பிரமாணிக்கமாய் இருப்போம்

இயேசுவிடத்திலே அடையாளம் கேட்கக்கூடியவர்களைப் பார்த்து, இயேசு ”இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது” என்று சொல்கிறார். ”விபசாரத்தலைமுறையினர்” என்கிற வார்த்தை இங்கே சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. இந்த வார்த்தையை வெறும் உடல் சார்ந்த விபசார பொருளாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, நம்பிக்கைத்துரோகம் என்கிற அர்த்தமாக நாம் பார்க்கலாம். இதனை பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இருந்த உருவகத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.

பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்குமான உறவு திருமண உறவாக உருவகப்படுத்தப்பட்டிருந்தது. கடவுளை கணவராகவும், இஸ்ரயேல் கடவுளுக்கு மனைவியாக உருவகம் செய்திருந்தார்கள். ஆனால், நாளடைவில், இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்களை நாடியபோது, திருமண உறவில் தனது கணவரான, கடவுளுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்து விட்டதாகவே உணரப்பட்டது. கடவுளின் அன்பையும், அரவணைப்பையும் மறந்து, கடவுளைப் புறக்கணித்துவிட்டு வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றது, இப்படிப்பட்ட நம்பிக்கைத்துரோகமாகவே கருதப்பட்டது. அதேபோல, கடவுளின் அடையாளமாகிய இயேசு அருகிருந்தபோதிலும், வேறு அடையாளங்கள் கேட்பது நம்பிக்கைத் துரோகம் என்று இயேசு சொல்கிறார்.

கடவுள் நமக்கு தந்திருக்கிற கொடைகளையும், நம் வாழ்வில் செய்திருக்கிற வல்ல செயல்களையும் அனுபவித்து விட்டு, அவரைப்புறக்கணித்து விட்டுச்சென்றால், நாமும் கடவுளுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறோம். கடவுளுக்கு, அவருடைய கட்டளைகளுக்கு பிரமாணிக்கமாய் இருப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.