பற்றுக பற்றற்றானை!

மாற்கு 10:28-31

நேற்றைய நற்செய்தியின் தொடக்கம் இன்றைய நற்செய்தி என்பதால் நேற்று முடித்த வரிகளில் இன்றைய சிந்தனையை தொடங்குவோம். நிலை வாழ்வு என்பது தான் மட்டும் வாழ்வதல்ல, பிறர் வாழ்வதற்கும் உதவுவது. நாம் மிகப்பெரிய இலக்கினை நம் வாழ்வில் அடைய வேண்டுமானால் கண்டிப்பாக சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது அல்லது விட்டுவிடவேண்டியிருக்கிறது. உதாரணமாக நான் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வரவேண்டுமென்று எண்ணினால், அவ்வெண்ணத்தை நிறைவேற்ற இரவு பகலாக கடுமையான பயிற்சியும், முயற்சியும் செய்ய வேண்டியிருக்கிறது.

தேர்வில் நான் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால் என் தூக்கத்தை அதிக நேரம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சாதாரணமான நமது வாழ்வில் வெற்றிபெற இத்தனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், மறுவாழ்வில் நாம் அடையும் பேரின்பத்திற்காக எவ்வளவு விட்டுக் கொடுத்தலையும் தியாகங்களையும் செய்ய வேண்டியதிருக்கும். சாதாரண வாழ்விலேயே நாம் நினைத்ததை உடனடியாக அடைய முடிவதில்லை, அப்படியிருக்க எப்படி நமது மறுவாழ்வில்; நாம் பங்கெடுக்க முடியும். செபித்தால் மட்டும் போதுமா? திருப்பலியில் பங்கெடுத்தால் மட்டும் போதுமா? தெரு ஓரங்களில் நின்று ‘அல்லேலூயா’ என்று கத்தினால் மட்டும் போதுமா? இவையனைத்தும் முதற்படியே! இந்த இறையன்பின் அடித்தளத்தோடு நாம் பிறரன்பில் காலடி எடுத்து வைக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியை திரு அவை இன்றும் நேற்றும் சிந்திக்க அழைப்பதன் நோக்கம், நாம் நாளை தவக்காலத்தில் அடியெடுத்து வைக்கின்றோம் என்பதால்தான். இந்த தவக்காலம் இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் சான்றளிக்கின்ற காலம். எவ்வாறு இயேசு பற்றற்றவரை மட்டும் பற்றிக் கொண்டாரோ, அதுபோல அவரது சிலுவையின் பாதைகளை சிந்திக்கின்ற நாமும் நம் பற்றுகளான பதவி, பட்டம், பணம், போன்ற அனைத்துப் ‘ப’ற்றுகளையும் நீக்கிவிட்டு அவரைப் பற்றிக் கொள்வோம். (காண்க – பிலி 3:8)

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” – (குறள் – 350)

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.