நேர்மை என்னும் அணிகலன்

ஓசேயா 10: 1 – 3, 7 – 8, 12

“இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது”. இறைவன் இஸ்ரயேல் மக்களை பலவிதமான வளங்களால் நிரப்பியிருந்தார். குறிப்பாக, பொருட்செல்வத்தால் நிரப்பியிருந்தார். வளமையும், மகிழ்ச்சியும் நாட்டில் குடிகொள்ள செய்திருந்தார். எவ்வளவு அதிகமாக இறைவன் அவர்களை ஆசீர்வதித்தாரோ, அவ்வளவுக்கு வேற்றுத் தெய்வங்களுக்கு பலிபீடங்களை அவர்கள் அமைத்தனர். இது இறைவனுக்கு வருத்தத்தையும், கவலையையும் தந்தது. தான் தேர்ந்தெடுத்த மக்கள், தனக்கு எதிராக கிளர்ந்து, தன்னை மறந்து, தான் கொடுத்த செல்வங்களை சரியான வழியில் பயன்படுத்தாமல்,: வேற்றுத்தெய்வங்களை ஆராதிப்பதற்கும், தவறான வாழ்க்கை வாழ்வதற்கும் பயன்படுத்துகிறார்களே, என்று கோபம் கொள்கிறார்.

யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதோ, அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும். அதுதான் இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கையிலும் நடந்தது. இஸ்ரயேல் மக்கள் இறைவனால் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு ஆசீரையும், மீட்பையும் வழங்க இறைவன் திட்டமிட்டிருந்தார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் தங்களை உயர்த்திய இறைவனை மறந்து, நன்றியில்லாதவர்களாக, இறைவன் முன்னிலையில் அருவருப்பான செயல்களைச் செய்கிறவர்களாக மாறினர். அடிப்படையில் அவர்களிடத்தில் நேர்மைத்தனம் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது. அதுதான் இறைவனின் கோபத்திற்கு அவர்களை ஆளாக்கியது. நேர்மையாளர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்திற்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால், இஸ்ரயேல் மக்களிடத்தில் அடிப்படை நேர்மை இல்லாத காரணத்தினால், அவர்கள் இறைவனை புறக்கணித்தார்கள்.

இன்றைக்கு இந்த சமூகம் நேர்மையான மனிதர்களை எள்ளி நகையாடுகிறது. பிழைக்கத் தெரியாதவர்கள் என முத்திரைக் குத்தி, ஒதுக்கிவைக்கிறது. இதனால், நேர்மையாக வாழ்கிறவர்களுக்கு இழப்பு இல்லை. மக்களுக்குத்தான் இழப்பு என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக மக்கள் இருக்கிறார்கள். நேர்மையானவர்கள் இருக்க வேண்டிய அதிகாரத்தில், நேர்மையற்றவர்கள் இருக்கிறார்கள். இதனால், இந்த சமூகம் சீரழிந்துகொண்டிருக்கிறது. நேர்மையானவர்களை ஆதரிப்போம். இந்த சமூகத்தை வளப்படுத்துவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.