பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்

பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் வரிதண்டுபவர்கள். காரணம் ஏழை, எளிய மக்களை சுரண்டி அதிகச்சுமைகளை அவர்கள் மீது இந்த வரிதண்டுபவர்கள் திணித்ததால் தான். பாலஸ்தீனம் இயேசு வாழ்ந்த காலத்தில் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தது. இப்போது நம்முடைய பழக்கத்தில் உள்ள குத்தகை முறை தான், உரோமையர்களின் காலத்திலும் இருந்தது. அதாவது, குறிப்பிட்ட ஒரு மகாணத்திற்கு அங்குள்ள மக்கள்தொகை அடிப்படையில், இவ்வளவு குத்தகைப்பணம் என்ற அளவில் ஏலம் விடப்பட்டது. யார் அதிக ஏலத்திற்கு எடுக்கிறார்களோ, அவர்கள் அந்தத்தொகையை செலுத்திவிட்டு, அந்த மகாணத்தில் வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்றுக்கொள்வார்கள். இந்த வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்ற ஒப்பந்தக்காரர்கள் சில வேலையாட்களை பணியமர்த்தி, மக்களிடத்தில் வரிவசூலித்து பணத்தைப்பெற்று வந்தனர். இதில் தான் நிறைய முறைகேடுகள் நடந்து வந்தன. அவர்கள் மனம்போல் வரிகளை மக்கள் மீது திணித்தனர். முறையான, நியாயமான, ஒழுங்கான வரிவசூலிக்காமல் தங்கள் சுயஇலாபத்திற்காக மக்களை சுரண்டிப்பிழைக்கிறப் பணியை வரிதண்டுபவர்கள் செய்து வந்தனர். எனவேதான், மக்கள் மத்தியில் அவர்களைப்பற்றி வெறுப்பு மேலோங்கியிருந்தது. எந்த அளவுக்கு என்றால், கொள்ளைக்காரர்கள், திருடர்களோடு மக்கள் இவர்களை ஒப்பிட்டுப்பேசினர்.

இப்படிப்பட்ட பிண்ணனியில்தான் இயேசு வரிதண்டுபவரான மத்தேயுவை இயேசு அழைக்கிறார். மக்கள் மத்தியில் அதிகமாக மதிக்கப்பட்ட இயேசு, மக்கள் மத்தியில் அதிகம் வெறுக்கப்பட்ட மத்தேயுவை அழைக்கிறார். இங்கே மத்தேயுவின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது. மத்தேயுவுக்கு பெரும் மகிழ்ச்சி. தன்னை இயேசு மற்றவர்களுக்கு நடுவில் அடையாளப்படுத்தி, தன்னை பின்பற்றச்சொன்னது அவரது வாழ்வில் மறக்க முடியாத தருணம். இந்த மகிழ்ச்சியை தான் மட்டும் அனுபவிக்கவில்லை. பெற்ற மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் ஆசைப்படுகிறார். மகிழ்ச்சி என்பது ஒருவரோடு தேங்கிவிடக்கூடாது. அது விரிவுபட்டு மற்றவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்கு மத்தேயு நல்ல உதாரணம். எனவே தான், தன் நண்பர்களையும், விருந்தினர்களையும் அழைத்து இயேசுவோடு மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். தான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை, இயேசு என்கிற விலைமதிப்பில்லாத செல்வத்தை தன்னுடைய தோழர்களுக்கும் அறிமுகப்படுத்தி, அவர்களது வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.

பெற்ற மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வது கிறிஸ்தவத்தின் தலையாய பண்புகளில் ஒன்று. உயிர்த்த இயேசுவைக்கண்ட சீடர்களின் வாழ்வும் இதை மையமாக வைத்தே இருந்தது. தாங்கள் அனுபவித்த இயேசுவை, நற்செய்தியின் மகத்துவத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சீடர்கள், எவ்வளவோ துன்பங்களைத்தாங்கிக்கொண்டு ஆண்டவரின் நற்செய்தியை உலகமெங்கிலும் அறிவித்தனர். நாமும் வாழ்வில் நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களையும் சென்றடையும் வண்ணம் வாழ்வோம்.

~அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.