மரியாளின் மாசற்ற இதயப்பெருவிழா

தொடக்கத்தில் மரியாளின் விண்ணேற்பு விழாவிலிருந்து, எட்டாம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனால், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பிறகு, விழாவின் நாள் மாற்றப்பட்டது. சங்கத்தில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்குப் பின் , இயேசுவின் திரு இதயப்பெருவிழாவிற்கு அடுத்த சனிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்த பக்திமுயற்சியை பரப்பிட முயற்சி எடுத்தவர் ஜாண் யூட்ஸ் என்பவர். இவர்தான் இயேசுவின் திரு இதயப்பக்தியையும் பரப்பிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர். கி.பி 1860 ல் மரியாளின் மாசற்ற இதயத்திற்கான வணக்கத்தை ஏற்படுத்தினார்.

அன்னைமரியாள் மீது மக்கள் கொண்டிருந்த பக்தி, அவரது பரிந்துரையின் மூலமாக பெற்றுக்கொண்ட பல்வேறு நலன்கள், இவற்றின் மூலமாக இந்த பக்திமுயற்சி வெகு எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் 1944 ம் ஆண்டு, இந்த திருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடும்படியாக அறிமுகப்படுத்தினார். மீட்பின் வரலாற்றில் மிகப்பெரும் பங்காற்றுவதற்கு, தனது வாழ்வையே தியாகம் செய்தவர்தான் அன்னை மரியாள். நம் அனைவருக்கும் மீட்பு கிடைப்பதற்கு ஒரு கருவியாகத்திகழ்ந்து, எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்திருக்கிறாள். அவளது வாழ்வு மாசற்ற வாழ்வு. அவளது இதயம் மாசற்ற இதயம். அவளது அன்பு தூய்மையானது.

அன்னை நமக்கெல்லாம் அன்பை நிறைவாகத்தருகிறவராக இருக்கிறார். நம்மையெல்லாம் அவளது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, நாம் அனைவருமே தந்தையாகிய இறைவனின் அழைப்புக்கேற்ற பிள்ளைகளாக வாழ, நமக்காகச்செபிக்கிறார். பரிந்து பேசுகிறார். அந்த அன்னையிடத்தில் நம்மையே ஒப்படைத்து, சிறப்பாக மன்றாடுவோம்.

 

வாழ்வு தரும் இறைவார்த்தை

அன்னை மரியாளின் வாழ்வை நாம் சற்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தால், அன்னையின் வாழ்வின் வெற்றியின் இரகசியம்: இறைவார்த்தை. அன்னை இறைவனுடைய வார்த்தைக்கு செவிமடுத்தார். அதனை தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார். அதனை தன் வாழ்வில் செயல்படுத்தினார். இதனை நம்முடைய வாழ்வோடு நாம் பொருத்திப்பார்ப்போம்.

ஒவ்வொரு நாள் திருப்பலியிலும், ஆண்டவருடைய வார்த்தை வாசிக்கப்படுகிறது, இறைவார்த்தைக்கு கவனமுடன் செவிமடுக்கிறேனா? எனக்கு படிப்பதற்கு பாடங்களே ஏராளமாக இருக்கிறது, எனக்கு விவிலியத்தை வாசிப்பதற்கு நேரமே இல்லை, எனக்கு வாசிக்கவே தெரியாது என்று, தேவையில்லாத, உண்மையில்லாத காரணங்களை சொல்லிக்கொண்டிருக்காமல், திருப்பலி நேரத்தில் வாசிக்கப்படும் வாசகங்களுக்காவது, கவனமுடன் செவிமடுக்க, அழைக்கப்படுகிறேனா? இன்றும் மூன்று வாசகங்கள் வாசிக்கப்பட்டது. ஒவ்வொரு வாசகங்களும், எதைப்பற்றிச் சொன்னது என்பதை, என்னால் சொல்ல முடியுமா? இன்றைய வாசகங்களுக்கு, நல்ல முறையில், நல்ல மனநிலையோடு செவிகொடுத்தேனா? அல்லது, வாசக வாசித்தபோது, எதைப்பற்றியாவது, சிந்தித்துக்கொண்டிருந்ததேனா? என்று, தனிப்பட்ட முறையிலே, நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம்.

இரண்டாவது, இறைவார்த்தையை தியானிக்க வேண்டும். இந்த இறைவார்த்தை எனக்கு, இன்றைய நாளுக்கு என்ன செய்தியைத்தருகிறது. என்னுடைய வாழ்க்கைக்கு இறைவன், என்ன கூறுகிறார்? நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த நாளை நான் வாழ வேண்டும் என்று கூறுகிறார்? என் வாழ்வின் நோக்கம் என்ன? என் வாழ்வில் நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்? எதற்காக இறைவன் எனக்கு, இந்த வாழ்வை தந்தார்? இதற்கான பதில்களை, நாம் இறைவார்த்தையை சிந்திக்கும்போது, பெறுகிறோம். எனவே, இறைவார்த்தையைக்கேட்டபின், சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு நாளும், நம்முடைய வாழ்வுக்கு அது வழிகாட்டுகின்ற செய்தியைத்தருகிறது. இறைவார்த்தை வாயிலாக, நம்மோடு பேசுகிற இறைவனுக்கு நான் செவிகொடுக்கிறேனா?

இறுதியாக, இறைவார்த்தையை, நம்முடைய வாழ்விலே, செயல்படுத்த இறைவன், நம்மை அழைக்கிறாhவழிபாட்டோடு நின்று விடாமல், வாசிப்பதோடு என் கடமை முடிந்தது என்று நினைத்து விடாமல், யோசிப்பதோடு, நிறுத்தி விட வேண்டும் என எண்ணி விடாமல், செயல்வீரர்களாக மாற, இன்றைய நாள் நம்மை அழைக்கிறது. செயலற்ற விசுவாசம், செத்த விசுவாசம். வழிபாட்டிலே பங்கு கொண்டு, என்னுடைய வாழ்வு இம்மியளவு மாறவில்லையென்றால், நம்மைப்படைத்த இறைவனாலும், நம்மைக் காப்பாற்ற முடியாது. வாழ்ந்து சொல்லும்போது, வார்த்தை வலிமையுள்ளதாகிறது. எனவே, நம்முடைய வாழ்க்கையிலே, ஆண்டவருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற மக்களாக, வார்த்தையை வாழ்வதற்கு முயற்சி எடுக்கக்கூடிய மக்களாக, வாழ வரம் வேண்டி இந்த பலியிலே மன்றாடுவோம். ஒரு சில வாக்கியங்களை மனப்பாடம் செய்து கொண்டு, கூட்டங்கள் சேர்த்து, பிளவுகள் உண்டாக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கிற மக்களுக்கு, உண்மையை நாம் எடுத்துச்சொல்ல துணிவு வேண்டுமென்றால், இறைவார்த்தையை கேட்போம். சிந்திப்போம். செயல்படுவோம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.