் காப்பாற்றவும், நேரம் முடிந்ததும் தன் ஆடுகளுக்கு சமிக்ஞை செய்யவும் இதனைப்பயன்படுத்தினார். இந்த ஆடுகளை இறைச்சிக்காக அல்ல, அதன் உரோமத்தைக் கத்தரிப்பதற்காக அவர்கள் வளர்த்தனர். எனவே, பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஆட்டையும் அந்த ஆயன் அறிந்து வைத்திருப்பான். அதன் பெயரைக்கொண்டுதான் அதனை அழைப்பான். தன் மந்தையை பாதுகாப்பாக வழிநடத்த, முதலில் தான் சென்று பயணம் செய்யவிருக்கிற பாதை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறிந்தபிறகே, அவன் தன் மந்தையை அந்த வழியில் நடத்திச்செல்வான். தன் மந்தையைக் காப்பதற்காக எத்தகைய முயற்சியையும், ஏன் தன் உயிரைத்தர வேண்டுமென்றாலும், தயாரா இருப்பான். இவ்வாறு, ஆடுகளை வெறும் விலங்குகளாக அல்லாமல், அவற்றை தன் உயிரினும் மேலாக கருதுகிறவன் தான் சிறந்த ஆயன்.

நல்ல ஆயனாக இருக்கக்கூடிய இறைவனும், நம்மை வெறும் அவரின் படைப்பாக கருதாமல், நாம் அவரின் சாயலில், இறைஇயல்பில் படைக்கப்பட்ட உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு இருக்கிறவர். நம்மை சரியான வழியில் வழிநடத்தக்கூடியவர். நம்மைப்பேணிப்பாதுகாக்கிறவர். அவரின் பாதுகாப்பில் மகிழ்வோடு இருப்போம்

~  அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.