நீங்கள் கண்டுபிடித்தது கடவுளையா? அலகையையா?

யோவான் 6:60-69

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 20ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

அன்புமிக்கவர்களே! உங்களுக்கு அலெக்சாண்ட்ரோ பற்றி நினைவு இருக்கிறதா? தூய மரிய கொரற்றி பற்றி நினைவு இருக்கிறதா? தூய மரிய கொரற்றியின் வாழ்க்கயைில் வருபவர் தான் அலெக்சான்ட்ரோ. நமக்கு நன்றாகத் தெரியும் தூய மரிய கொரற்றி ஓர் கன்னிகை, மறைசாட்சி. வாழ்ந்த காலம் கி.பி.1890-1902.

இவர் 12 வயதில் புது நன்மை வாங்கிய பிறகு ஐந்து வாரங்கள் கூட ஆகவில்லை . அலெக்சாண்ட்ரோ ஸெரனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான் . மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார் . ஒரு பாவம் செய்வதைவிட சாவதுமேல் என்பதை நன்கு தெரிந்திருந்தாள் . அலெக்சாண்ட்ரோ பாவத்துக்கு இணங்க மறுத்த மரிய கொரற்றியின் மலர் போன்ற மாசற்ற உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான் . இது பாவம், “இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா அவனை எச்சரித்தும் பயனில்லை . குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார் . “மன்னித்துவிட்டேன் அவரை”, என்று சொல்லிவிட்டுத்தான் மரித்தார் . கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது . பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். “மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டேன்” என அறிவித்தான் . 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான் . அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான் .

இந்த அலெக்சாண்ட்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3 ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து கி.பி. 1970 காலமானார் . 50 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு 12 ஆம் பத்திநாதர் புனிதை என்ற பட்டம் கொடுத்தார் . அப்போது அவருக்கு அருகில் மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உடனிருந்தனர் . இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதைப் பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சாண்ட்ரோவும் பங்குபெற்று மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினார் .

அலெக்சாண்ட்ரோ தன் வாழ்வின் முதல் பகுதியில் கண்டுபிடித்தது அலகையை. ஆகவே அவருக்குள்ளே ஊனியல்புக்குரிய இச்சைகள் இருந்தன. தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில் அவர் ஆண்டவரைக் கண்டுபிடித்தார். ஆண்டவரைக் கண்டுபிடித்த பிறகு ஆவிக்குரிய ஆசைகள் அவருக்குள்ளே அதிகமாயின. புனித பயணத்தை அவர் தொடர்ந்தார்.

அன்புமிக்கவர்களே! பொதுக்காலம் 21ம் ஞாயிறு இரண்டு நபர்களை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஒருவர் கடவுளை கண்டுபிடித்தவர் மற்றவர் அலகையை கண்டுபிடித்தவர். கடவுளைக் கண்டுபிடித்தது யார்? அலகையைக் கண்டுபிடித்தது யார்? உங்களுக்கு தெரியுமா?

கடவுளைக் கண்டுபிடித்தவர்: பேதுரு
பேதுரு பலவீனமானவர். ஆனால் அந்த பலவீனத்தையெல்லாம் இயேசுவின் வல்லமையால் தகர்த்தெறிந்தார். பலவீனம் வந்ததும் அலகையின் அடைக்கலத்தை நாடவில்லை. மாறாக தன் தலைவர் இயேசுவோடு மட்டுமே இருந்தார். அந்த பலவீனத்தை எல்லாம் அவர் முறியடித்தார். சீடர்களில் இயேசுவை மெசியா எனக் கண்டுடித்வர் அவர்தான். இயேசுவிடம் மட்டும் தான் நிலைவாழ்வு உண்டு என்பதை அறிக்கையிட்டவர் பேதுரு. பேதுருவுக்கு எவ்வளவுதான் சோதனைகள், வேதனைகள் வந்தாலும் அவர் அலகையிலன் பக்கம் செல்லவில்லை. ஆண்டவரே தஞ்சம், அவர்தான் அடைக்கலம் என இருந்தார். ஆகவே எல்லாம் வல்ல கடவுள் அவரை மிகவே உயர்த்தினார். அவர் கண்டுபிடித்தது கடவுளையே.

