பணப்பற்றா? குருப்பற்றா?

(மத்தேயு 26 : 14-25)

இந்த புனித வாரம் முழுவதும் இயேசுவின் தற்கையளிப்பையும் அதனைச் சுற்றி நடந்த அனைத்தையும் பற்றியே சிந்தித்து, நம் வாழ்க்கையை அதனோடு ஒன்றித்து உரசிப்பார்க்க அழைப்புக் கொடுக்கிறது நமது தாய்த்திருச்சபை.

‘செம்மறியாம் கிறித்துவின் இரத்தம் விலைமதிக்கப்படாதது’ என்கிறார் பேதுரு (1பேதுரு : 1-19) அப்படிப்பட்ட இறையவனைக் காட்டிக் கொடுக்கப் பேரம் பேசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அவரோடு இணைந்தே பந்தியில் அமர்கின்றான் யூதாஸ். துரோகியை அரவணைப்பதிலும் இயேசு நமக்கு முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் இருக்கிறார். அவன் பேரம் பேசியது வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்கே. இது சாதாரண ஓர் அடிமையின் விலையாகக் கருதப்பட்டது. (செக் 11:12, விப 21:32) கடவுள் நிலையிலிருந்த அவர் நம்மை மீட்க மனிதனாக, நம்மில் ஒருவராகப் பிறந்தார். இறக்கும் பொழுதோ அடிமை நிலைக்கு தன்னைத் தாழ்த்தித் தன்னுயிரை நமக்குக் கையளித்தார்.

பணப்பற்று அவனது குருப்பற்றைக் கொன்றுவிட்டது. பண ஆசையால் கவரப்பட்டவன் அதிலே தன்னை மூழ்கடித்து தன் வாழ்வினைத் தொலைத்து விடுகிறான். குடி நோயினைக் காட்டிலும் இது கேவலமானது, கொடியது. இந்தப் பண ஆசைதான் யூதாசை நம்பிக்கைத் துரோகம் செய்யத் தூண்டுகிறது. “செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசி காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்ற ஆண்டவரின் வார்த்தை (லூக் 18:15) இவரில் உறுதியாயிற்று. முளையிலேயே களையப்படாமல் விட்டு வைக்கப்பட்ட அவனின் ஆசை பேராசையாக மாறி, கடவுளையே கயவர்களிடம் காட்டிக் கொடுக்க வைத்து விட்டது.

என்னிடம் உள்ள தவறான செயல்கள் என்னென்ன? அதனை உணர்ந்திட, அறிந்திட, கிள்ளியெறிந்திட இப்புனித வாரம் பொருத்தமான காலம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.