புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா

தூய பிரான்சிஸ் சேவியர் ( புனித சவேரியார் திருவிழா)

”ஒருவன் இந்த உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரக்கூடிய பயன் என்ன?” என்கிற வார்த்தைகளை எப்போது நாம் கேட்டாலும், நம் நினைவுக்கு உடனடியாக வரக்கூடியவர் தூய சவேரியார். அந்த அளவுக்கு இந்த இறைவார்த்தை சவேரியாரோடு தொடர்புப்படுத்தும் அளவுக்கு, அவரோடு ஒன்றிணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சவேரியார் வாழ்வும், அவரது அர்ப்பணம் நிறைந்த போதனையும் நமக்குச் சுட்டிக்காட்டுவது என்ன? தூய சவேரியார் நற்செய்திப் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்கிற இயேசுவின் வார்த்தைகளை தனது உள்ளத்தில் ஏற்று, அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர்.

மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில் (5: 4), ”துயருறுவோர் பேறுபெற்றோர்” என்கிற செய்தி நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த துயருறுவோர் யார்? வாழ்க்கையில் துன்பப்படுகிறவர்களா? ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லாமல் வறுமையைச் சந்திக்கிறவர்களா? வாழ்க்கையில் பல காரணங்களுக்கு துன்பங்கள் வரலாம். அல்லது அதற்கு காரணமும் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் தான் துன்பப்படுகிறவர்களா? என்றால், அது அல்ல. இங்கே துன்பம் என்று சொல்லப்படுவது, தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்துகிறவர்களை. யாரெல்லாம் தங்களது பாவங்களை எண்ணிப்பார்த்து, வருத்தப்படுகிறார்களோ அவர்கள் தான் துன்பப்படுகிறவர்கள். அவர்கள் கடவுளின் ஆறுதலைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த ஆறுதலைப் பெற்றுக்கொண்டவர் சவேரியார். அந்த ஆறுதலை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அயராது உழைத்தவர் தூய சவேரியார்.

நமது பாரத தேசத்தின் அப்போஸ்தலராக வர்ணிக்கப்படுகிறது, நமது ஞானத்தகப்பனின் வாழ்வைப்போல, நமது வாழ்வை நாம் சிந்தித்துப் பார்ப்போம். நமது வாழ்க்கையில் மாற்ற வேண்டியவைகள், குறைகள், பாவங்களை எண்ணிப் பார்த்து, கடவுளுக்கு உகந்த வாழ்வாக மாற, அருள் வேண்டுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

துன்பத்தின் வழியாகவும் நற்செய்தி அறிவிப்பு!

பிரான்சிஸ் சவேரியார் விழாவாகிய இன்று நமது நற்செய்தி அறிவிப்புக் கடமையைப் பற்றிச் சிறிது சிந்திக்க அழைப்பு விடுக்கிறது திருச்சபை.

இன்றைய நற்செய்தி வாசகமும்(+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20), முதல் வாசகமும் நற்செய்தி அறிவிப்பின் இரு எதிர்கோணங்களை எடுத்தியம்பி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்  என்று கட்டளையிடுகிறார். நற்செய்தி அறிவிப்பின் அடையாளங்களையும் ஆண்டவர் பட்டியல் இடுகிறார். அவற்றில் முகாமையான ஒன்று உடல் நலமற்றோரைக் குணமாக்குவது. நோயுற்றோருக்காகப் பரிந்து மன்றாடி அவர்களை நலம்பெறச் செய்வது ஒரு நற்செய்தி அறிவிப்பு உத்தி.

அதே வேளையில், முதல் வாசகத்தின்படி, “சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்”” “ என்னும் செய்தியின் வழியாக பேதுரு, துன்பத்தின் வழியாகவும் நாம் நற்செய்தி அறிவிக்க முடியும் என ஊக்குவிக்கிறார்.

எனவே, நோயுற்றோருக்காக மன்றாடுவதோடு, அவர்கள் நலம் பெற இயலாவி’ட்டால், அத்துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதன் வழியாக சான்று பகரும் வாய்ப்பினை அவர்கள் பெறுகின்றனர் என்னும் செய்தியையும் நாம் பகிர்ந்துகொள்வோம்.

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறைவா என்ன நேர்ந்தாலும் நன்றி கூறி, உமக்கு சான்று பகர்ந்து, நற்செய்தி அறிவிக்கும் பேற்றினை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.