அலகையை கண்டுபிடித்தவர்: யூதாசு இஸ்காரியோத்து
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள். ஆனால் இந்த பழமொழி யூதாசுக்கு ஒத்துப்போகவில்லை. ஆண்டவர் இயேசுவோடு இருந்தார். போதனைகளைக் கேட்டார். எல்லா சீடர்களைப் போன்று பயிற்சி பெற்றார். ஆனால் இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை அவர் உள்ளே அனுப்பவில்லை. ஆகவே ஆண்டவரின் வார்த்தை அவருக்குள்ளே மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.

யூதாசு மனதிற்குள் ஒடிக்கொண்டிருந்தது எல்லாம் அலகைக்கான எண்ணங்கள் தான். பணம் தான் அவருக்கு கடவுளாக தெரிந்தது. பதவி தான் அவருக்கு எல்லாமாக இருந்தது. இந்த உலக ஆசைகள் தான் அவரை ஆட்டிப்படைத்தன. ஆகவே அவர் கடவுளை கண்டுபிடிக்கவில்லை. மாறாக அலகையை கண்டுபிடித்தார். ஆகவே வரலாறே இல்லாமல் அழிந்துப்போனார்.

நாமும் நம்மை சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நம்முடைய இத்தனை வருட பயணத்தில் நாம் கண்டுபிடித்தது யாரை? இயேசுவையா? அலகையையா? ஒரு நிமிடம் உங்களை பரிசோதித்துப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

அலெக்ஸ் என்பவர் ஒரு குடிநோயாளி. குடிக்காமல் அவரால் இருக்கவே முடியாது. குடிக்காமல் இருந்தால் அவரைப்போன்று நல்லவர் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. குடித்தால் அவரைப் போல தீயவர் யாருமே இருக்க முடியாது. ஊரில் தலைவராக இருக்கும் பொறுப்பு எல்லாம் அவருக்கு வந்தபோது அவன் குடிக்காரன் அவனை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்க முடியாது என்றார்கள். யாருமே அவரை மதிக்கவில்லை. மனைவியும் குழந்தைகளும் மிகவும் வருந்தினர். அவர்கள் குடும்பம் மட்டும்தான் அந்த ஊரிலேயே வறுமையில் வாடியது.

ஆலயம் பக்கமே வராத அலெக்ஸ் ஒரு நாள் திருப்பலிக்கு வந்தார். அந்த திருப்பலியில் பங்குத்தந்தை நாம் கடவுளின் பி்ள்ளைகள் யாருக்கும் எதற்கும் அடிமையாக கூடாது. சாத்தானின் பிள்ளைகள் சந்தோசமாகவே இருக்க முடியாது. இந்த நாள் மனம்திரும்புதலுக்கான நாள். இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். கடவுள் உங்களுக்காகவே இந்த மறையுரையின் வழியாக பேசுகிறார் என்றார். அதைக் கேட்டதும் அவருக்குள்ளே ஆண்டவரின் வார்த்தை வேலை செய்ய ஆரம்பித்தது. அலெக்ஸ் அந்த நேரத்தில் ஆண்டவரை தனக்குள்ளே கண்டுபிடித்தார். வாழ்வே மாறியது. மாற்றம் பெற்றார். ஊரின் தலைவராக மட்டுமல்ல ஊராட்சி மன்ற தலைவராகவே அவர் மாறினார்.

அன்புமக்களே! நாம் அலகையைக் கண்டுபிடிக்கும்போது அது நம்மை பல வழிகளிலே ஆட்டிப்படைக்கும். நம்மை நிம்மதியாகவே வாழ விடாது. நம்மை பலர் தூற்றுவார்கள். நம் திறமைகள் அனைத்தும் தீர்ந்துபோகும். நாம் தலைநிமிர்ந்து வாழவும் முடியாது. மாறாக ஆண்டவரைக் கண்டுபிடிக்கும் போது உயர் பொறுப்பு கிடைக்கும், தனிமரியாதையும் மதிப்பும் கிடைக்கும். வாருங்கள் கண்டுபிடிப்போம்.

மனதில் கேட்க…
1. நான் கடவுளை கண்டுடித்துவிட்டேனா? அலகையை வெறுத்து ஒதுக்கிவிட்டேனா?
2. அலகையை கண்டுடித்தால் என் திறமைகள், ஆற்றல்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் இது எனக்கு தெரியுமா?

மனதில் பதிக்க…
கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்(யாக் 4:7)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.